குரூப் 4 தேர்வு.. பிஎஸ்டிஎம் சான்றிதழ் எந்த ஃபார்மட்டில் இருக்கனும்? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
சென்னை: சமீபத்தில் நடந்த குரூப் 4 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்பட உள்ளனர். இந்த நிலையில், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு கோரியுள்ளவர்கள், பிஎஸ்டிஎம் எனப்படும் தமிழ் வழி கல்வி சான்றிதழ் எந்த ஃபார்மட்டில் இருக்க வேண்டும் என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் அதிக அளவு எதிபார்ப்புக்கும் தேர்வாக குரூப் 4 தேர்வு உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இந்த குரூப் 4 பணியிடங்களுக்கு முதுகலை பட்டம் பெற்றவர்கள் கூட விண்ணப்பிக்கிறார்கள். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது.

20 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில், சுமார் 15 லட்சம் பேர் தேர்வு எழுதினர். குரூப் 4 தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 28 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதோடு காலிப்பணியிடங்களும் அதிகரிக்கப்பட்டது. குரூப் 4- ல் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. தேர்வு முடிவுகள் 92 நாட்களில் வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி, தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கட் ஆப் பெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 10 நாட்கள் அனுமதி வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதேபோல, தேர்வர்கள் மனதில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு டிஎன்பிஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
அந்த வகையில், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு கோரியுள்ளவர்கள், பிஎஸ்டிஎம் எனப்படும் தமிழ் வழி கல்வி சான்றிதழ் எந்த பார்மட்டில் இருக்க வேண்டும் என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறுகையில், "தமிழ் வழியில் கல்வி பயின்றோர் என உரிமை கோரும் தேர்வர்கள் அறிவிக்கை எண் 01/2024 பிற்சேர்க்கை II - இல் உள்ள படிவத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வர்கள் சான்றிதழில் தங்களுடைய பெயர், வகுப்பு / பட்டம் பயின்ற ஆண்டு ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் சான்றிதழை, அறிவிக்கையில் குறிப்பிட்டவாறு உரிய அலுவலரிடம் பெறப்படதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் இணையவழியில் பெறப்படாத சான்றிதழில் கல்வி நிறுவனத்தின் அலுவலக முத்திரை மற்றும் நாள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications