குழந்தை நீதி கதைகள்: ஒரே புயலில் ஓகோன்னு வாழ்க்கை.. யாருக்கு மாறியிருக்கு தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஒரே புயலில் ஓகோன்னு வாழ்க்கை.. யாருக்கு மாறியிருக்கு தெரியுமா?
ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. ஒரே நாளில் உங்களுக்கு எல்லாமே கிடைக்குதுனு வச்சுக்குவோம், நீங்க என்ன பண்ணுவீங்க? இங்க ஒருத்தருக்கு புயலால் வாழ்க்கையே மாறிடுச்ச, என்னனு கதையை படிச்சு தெரிஞ்சிக்கலாமா..

அன்னைக்கு சரியான புயல், மழை.. ரோடெல்லாம் மரங்கள் சரிந்து விழுந்து கிடந்தது. ஸ்டூவர்ட் அந்த வழியாக நடந்து போய் கொண்டிருந்தான். திடீரென நன்றாக பழுத்த மாம்பழம் அவன் கண்ணில் பட சரிந்த மரத்தின் கிளையில் அது இருந்தது. உடனடியாக அதை எடுத்து சாப்பிட்டான். அவன் குட்டி வயிறுக்கு அது போதுமானதாக இருந்தது. அப்படியே நடந்தான். வழியில் அவன் நன்கு உலர்ந்து காய்ந்த குச்சி ஒன்றை பார்த்தான். அதை எடுத்து கொண்டு இதைபோல புயல் அடித்தால் நாம் கஷ்டப்பட வேண்டாம் போலயே என எண்ணிக்கொண்டு நடந்தான்.
அந்தப்பக்கம் வீட்டின் முன்னாடி ஒருவர் அழுதுகொண்டிருப்பதை பார்த்தான். சரி என்னாச்சு என்று கேட்போம் என அருகில் போனான் ஸ்டூவர்ட். அவர் ஒரு குயவர். ஸ்டூவர்ட் அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்க சத்தம் வந்த பக்கம் பார்த்தார். அவருக்கு யாரும் தெரியவில்லை. வாயில் அந்த காய்ந்த குச்சியை வைத்துக்கொண்டே இங்கே இருக்கிறேன் என்றான் ஸ்டூவர்ட். ஆமாம் அவன் ஒரு எலி.

அது அடித்த புயல் மழையால் நான் வைத்திருந்த விறகுகள் நனைந்துவிட்டன. எப்படி இந்த மண்பாண்டங்களை வேகவைப்பேன், வேகவைத்தால்தானே விற்க முடியும் என் வீட்டிற்காக வருமானம் ஈட்ட முடியும் என்றார். ஸ்டூவர்ட் உடனடியாக அந்த குச்சியை கொடுத்து இதில் நெருப்பு வையுங்கள் பிறகு அந்த சூட்டில் மற்ற விறகுகள் எரிய தொடங்கும் என்றான். அவரும் ஆமாம் கொடு என்றார். ஆனால் அதற்கு பதில் என்ன தருவீர்கள் என்று கேட்டான் ஸ்டூவர்ட். எலி தானே என்ன கேட்கும் என்று யோசிக்காமல், என்ன வேண்டுமோ என்னிடம் இருப்பதை தருகிறேன் என்றார்.
குயவன் வீட்டில் தொங்கி கொண்டிருந்த பூசணிக்காயை கேட்டான் ஸ்டூவர்ட். அதுவா அதை நீ எப்படி எடுத்து செல்வாய், வேறு எதாவது கேள் என்றார். அது நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான். அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார். ஸ்டூவர்ட் குச்சியை கொடுக்க அவரும் அந்த பெரிய பூசணிக்காயை கொடுத்தார். ஸ்டூவர்ட் அது இங்கே இருக்கட்டும் நான் பிறகு எடுத்து கொள்கிறேன் என்றான்.
மீண்டும் நடந்து சென்றான் ஸ்டூவர்ட். அந்த வழியிலேயே இன்னொருவர் சோகமாக இருப்பதை பார்த்தான். இவருக்கு என்னாச்சோ தெரியவில்லையே, என அருகில் சென்று கேட்டான். முதலில் கவனிக்காத அந்த பால்காரர், ஸ்டூவர்ட்டை பார்த்து புயல் அடித்ததால் என் மாடுகள் பயந்து இருக்கின்றன. அதனால் பால் கொடுக்க மாட்டேன்கிறது. என் குடும்பம் பசியால் வாடுகிறார்கள் நான் என்ன செய்வேன் என அழ, சரி அந்த மூலையில் இருக்கும் வீட்டில் ஒரு பூசணிக்காய் இருக்கிறது நான் சொன்னேன் என சொல்லி அதை வாங்கிட்டு வா என்றது.
அவரும் சென்று ஸ்டூவர்ட் பெயரை சொல்லி வாங்கி கொண்டு வந்தார். சரி இதை வைத்து குழம்பு செய்து சாப்பிடுங்கள். ஆனால் அதற்கு பதிலாக என்ன தருவாய் என்று கேட்க, என்ன வேணுமோ கேள் என்று குயவன் சொன்னது போலவே சொன்னான். அவ்வளவுதான் அவரிடம் இருந்து ஒரு பால் மாட்டை கேட்டான். பால்காரர் அதிர்ந்து போய் அதெப்படி நீ கொண்டு போவாய் என்று கேட்க, அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான் ஸ்டூவர்ட்.
மாட்டை பற்றி கொண்டு அதனுடன் பேசி கொண்டே செல்ல மாடும் பயம் நீங்கி ஸ்டூவர்ட்டுடன் ஜாலியாக சென்றது. சிறுது தூரத்தில் ஒரு கல்யாண வீட்டை பார்த்தான். மாட்டை கூட்டிக்கொண்டு அங்கே செல்ல கல்யாண வீடு ஏதோ களை இழந்து காணப்பட்டது. உடனே மாப்பிள்ளையிடம் என்னாச்சு ஏன் சோகம் என்று கேட்க பாயாசம் செய்வதற்கு பால் கிடைக்கவில்லையாம், அது இல்லாமல் எப்படி என்று கேட்க, சரி இந்த மாட்டை வைத்து கொள்ளுங்கள் அது கொடுக்கும் பாலை வைத்து கொண்டு இனிப்பை செய்யுங்கள் என்றது.
மணமக்கள் குஷியாக, அதற்கு பதில் என்ன தருவீர்கள் என்றான் ஸ்டூவர்ட். மணப்பெண்ணோ, என்ன வேண்டும் இங்கு நீ நன்றாக சாப்பிடு உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கொள் என்றாள். ஆனால் ஸ்டூவர்ட் குதர்க்கமாக ஒரு பொருளை கேட்டான்.
அது என்ன என்று தெரிந்துகொள்ள அடுத்தவாரம் வரை காத்திருங்கள். அதன் பிறகு தலைவர் ஸ்டூவர்ட் என்ன ஆனார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம் குட்டிஸ்.












Click it and Unblock the Notifications