பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு! டிஆர்பி கொடுத்த ஸ்வீட் அப்டேட்
சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதலில் 2,222 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து கூடுதலாக 360 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது மேலும் 610 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் போட்டி தேர்வு மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம்(TRB) நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், பிற துறை பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பாடவாரியாக தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, இயற்பியல் 293, வேதியியல் 290, தாவரவியல் 131, விலங்கியல் 132, வரலாறு 391, புவியியல் 106 என மொத்தம் 2,222- பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது.
இதனைத்தொடர்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை 25.11.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்க கல்வி டிப்ளமோ அல்லது பி.எட். முடித்திருக்க வேண்டும். அல்லது 12-ஆம் வகுப்பு , 4 ஆண்டு ஒருங்கிணைந்த தொடக்க கல்வி ஆசிரியர் கல்வியியல் முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பணியிடங்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 130 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இந்த தோ்வை சுமார் 41 ஆயிரம் பேர் எழுதினர். இந்த தேர்வு எழுதிய அனைவரும் ஆசிரியா் தகுதித் தோ்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் 2023- 2024 ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை கடந்த நவம்பர் மாதம் (25.11.2023 ) அன்று வெளியிடப்பட்டது. மேலும் 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரிய தேர்வு வாரிய இணையதளம் (website: http://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறை முன்னாள் ஆணையர் தரவுகளின் படி 13,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதற்கட்டமாக 3,192 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications