நாடு முழுக்க உள்ள காலியிடங்களை நிரப்பும் எஸ்பிஐ.. வெளியானது மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு
சென்னை: பாரத ஸ்டேட் வங்கி இப்போது ப்ரோபேஷனரி அதிகாரி காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி வங்கியில் காலியாக இருக்கும் 600 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த காலியிடங்கள் எப்படி நிரப்பப்படுகிறது, இதற்கான கல்வித் தகுதி என்ன, முக்கிய தேதிகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல கோடி இளைஞர்கள் முயன்று வருகிறார்கள். இந்த தேர்வுக்குத் தனியாகவும் தயாராகி வருகிறார்கள்.

அப்படி அரசு தேர்வுக்குத் தயாராவோரில் பெரும்பாலானோர் வங்கி தேர்வுகளுக்கே தயாராகி வருகிறார்கள். நிம்மதியான வேலை, அதிகப்படியான பணியிட மாறுதல்கள் வராது என்பதால் வங்கியில் வேலைக்குச் சேர பலரும் விரும்புகிறார்கள். இதற்கிடையே இப்போது எஸ்பிஐ தனது வங்கியில் ப்ரோபேஷனரி அதிகாரி காலியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 600 காலியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், இதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்து நாம் பார்க்கலாம்.
எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்:
இந்த காலியிடங்களுக்கு இன்று டிசம்பர் 27, 2024 முதல் விண்ணப்பிக்கலாம். வரும் ஜனவரி 16 இதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வுக்கான கால் லெட்டரை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 3வது அல்லது 4வது வாரம் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அடுத்தாண்டு மார்ச் 8ம் தேதி ஆன்லைன் முதல்நிலை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள்
இந்தாண்டிற்கான காலியிடங்களாக 586 இடங்கள் உள்ளன. கடந்த காலங்களில் நிரப்பப்படாமல் (Backlog Vacancies) 14 இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 600 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.. அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டத்திற்கு இணையான கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
இதில் கல்லூரியில் இறுதியாண்டு/ இறுதி செமஸ்டரில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.. ஆனால், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் போது.. மார்ச் 30, 2025க்குள் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த வங்கி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏப்ரல் 1, 2024ம் தேதி 21 வயதுக்கு உட்பட்டவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 01.04.2003க்கு முன்பும் 02.04.1994க்கு பிறகும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்:
ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணியிடத்திற்கு 3 தேர்வுகள் நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்படும். இதில் முதலில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். அதில் தேவையான கட் ஆஃப் பெறுவோருக்கு அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு இறுதியாக சைக்கோமெட்ரிக் தேர்வு, மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.
முதல்நிலை தேர்வு 100 மதிப்பெண்களுக்கான அப்ஜெக்டிவ் தேர்வாக ஆன்லைனில் நடத்தப்படும். முதன்மைத் தேர்வும் ஆன்லைனில் நடத்தப்படும்.. அதில் 200 மதிப்பெண்களுக்கான அப்ஜெக்டிவ் கேள்விகளும் 50 மதிப்பெண்களுக்கு விளக்கமான பதில் எழுதக்கூடிய கேள்விகளும் இருக்கும். இந்த இரண்டு தேர்வுகளில் பாஸ் செய்வோருக்கு ஆளுமைத் திறனைச் சோதிக்கும் வகையில் சைக்கோமெட்ரிக் தேர்வு நடத்தப்படும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
முன்னேறிய பிரிவினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினர்/ ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ₹750/ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திவிட்டால் அது எதற்காகவும் திரும்பத் தரப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications