குரூப் 2 தேர்வு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மேஜர் அறிவிப்பு.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: குரூப்-2 எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வு சான்றிதழ்களை ஜனவரி 27-க்குள் பதிவேற்ற வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்-2 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது. அதாவது சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர் உள்ளிட பணிகளில் வரும் நேர்முகத் தேர்வுடன் கூடிய 116 குரூப்-2 பதவிகளிலும், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அல்லாத 5 ஆயிரத்து 413 குரூப்-2ஏ பதவிகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.
முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. இதனிடையே குரூப்-2, 2ஏ பதவிகளில் சில பணியிடங்கள் சேர்த்தும், சில இடங்களை குறைத்தும் டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவு கடந்த வாரம் வெளியானது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் நேர்முகத் தேர்வுக்கு 483 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது 161 இடங்களுக்கு 483 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்படி பார்க்கையில் குரூப்-2 பதவிகளுக்கான ஒரு இடத்துக்கு 3 பேர் போட்டியில் உள்ளார்கள். தற்போது வெற்றி பெற்றுள்ளவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன விதிகள், நிபந்தனைகள் அடிப்படையில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று முன்தினம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், "குருப்-2 தேர்வில் (நேர்முகத்தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் குறைபாடாக பதிவேற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், அவர்கள் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜனவரி 27-ம்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இத்தககவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு கூறியுள்ளார். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்து தேர்வில் வென்றவர்கள், உடனே தவறவிட்ட அல்லது பதிவேற்றம் செய்ய மறந்த சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது நல்லது.
குரூப்-2ஏ பதவி எப்படி: இதனிடையே 5 ஆயிரத்து 990 இடங்களுக்கான குரூப்-2ஏ பதவிகளுக்கும் தேர்வு முடிவு அண்மையில் வெளியானது, அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து முதன்மைத் தேர்வை எழுதியவர்களில் அடுத்தகட்டமாக கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 14 ஆயிரத்து 975 பேர் தகுதியானவர்கள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-2 நேர்முகத் தேர்வு பணிகள் முடிவடைந்த பின்னரே குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நேர்முகச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளதாம்.












Click it and Unblock the Notifications