ரேஷன் கடை வேலைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா.. நல்ல செய்தி.. அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைக்கு காலிப்பணியிடத்தேர்வுக்கான அனுமதி சீட்டை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கலாம். விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும், கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 29-ந்தேதியும் திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆக உள்ளது. பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆக இருக்கிறது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன.

இந்த ரேஷன் கடைகளில் பல ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தான் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கைரேகை பெற்று சரியான அளவுகளில் வழங்கி வருகிறார்கள். அதேபோல் அவ்வப்போது அரசு அறிவிக்கும் ரொக்கப்பரிசு, பொங்கல் பரிசு போன்ற பணிகளையும் ரேஷன் கடை பணியாளர்கள் செய்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அந்தந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 7ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
சம்பளம் எப்படி: விற்பனையாளர் பணிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். கட்டுநர் பணிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: விண்ணப்பதார்களின் 10 மற்றும் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இட ஒதுக்கீடு மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவர். கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு ஒதுக்கீடு முறையில் ரேஷன் கடைகளில் பணி நியமனம் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவட்ட வாரியாக நேர்முகத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் 86 விற்பனையாளர் மற்றும் 49 கட்டுநர் பணியிடங்கள் உள்ளது. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும், கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 29-ந்தேதியும் திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற உள்ளது. எனவே, நேர்முகத் தேர்விற்கான அனுமதிச் சீட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் திருப்பூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்திலிருந்து (www.drbtiruppur.net) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் நேர்முகத் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, முன்னுரிமைத் தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் சான்றிதழ்கள், சுயஒப்பமிட்ட இரு நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவில் புகைப்படம்-2 மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ரசீது நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்" மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications