பாதி வழியில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள்! நடந்தது என்ன?
அரியலூர்: அரியலூர் அருகே குரூப் 4 தேர்வர்கள் பாதி வழியில் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஏஓ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர் உள்ளிட்ட 6244 காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக பலர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் அரியலூர் அருகே முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் தேர்வர்கள் ஏறியதை அடுத்து அவர்கள் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற விரைவு ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பதிவு செய்த பெட்டிகளில் 50-க்கும் மேற்பட்டோர் ஏறினர். அவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் என தெரியவந்தது. இந்த நிலையில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில் அருகே அவசர சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
ரயில்வே காவலர்கள் ஏதோ அசம்பாவிதமோ என நினைத்து அங்கு வந்தனர். அப்போது யார் அபாய சங்கிலியை இழுத்தார்களோ அவர்களிடம் விசாரித்தனர். அப்போது முன் பதிவு செய்தோர், முன் பதிவு பெட்டிகளில் ஏறியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் குரூப் 4 தேர்வுக்காக சொந்த ஊர்களுக்கு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மங்களூர், ராமேஸ்வரம் ரயில்களில் போலீஸார் ஏற்றிவிட்டனர். மேலும் இது போன்று தேர்வு காலங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்பட்டன. குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்பதுதான். ஆனாலும் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர் கல்வி தகுதி பெற்றவர்கள் உள்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் தகுதியானவர்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை3 மணி நேரம் நடைபெறுகிறது.
தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வுக் கூடத்திற்கு சென்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்தபடி, குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் 2025, ஜனவரி மாதம் வெளியிடப்படும். குரூப் 4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றால் அரசு வேலை கிடைக்கும். குரூப் 4 தேர்வை தொடர்ந்து ஒருங்கிணைந்த குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 28ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications