பொதுத்துறை வங்கியில் வேலை.. 500 பணியிடங்கள்! தமிழ் நல்லா தெரியுமா? உடனே விண்ணப்பிங்க
சென்னை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ் மொழி தெரிந்து இருப்பது அவசியம் ஆகும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித் தகுதி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
எஸ்பிஐ, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என நம் நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள், மாதத்திற்கு 6 நாட்கள் விடுமுறை உள்ளிட்டவை கிடைக்கின்றன.

படித்த இளைஞர்கள் பலருக்கும் பொதுத்துறை வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. இதற்காக வங்கிகள் வெளியிடும் காலிப்பணியிடங்களை எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில்தான் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடவில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு ஆகிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆப் பரோடா கிளைகளில் மொத்தம் 500 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 24 பணியிடங்கள் உள்ளன. கேரளாவில் 19 பணியிடங்களும், ஆந்திர பிரதேசத்தில் 22 பணியிடங்களும் உள்ளன.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். அதாவது, விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை பேச எழுத, தெரிந்து இருக்க வேண்டும். தமிழக்த்தில் உள்ள பணியிடத்திற்கு தமிழ் நன்கு தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 வயது நிரம்பியவர்களும் 26 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை:
ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். சென்னை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23.05.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-04/Advertisment-02-36.pdf


Click it and Unblock the Notifications
