அரசு பஸ்சில் டிரைவர் & கண்டக்டர் வேலை.. 3,274 பணியிடங்களுக்கு தேர்வு.. ரிசல்ட் எப்போது? வெளியான அப்டேட்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 22 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் இதற்கான ரிசல்ட் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் வாயிலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். போக்குவரத்து கழகத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும்.

அந்த வகையில் 3,274 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. சென்னை எம்.டி.சி எனப்படும் மாநகர போக்குவரத்து கழகத்தில் 361, விழுப்புரம் 322, கும்பகோணம் 756, சேலம் 486, கோவை 344, மதுரை 322, நெல்லை 362 என மொத்தம் 3,274 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிரைவர் மற்றும் கண்டக்டர் (டி&சி) பணிக்கு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் உள்ள 3,274 பணியிடத்திற்கு 22 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இது மட்டும் இன்றி மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்தும் தகுதியான நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 24 வயது நிரம்பியவர்கள் முதல் அதிகப்படியாக 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஓட்டுநர் உரிமம் ஹெவி கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 15 மையங்களில் தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு, செயல் திறன் தேர்வு அடிப்படையில், தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதி, பொது அறிவு, திறனறிவு தேர்வு உள்ளிட்ட வினாக்கள் இடம் பெற்று இருந்தன.
மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. தேர்வு அண்மையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு போல இன்றி எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் ஒரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நேர்முகத்தேர்வு இன்றி பணியாளர்கள் நியமனம் நடைபெற்றால் தேர்வு முறையில் வெளிப்படத்தன்மை இருக்கும் என்று தேர்வு எழுத பெரும்பலான தேர்வர்கள் கூறுவதை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications