பக்கிங்ஹாம் அரண்மனை: தீவிரவாதி எனக் கருதி இளவரசர் ஆண்ட்ரூசை சுற்றி வளைத்த போலீசார்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, அவ்வப்போது அரண்மனைக்கு தாயாரைக் காண வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த வாரம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்தார்.
காலை வேளையில் பக்கிங்காம் அரண்மனையின் தோட்டத்தில் ‘வாக்கிங்' சென்றுள்ளார். ஆண்ட்ரூஸ் தோட்டத்தில் நடப்பதைப் பார்த்த லண்டன் மெட்ரோ பாலிட்டன் போலீசார், யாரோ மர்ம நபர் தோட்டத்தில் உலவுவதாக சந்தேகமடைந்தனர்.
திடீரென ஆண்ட்ரூசை சுற்றி வளைத்தனர் போலீசார். கைகளை மேலே தூக்கச் சொல்லி, ஏறக்குறைய தீவிரவாதி ரேஞ்சுக்கு அவரை சோதனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இதனால், அங்கு சிறிது நேரம் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் அரண்மனை காவலர்கள் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தி, இவர் இளவரசர் ஆண்ட்ரூ என்று விளக்கிய பின்னர் அங்கு நிலவிய பதட்டம் தணிந்தது.
தவறுதலாக நடந்த இச்சம்பவத்துக்கு லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீசார் இளவரசர் ஆண்ட்ரூவிடம் மன்னிப்பு கேட்டனர். அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட ஆண்ட்ரூஸ், சம்பவத்தை பெரிது படுத்த விரும்பவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல், பக்கிங்காம் அரண்மனைக்குள் புகுந்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாகவே அடையாளம் தெரியாமல் ஆண்ட்ரூஸ் துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப் பட்டதாக போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications