குழந்தை நீதி கதைகள்: பணம் செய்யும் பத்து; நல்ல நட்பே நம்ம சொத்து
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், நம்முடைய இளமை பருவத்தில் நல்ல நண்பர்கள் அருகில் இருந்தால், நம் வாழ்க்கை வளமாகும்னு ஸ்கூல நிறைய அறிவுரை சொல்லிருப்பாங்க. நான் உங்களுக்கு தீய நட்பினால் விளைந்த ஆபத்த பத்தி சொல்றேன், கேளுங்க..
ஒரு ஊரில் அன்பரசன் என்பவன் இருந்தான். பெயருக்கு தகுந்தவாறு எல்லாரிடமும் அன்பாக பழகுவான்.. நல்ல குணமும் உதவி செய்யும் மனப்பான்மையும் அவனிடம் இருந்தன. யாராவது தவறு செய்தால் தட்டிக் கேட்கும் துணிவு இருந்தது. ஏழையாக இருந்தாலும் நன் மதிப்புடன் இருந்தான், அன்பரசன்.
அதே ஊரில் தங்கதுரை, வெள்ளச்சாமி என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். செல்வந்தர்களான இவர்கள், தங்களை விட மக்களிடையே மிகுந்த செல்வாக்கு கொண்ட அன்பரசன் மீது பொறாமை கொண்டனர். அவனது புகழை கெடுப்பதற்கு நிறைய முயற்சி செய்தனர். ஆனால், அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது, மனம் புழுங்கினர். எதாவது செய்து அன்பரசனை துரத்தி அடிக்க துடியாய் துடித்தனர்.

அன்பரசனோ அவர்களுக்கு எந்த கெடுதலும் செய்ததில்லை. கனிவுடன் பழகுவான். ஆனால், கோவில் திருவிழாவாக இருந்தாலும் பொது செயல்களாக இருந்தாலும் ஊர்மக்கள் அன்பரசனுக்கே முதல் மரியாதை செய்தார்கள். இதைத்தான் அவர்களால் தாங்க முடியவில்லை. அன்பரசனை பழிவாங்க இறுதியாக பெரிய திட்டம் தீட்டினர்.
முனியப்பன் இவர்களின் நீண்ட கால நண்பன். அதே ஊரில் வசித்து வரும் ஒரு ஏழை தொழிலாளி. இவனை பகடைக்காயாக பயன்படுத்த தங்கதுரையும் வெள்ளச்சாமியும் ஆயுத்தமானார்கள்.. முனியப்பனுக்கு ஓரளவு மதிப்பு இவ்வூரில் இருந்தது. அதை பயன்படுத்தி அன்பரசனை விரட்டி அடிக்கலாம் என எண்ணினர். முனியப்பனிடம், "அடேய் நண்பா நீயும் எவ்வளவு நாள்தான் கஷ்டப்படுவாய். எங்களுக்காக ஒரு காரியம் நீ செய். உனக்கு நிறைய பணம் தருகிறோம். நீ தொழில் செய்து பிழைத்து கொள்" என்று கூறி ஒரு பணக்கட்டை அவனிடம் நீட்டினர். பணத்தை பார்த்து மயங்கிய முனியப்பனோ "என் நண்பர்களுக்கு எது வேண்டுமானாலும் செய்வேன்" என வாக்கு கொடுத்தான்.
"இந்த ஊருல எங்களை விட அந்த அன்பரசன் தான் பெரிய ஆளா திரியறான். பிச்சைக்கார பையல். எல்லாத்தையும் ஏமாத்துறான். அவன ஊரை விட்டே விரட்டனும்" என்றார்கள். முனியப்பனிடம் சில நகைகளை கொடுத்து "இத எப்படியாவது அன்பரசன் வீட்ல சேர்த்துடு. நாங்க போலீஸ்ல புகார் தருவோம். அவன புடிச்சு ஜெயில்ல போடுவாங்க. அப்போ தான் எங்களுக்கு நிம்மதி" என இருவரும் சிரித்தனர்.

முனிப்பனும் காரியத்தை செய்து முடித்தான். போலீஸ் அன்பரசன் வீட்டில் நகையை மீட்டனர். அவனிடம் விசாரணை நடத்தினர். நேர்மையான அவனது பேச்சில் போலீஸாருக்கு அன்பரசன் தவறு செய்யவில்லை எனப்பட்டது. தங்கதுரையும் வெள்ளச்சாமியும் குறுக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டனர். உண்மையை ஒப்புக் கொண்டனர்.
இவர்களின் நட்பால் முனியப்பனும் மாட்டிக் கொண்டான். பொய் வழக்கு போட்டதால் மூவரையும் போலீஸ் சிறையில் அடைத்தனர். இவர் மீது மக்கள் வெறுப்பானார்கள். அன்பரசன் மேலும் நன் மதிப்புடன் வாழ்ந்து வந்தான்.
குட்டீஸ் நீங்களும் உங்க நண்பர்களை பார்த்து தேர்ந்தெடுங்க. "நல்ல நண்பன் நம் வாழ்வில் ஒரு நல்ல வழிகாட்டி". தன் வினை தன்னை சுடும்; கூடா நட்பு ஆபத்தில் முடியும்.












Click it and Unblock the Notifications