தாங்கள் உருவாக்கிய ஏஐ மூலமே.. வேலையை இழந்த மைக்ரோசாப்ட் பணியாளர்கள்.. ஐடி துறையே ஆடிப்போச்சு
டெல்லி: உலகம் எங்கும் ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளில், பெரிய நிறுவனங்கள் ஏஐ வருகையை காரணம் காட்டி, ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் கடுமையான பணி இழப்புகள் நடந்து உள்ளன.
மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய மென்பொருள் பொறியாளர்களை கடுமையாக பாதித்துள்ளன. அதிலும் அவர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் பணி நீக்கத்திற்கு காரணமாக மாறி உள்ளது. அந்த நிறுவனம் AI-சார்ந்த கோடிங் முறைக்கு தற்போது தீவிரமாக மாறி வருகிறது.
மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் உலகளவில் சுமார் 6,000 ஊழியர்களைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. வாஷிங்டன்னில் மட்டும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பணிநீக்கங்கள் நடந்து உள்ளன. முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக மாறி உள்ளதாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கோடிங் பணிகளை செய்யும் வகையில் சில ஏஐ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்த ஏஐ கட்டமைப்புகள் ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு காரணமாக மாறிவிட்டது. அதாவது கோடிங் செய்பவர்கள், அதை டெஸ்டிங் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.

400 பொறியாளர்களை மேற்பார்வையிடும் மைக்ரோசாப்ட் துணைத் தலைவரான ஜெஃப் ஹல்ஸ், தனது குழுவிடம் OpenAI மூலம் இயங்கும் சாட்பாட்களைப் பயன்படுத்தி கோடிங் செய்யப்படும் கூறி உள்ளாராம். அவர்களின் குறியீட்டில் 50 சதவீதம் வரை ஏஐ மூலம் உருவாக்க உத்தரவிட்டு உள்ளார். இது பொதுவான 20-30 சதவீத AI பங்களிப்பை அதிகம் ஆகும். இதனால் மீதம் உள்ள பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்களாம்.
ஏஐ செய்யும் கோடிங் நன்றாக இருந்த காரணத்தால்.. prombt கொடுக்க மட்டும் பொறியாளர்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளதாம் அந்த நிறுவனம். இப்படி பல ஆயிரம் பேர்களை அடுத்தடுத்து அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி வருகிறது. இந்த பொறியாளர்கள் தாங்கள் அறியாமலேயே தங்களின் சொந்த வேலை இழப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டார்கள்.
பணிநீக்கங்கள் ஜூனியர் பொறியாளர்களை மட்டும் குறி வைக்கவில்லை. எச்.ஆர் மேலாண்மை, தொழில்நுட்ப ப்ரொஜெக்ட் மேலாண்மைப் பணிகளில் உள்ள ஊழியர்களும், AI காரணமாக பணிகளை இழந்து உள்ளார்களாம். பிபிடி செய்து வந்தவர்கள், டேட்டா பணிகளை செய்து வந்தவர்களும் வேலைகளை இழந்து உள்ளார்களாம்.
ஐடி துறை வீழ்ச்சி
ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.
ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது . ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏஐ வருகை காரணமாக ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்புகள், முக்கியமாக ஜூனியர் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications