எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. மாதம் 69 ஆயிரம் சம்பளம்.. ஐடிஐ முடித்தவர்களுக்கு அடித்தது யோகம்!
சென்னை: எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 3,588 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு வரும் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதிகள் என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படை, இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு படை பிரிவு ஆகும். நாட்டின் எல்லையோரங்களை பாதுகாக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.

எல்லை பாதுகாப்பு படை
நல்ல சம்பளம், சலுகைகளுடன் நாட்டிற்கு சேவையாற்ற முடியும் என்பதால் எல்லை பாதுகாப்புப் படை பணியில் சேர வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 3,588 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு என்ன? போன்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
தையல்காரர், தச்சர், பிளம்பர், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், குக், தூய்மை பணியாளர், பம்ப் ஆபரேட்டர் உள்ளிட்ட பிரிவு பணிகளில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 3,588 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
கல்வித் தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது பிளம்பர் பணிக்கு ஐடிஐ பிரிவில் சம்பந்தப்பட்ட பிரிவை எடுத்து படித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.. பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். அதாவது, எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் 30 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 28 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் ஊதிய கமிஷன் லெவல் 3 படி ரூ. 21 ஆயிரத்து 700 முதல் ரூ.69 ஆயிரத்து 100 வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறையை பொறுத்தவரை
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வம் இருக்கக் கூடிய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பெண்கள், எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்களுகு ரூ.147.20 கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது. ஆன்லைன் வழியிலேயே கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 26.07.2025 ஆகும்., விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 25.8.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://rectt.bsf.gov.in/












Click it and Unblock the Notifications