11 ஆண்டுகளாக ஏக்கம்.. ஒருவழியாக முடிவிற்கு வருகிறது.. உயருகிறது பென்ஷன் தொகை.. மோடி சிக்ஸர்?
சென்னை: ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த மிகப்பெரிய சலுகையை 11 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு வெளியிட உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), EPS-95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ₹1,000 இலிருந்து ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து விவாதிக்க உள்ளது.
இந்த முக்கிய விவாதம், பெங்களூருவில் அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் நடைபெற உள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வுக்கான முன்மொழிவு இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

₹1,000 குறைந்தபட்ச ஓய்வூதியம்
தற்போதைய ₹1,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் 2014-ல் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக கணிசமான உயர்வுக்கு கோரி வருகின்றன. ₹1,000 என்பது வாழ்வதற்கு போதுமானதல்ல என்று வாதிடுகின்றன.
சில தொழிற்சங்கங்கள் ஓய்வூதியத்தை ₹7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரினாலும், EPFO வாரியம் ₹2,500 ஆக உயர்த்தும் மிதமான திருத்தத்தை பரிசீலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இறுதி முடிவு அரசு ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வரும்.
அரசின் இறுதி முடிவு
EPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை முடித்து, 58 வயதை எட்டியவர்கள் தகுதி பெறுவார்கள். சேவையில் இருந்து முன்கூட்டியே விலகுபவர்கள், தங்கள் திரட்டப்பட்ட ஓய்வூதியத்தை திரும்பப் பெறலாம் அல்லது குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற தேர்வு செய்யலாம்.
ஓய்வூதிய உயர்வு தவிர, CBT கூட்டத்தில் EPFO 3.0 திட்டமும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். இந்த லட்சியத் திட்டம் EPFO அமைப்பை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கவும், காகிதமில்லா அமைப்பாக மாற்றவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ATM வழியாக PF பணத்தை நேரடியாக எடுப்பது, UPI மூலம் உடனடி பணத்தை பெறுவது, விரைவான தீர்வு, ஆன்லைன் இறப்பு உரிமைகோரல்களைச் செயல்படுத்துதல் மற்றும் தானியங்கு தரவு ஒருங்கிணைப்பு ஆகியவை இதில் அடங்கும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடங்கும்
இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு மட்டுமின்றி, முதலீட்டுக் கொள்கைகள், நிதி கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இது அங்கீகரிக்கப்பட்டால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்பதால், அக்டோபர் 10-11 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தின் மீது அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
EPFO-வில் சில மாற்றங்கள்
EPFO-வில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எளிதாக எடுக்க முடியும். தற்போதுள்ள சிக்கலான முறையைத் தவிர்த்து, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் உறுப்பினர்களுக்குப் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகள், வருங்கால வைப்பு நிதி (PF) விவரங்களை அணுகுவதையும், PF கணக்குகளை மாற்றுவதையும் எளிதாக்குகின்றன.
இத்தனை காலமாக EPFO பக்கத்தை அணுகுவது கடினமாக இருந்தது. அப்படியே உள்ளே சென்றாலும் பல சேவைகளை பெற முடியாது. பெரும்பாலும் EPFO பக்கம் இயங்காமல் இருக்கும். EPFO அவ்வளவு எளிதாக அணுக கூடியதாக இல்லை. இதைதான் மாற்றும் வகையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
முக்கியமாக, 'Passbook Lite' சேவை மூலம் PF இருப்பை விரைவாகச் சரிபார்க்க முடியும். அத்துடன், வேலை மாறுபவர்களுக்கு அத்தியாவசியமான 'Annexure K' பரிமாற்றச் சான்றிதழை ஆன்லைனில் அணுகும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, புகார்களைக் குறைத்து, PF தகவல்களைப் பெறுவதை எளிமையாக்கும்.












Click it and Unblock the Notifications