இந்தியன் வங்கியில் 1,500 காலிப்பணியிடங்கள்.. தமிழ் மொழி தெரிந்தால் ஜாக்பாட் தான்.. தேதி முடிய போகுது
சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் 1,500 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் 277 பணியிடங்களை நிரப்பவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். நாளை தான் விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.

1,500 காலிப்பணியிடங்கள்:
நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 1,500 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் 277 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதேபோன்று, புதுவை - 9 பணியிடங்கள், தெலுங்கானா 42 பணியிடங்கள், கேரளா 44 பணியிடங்கள், ஆந்திர பிரதேசம் 82 பணியிடங்கள், கர்நாடகா 42 பணியிடங்கள், குஜராத் 35 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு என்ன?
டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 01.04.2021- க்கு முன்பாக டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பை பொறுத்தவரை 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதன்படி, எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை எப்படி?
சம்பளத்தை பொறுத்தவரை மெட்ரோ / நகர்ப்புறங்களில் உள்ள வங்கி கிளைகளில் பணி அமர்த்தப்பட்டால் ரூ. 15 ஆயிரம் சம்பளமும், ஊரகம், மற்றும் சிறுநகரங்களில் பணி அமர்த்தப்பட்டால் ரூ. 12 ஆயிரமும் சம்பளம் வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தான் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்து தேர்வானது தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி, வேலூர், கோவை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://www.indianbank.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை ரூ. 800 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் ரூ. 175 ஆகும். விண்ணப்பிக்க நாளை வியாழக்கிழமை தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.indianbank.in/career/ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications