இனி கைக்கு வரும் சம்பளம் குறைய போகிறது! நாடு முழுக்க CTCல் ஏற்படும் மாற்றம்.. சம்பளதாரர்களுக்கு செக்
சென்னை: கடந்த நவம்பர் 21, 2025 அன்று அமலுக்கு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள், இந்தியாவின் வேலைவாய்ப்பு சூழலில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளன. இவை 29 பழைய சட்டங்களை ஒருங்கிணைத்து, எளிதாக்குகின்றன. இந்தச் சட்டங்கள் படிப்படியாக அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்படும். தற்போது ஒவ்வொரு தனியார் நிறுவனங்களாக இந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சீர்திருத்தங்களில், 'ஊதியம்' குறித்த பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, வருங்கால வைப்பு நிதி (PF), பணிக்கொடை (Gratuity), மற்றும் இஎஸ்ஐ (ESI) போன்ற சமூகப் பாதுகாப்புப் பலன்கள் இனி புதிய வரையறையின் கீழ் கணக்கிடப்படும். இதனால், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மொத்த ஊதிய (CTC) கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியுள்ளது.

கையில் கிடைக்கும் சம்பளம் குறையும்
புதிய வரையறை, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரின் பங்களிப்புகளை இது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மொத்த ஊதியத்தில் மாற்றம் இல்லாவிட்டாலும், சட்டப்பூர்வ பிடித்தங்கள் அதிகரிப்பதால், ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியம் சற்றுக் குறைய வாய்ப்புள்ளது.
பணம், பொருள் அல்லது படிகள் என எந்த வடிவத்திலும் வழங்கப்படும் அனைத்து ஊதியங்களும் "ஊதியம்" என்ற வரையறைக்குள் இனிமேல் வரும். சில குறிப்பிட்ட விலக்குகளைத் தவிர, இவை மொத்த ஊதியத்தில் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. இதனால் கையில் கிடைக்கும் ஊதியம் சற்றுக் குறையலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கையில் கிடைக்கும் ஊதியம் குறையும்
ஜிஐ குரூப் ஹோல்டிங்கின் இந்திய மேலாளர் சோனல் அரோரா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பிஎஃப் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான அதிக பங்களிப்புகள் காரணமாக, கையில் கிடைக்கும் ஊதியம் குறையக்கூடும். பல நிறுவனங்கள் தங்கள் மொத்த CTC ஊதியக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்து, படிகள் சார்ந்த மாதிரியிலிருந்து, ஊதியம் சார்ந்த, சமநிலையான அமைப்புக்கு மாற வேண்டியிருக்கும்.. இதனால் சம்பளம் கண்டிப்பாக குறையும் என்று கூறினார்.
புதிய விதிமுறைகள், குறிப்பாக அதிகப்படியான படிகளை ஊதியத்தில் சேர்த்திருந்த நிறுவனங்களை, தங்கள் கட்டமைப்புகளை மறு மதிப்பீடு செய்யத் தூண்டும்.
Gratuity விதிகளில் மாற்றம்
அதேபோல் Gratuity ஊதிய வரையறைகள் சீரமைக்கப்பட்டு, முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தனியார் துறை ஊழியர்களுக்கு வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 20 லட்சமாகவும், அரசு ஊழியர்களுக்கு ரூ. 25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள், இந்திய ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும், நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவைத் தவறவிட்டால், ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விதிக்கப்படும். விரைவான செயலாக்கம் மற்றும் பரந்த பாதுகாப்பு மூலம், புதிய விதிகள் ஊழியர்களுக்கு ஒரு நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைந்துள்ளன.
பணிக்கொடை விதிகள் 2025: விரிவான கண்ணோட்டம்
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 2025 ஆம் ஆண்டு பணிக்கொடை விதிகள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஊழியர்களுக்கான நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு பெரிய சீர்திருத்தமாகும். இந்த விதிகள், தகுதி அளவுகோல்களை நவீனப்படுத்தி, பணம் வழங்குவதை எளிதாக்கி, ஒப்பந்த அடிப்படையிலான மற்றும் பகுதி நேரப் பணிகள் போன்ற புதிய வேலைவாய்ப்பு வடிவங்களுக்கும் பலன்களை விரிவுபடுத்துகின்றன.
ஊழியர்களுக்கான விரிவான பாதுகாப்பு
புதிய விதிகளின்படி, பணிக்கொடை இனி நீண்டகால நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே என்ற நிலை நீங்கியுள்ளது. தற்போது, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள், டிஜிட்டல் தளப் பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என அனைவருக்கும் பணிக்கொடை பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சேவை காலத்திற்குப் பிறகு ஏற்படும் மரணம், உடல்நலக் குறைவு அல்லது ராஜினாமா போன்ற சூழ்நிலைகளுக்கும் தகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications