இதாங்க படிப்பின் பவர்! துப்புரவு தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்தாச்சு கமிஷனர்! மாஸ் மன்னார்குடி

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: என்னுடைய தாத்தா , அப்பா, எல்லாருமே வழிவழியாக துப்புரவு பணியாளராக இருந்தார்கள்.. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. துப்புரவு பணியாளர் என்ற அடையாளத்தை என் குழந்தைகளுக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று மன்னார்குடி நகராட்சி ஆணையாளரான தூய்மை பணியாளர் மகள் துர்கா தெரிவித்துள்ளார்.

கல்வி ஒருவருக்கு என்ன செய்யும் என்பதற்கு பதிலைத்தான் மன்னார்குடி நகராட்சி ஆணையாளராக மாறி உள்ள தூய்மை பணியாளர் மகள் துர்கா கூறியுள்ளார்.. ஆம்..கல்வி ஒருவரின் அடையாளத்தை மாற்றும்.. சலவை தொழிலாளியின் மகள், தூய்மை பணியாளரின் மகன், முடிதிருத்தும் தொழிலாளியின் மகன், பானை செய்வோரின் மகன் என காலம் காலமாக கூலித்தொழிலாளியாக வேலை செய்பவர்களின் அடையாளத்தை கல்வி மாற்றுகிறது. துர்கா வேண்டுமானால் தூய்மை பணியாளரின் மகளாக இருக்கலாம்.

jobs tnpsc group 2

ஆனால் துர்காவின் மகள்கள், யார் என்ற அடையாளம் எப்படி இருக்க போகிறது தெரியுமா? நகராட்சி ஆணையாளரின் மகள், மாநகராட்சி ஆணையாளரின் மகள், மிகப்பெரிய அரசு அதிகாரியின் மகள் என்ற அடையாளத்தையே மாற்றி உள்ளது. கல்வி என்பது காலம் காலமாக குலத்தொழில் செய்பவர்களின் மகள் என்ற அடையாளத்தை மாற்றி வருகிறது.

இன்று பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த நிறைய பேர் அரசு அதிகாரிகளாகவும், மிகப்பெரிய ஐடி நிறுவனங்களின் அதிகாரிகளாகவும், டாக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும், ஐஏஎஸ் அதிகாரிகளாகவும், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும், வருமான வரித்துறை அதிகாரிகளாகவும், வங்கி அதிகாரிகளாகவும், அரசு பள்ளி ஆசிரியர்களாகவும் மாறுவதற்கு கல்வி தான் காரணமாக உள்ளது. அதைத்தான் பரம்பரை பரம்பரையாக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த சேகருக்கு மகளாக பிறந்த துர்கா என்பவர் மாற்றி உள்ளார். இந்த மாற்றத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும். மன்னார்குடி நகராட்சி ஆணையாளர் துர்காவை பற்றி பார்ப்போம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் தான் துர்கா மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக சேகர் வேலை செய்து வந்தார். வறுமையில் சிறுவயது முதலே வாழ்ந்து வந்த சேகர் தனது ஒரே மகளான துர்காவை பல்வேறு அவமானங்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார்.

அதன்பின்னர் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் துர்காவை பிஎஸ்சி இயற்பியல் படிக்க வைத்துள்ளார். பின்னர் அரசு வேலையில் சேர வைக்க விரும்பி உள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக 21 வயது இருக்கும் போதே, மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு தனது மகள் துர்காவை திருமணம் செய்து கொடுத்தார். எனினும் தனது மகளை அரசு அதிகாரியாக்க ஆசைப்பட்ட சேகர், தனது மகளை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுமாறு ஊக்கப்படுத்தியே வந்துள்ளார்.

இதனிடையே திருமணத்திற்கு பின் துர்காவின் கணவர் நிர்மல் குமாரும் துர்கா மற்றும் அவரது அப்பா சேகரின் கவனவை நிறைவேற்ற விரும்பினார். அவர் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். நிர்மல் குமாருக்கும் துர்காவிற்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். துர்காவின் கனவு அரசு ஊழியர் ஆக வேண்டும் என்ற கனவை அறிந்த கணவன் நிர்மல் குமார் , அவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயராகுமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.

கணவர் மற்றும் தந்தையின் உற்சாகத்தால், கடந்த 2016 ல் குரூப் 2 தேர்வினை முதல் முறையாக எழுதி இருக்கிறார் துர்கா. ஆனால் தோல்வி அடைந்துள்ளார். எனினும் துர்கா மனம் தளராமல், 2020ல் மீண்டும் குரூப் ஒன் தேர்வு எழுதி உள்ளார். அதில் முதல்நிலை தேர்வு வரை வென்றவர், முதன்மை தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார். ஆனாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதினார் துர்கா. இரண்டு குரூப் 4 தேர்வுகளை எழுதி தோற்ற துர்கா, கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பின்னர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்விலும் துர்கா வெற்றி பெற்றார்.

இறுதியாக 2024 ல் நடந்து முடிந்த நேர்முகத் தேர்வில் வெற்றி 30க்கு 30 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற துர்கா தற்போது மன்னார்குடி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் அவரை அரசு ஊழியர் ஆக்க விரும்பிய அவரது தந்தை சேகர் தற்போது உயிருடன் இல்லை. தூய்மை பணியாளர் சேகர் ஆறு மாதம் முன்பே இறந்து போனார்.

இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி ஆணையாளர் துர்கா அளித்த பேட்டியில் கூறுகையில், "என்னுடைய தாத்தா , அப்பா, எல்லாருமே வழிவழியாக துப்புரவு பணியாளராக இருந்தார்கள்.. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. துப்புரவு பணியாளர் என்ற அடையாளத்தை என் குழந்தைகளுக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுதி எப்படியாவது அரசு ஊழியர் ஆக விரும்பினேன்..

அரசு தேர்வுகளில் வென்று நல்ல போஸ்டிங் போக வேண்டும் என்று தேர்வு செய்தேன்.. 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். பின்னர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்விலும் வெற்றி பெற்றேன்.. அதன்பிறகு நேர்முகத்தேர்விலும் வென்று தேர்வானேன்.. நேர்முகத்தேர்வில் எஸ்பிசிஐடி போஸ்டிங் எனக்கு முன்னிலை தந்தார்கள்..

நான் அதில் டாப்பில் இருந்த போதிலும், அந்த போஸ்டிங்கிற்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு முனிசபல் கமிஷ்னர் போஸ்டிங்கை நான் தேர்வு செய்தேன்.. நான் ஒரு இல்லத்தரசியாக இருந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு வேலைக்கு வந்திருக்கிறேன் என்கிற போது, கண்டிப்பாக எல்லாராலும் நிச்சயம் முடியும்.. தொடர்ந்து படித்தால் எல்லாராலும் அரசு ஊழியராக அல்ல.. அரசு அதிகாரியாகவே கண்டிப்பாக ஆக முடியும்.." இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+