Village Assistant jobs: கிராம உதவியாளர் தேர்வு திடீர் நிறுத்தி வைப்பு.. ஷாக் ஆன தேர்வர்கள்.. காரணம் இதுதான்!
சென்னை: கிராம உதவியாளர் (Village Assistant posts) பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக மொத்தம் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி அதற்கான எழுத்து தேர்வு, நேர்காணல்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது தேர்வானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக அரசு மாவட்ட ரீதியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தது. இதன்படி மாவட்ட வாரியாக கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

குறிப்பாக சென்னை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாக இணையதளங்களில் வெளியிடப்பட்டன. மொத்தம் தமிழகம் முழுக்க 2,299 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் உள்ளூர் அளவில் அறிவிக்கப்படும் தகுதிகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடைபெறும்.
சம்பளம் எவ்வளவு?
கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 6-இன் கீழ் மாதம் ரூ.11,000 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு
01.09.2025 படி குறைந்தபட்ச வயது - 21 வயது ஆகும். அதிகபட்ச வயது 32 (அனைத்து பிரிவினருக்கும்) (இதர வகுப்பினர் - 37 வயது - பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் /பட்டியலினத்தவர் / பழங்குடியினர். மாற்றுத்திறனாளிகளுக்கு - அதிகபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும்.
பிறதகுதிகள்
1. விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
2. தமிழில் பிழையின்றி வாசித்தல் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த அக்கிராம பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
5. மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
6. விண்ணப்பதாரர் மீது எவ்வித வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது.
தேர்வு முறை
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கட்டாயமாக தமிழில் பேசவும், எழுதவும், வாசிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்காக எழுத்து தேர்வு நடைபெறும். திறனறிவு தேர்வும் நடத்தப்படும். இதில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தொடர்ந்து நேர்காணல் நடைபெறும்.
மொத்தமாக கல்வித்தகுதி, தமிழ் தகுதி, இருப்பிடம், வாகனம் ஓட்டுதல், நேர்காணல் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதற்கான நடைமுறைகள் நடந்து வந்தன. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. அதற்கு பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்றும் நேர்காணல் நடைபெற்றது.
நிறுத்தி வைப்பு
இந்த நிலையில் தான் திடீரென இந்த தேர்வினை நிறுத்தி வைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் எழுத்து தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு அதிகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன்பிறகு மீண்டும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்து எழுத்து தேர்வு, நேர்காணலில் பங்கேற்ற தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்
தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய 6 வட்டங்களில் 21-09-2025 அன்று காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications