இனி அவ்வளவு எளிதாக.. டீ, காபி பிரேக் எடுக்க முடியாது? காக்னிசென்ட் ஆரம்பித்த பயங்கர திட்டம்.. போச்சு
சென்னை: காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக புதிய கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப கட்டமாக சில ஊழியர்களிடம் இந்தத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மவுஸ் மற்றும் கீபோர்டு செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம் ஊழியர்கள் செயலற்று இருப்பதை, அதிக நேரம் பிரேக் எடுப்பதை இந்த நிறுவனம் கண்டறிய முடிவு செய்துள்ளது.
நாஸ்டாக் குறியீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள காக்னிசென்ட், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்படுவதை ஆராய்ந்து வருகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ProHance போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகள் குறித்து நிர்வாகிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பணியைத் தொடங்கியது. இதன் மூலம், ஊழியர்களைத் தீவிரமாக கண்காணிக்கும் நடைமுறையை நிறுவனம் தொடங்கியுள்ளது.

காக்னிசென்ட் திட்டம்
இந்த பயிற்சித் திட்டத்தின்படி, ஊழியர்கள் எவ்வளவு நேரம் மவுஸ் அல்லது கீபோர்டைப் பயன்படுத்த வேண்டும், மேலும் சிஸ்டத்திலிருந்து எவ்வளவு நேரம் விலகி இருக்கலாம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. 300 வினாடிகளுக்கு மேல் மவுஸ் அல்லது கீபோர்டு செயல்பாடு இல்லாவிட்டால், அந்த ஊழியர் "செயல்பாடற்றவர்" என்று கணக்கிடப்படுவார் என அறிக்கை குறிப்பிடுகிறது.
இதேபோல், ஒரு ஊழியரின் கணினி 15 நிமிடங்கள் செயலற்று இருந்தால், அவர் "சிஸ்டத்திலிருந்து விலகி மற்ற நடவடிக்கைகளில்" ஈடுபடுவதாகக் குறிக்கப்படும். இந்த நேர வரம்புகள் குறிப்பிட்ட குழுக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டவை.
இந்த பயிற்சி எத்தனை ஊழியர்களுடன் பகிரப்பட்டது, ProHance தவிர வேறு கருவிகள் இதில் பயன்படுத்தப்படுகின்றனவா, அல்லது இது எப்போது நிறுவனம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எவ்வளவு நேரம் விலகி இருக்கலாம்
தற்போதைய நிலவரப்படி, இந்தக் கருவிகள் ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இது சோதனை நிலையிலேயே உள்ளது. இந்தத் திட்டம் எப்போது முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்பது குறித்து காக்னிசென்ட் நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
ProHance மற்றும் Sapience போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகள், ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கப் பயன்படுகின்றன. இதில் சிஸ்டத்தில் செலவழித்த நேரம், திட்ட இணையதளங்களில் செலவழித்த நேரம் மற்றும் ஓய்வு நேரம் ஆகியவை கண்காணிக்கப்படும்.
களமிறக்கப்பட்ட ProHance
ProHance வலைத்தளத்தின்படி, பிரிட்டிஷ் சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோ, இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ லிமிடெட், அதன் துணை நிறுவனமான ஃபர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசாலே ஐபி, இன்க்., (ஜேஎல்எல்) போன்ற நிறுவனங்கள் ProHance-ஐப் பயன்படுத்துகின்றன. தற்போது காக்னிசென்ட்டும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் ஐடி துறையில் பல ஊழியர்கள் நீக்கப்பட்டு வரும் நிலையில், காக்னிசென்ட் நிறுவனம் புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பணியிடங்களை மாற்றியமைக்கும் சூழலில், காக்னிசென்ட் புதிய பணியாளர்களை அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது.
இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு கல்லூரி படிப்பை முடித்த இளம் பட்டதாரிகளைப் பணியமர்த்த இருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் எஸ் தெரிவித்துள்ளார். "ஒரு கல்லூரிப் பட்டதாரிக்குத் தேவையான கருவிகளைக் கொடுத்து, அவர்களது திறனுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வைக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு மனித ஆற்றலை அதிகரிக்கும் ஒரு கருவி; இது வேலைகளை நீக்கும் ஒரு உத்தி அல்ல. அதனால் புதிய ஊழியர்களை நாங்கள் பணிக்கு எடுக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் கொடுத்து அவர்களுக்கு பணி செய்ய நல்ல சூழலை வழங்குகிறோம்," என்று காக்னிசென்ட் நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications