புத்தி பலம் ரொம்ப முக்கியம்!..அறிவாளி முயல் சொல்லும் குட்டி ஸ்டோரி!!
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக இல்லாவிட்டால் சிறியவர்களிடம் கூட தோற்றுப்போக நேரிடும் என்பதை இந்த கதை உணர்த்துகிறது.
சென்னை: பாட்டிகளிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள் இன்றைய 90 கிட்ஸ்கள். தொலைக்காட்சிகளின் வரவு..அதற்குப்பிறகு சேட்டிலைட் சேனல்கள் வருகை..செல்போன்களின் வருகை கதை சொல்லிகளை காணாமல் போகச் செய்து விட்டது. பாட்டிகளிடம் கதை கேட்பதை விட செல்போன்களில் அதிகம் படக்கதைகளாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். அந்த குறையை போக்க ஒன் இந்தியா இணைய தளம் கதை சொல்லப்போகிறது. பஞ்ச தந்திர கதைகள், சிறுவர் கதைகள் என பலவித கதைகளை படித்து ரசிக்கலாம்.
மிகப்பெரிய காட்டில் நிறைய விலங்குகள் இருந்தன. அந்த விலங்குகளுக்கு சிங்கம் என்றாலே அச்சம். ஒருநாள் எல்லா விலங்குகளும் கூடி கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருந்தன.
சிங்கத்தால் நிறைய தொந்தரவு அதிகமாக இருக்கிறது அதை எப்படி விரட்டுவது என்பதுதான் அன்றைய கூட்டத்தின் சாராம்சம். பசி எடுக்கும் போது எல்லோரையும் பிடித்து சாப்பிட நினைக்கும் சிங்கத்தை எப்படி விரட்டி விடுவது என்று பேசிக்கொண்டிருந்தன விலங்குகள். சிங்கராஜாவை எப்படியாவது விரட்ட வேண்டுமே அதற்கு என்ன செய்வது என்று கரடி கேட்டது.

அதற்கு எந்த விலங்குக்கும் ஐடியா தெரியவில்லை. முயல் வந்து நான் ஒரு யோசனை சொல்லட்டா என்று கேட்டது.
அதை கேட்டு மற்ற விலங்குகளுக்கு அச்சமாக இருந்தாலும் போய்தான் பார்ப்போமே என்று ஒன்று கூடி சிங்கத்தை சந்திக்க புறப்பட்டன.
காட்டிற்குள் தனது குகையில் சிங்க ராஜா கம்பீரமாக அமர்ந்திருக்க..மற்ற விலங்குகள் மெதுவாக போய் வாசலில் நின்றன. என்ன ஒரு ஆச்சரியம் எல்லோரும் ஒன்றாக வந்திருக்கீங்களே? என்ன விஷேசமா? என்று சிங்கம் கேட்டது.
அதற்குக் கரடியோ.. அது ஒண்ணும் இல்ல சிங்கராஜா உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கோம் என்று சொல்லி ஆரம்பித்தது. நீங்க இனிமே எங்கேயும் அலைய வேண்டாம்...நாங்களே உங்களுக்குத் தேவையான உணவை கொண்டு வந்து கொடுப்போம் என்று சொன்னது.
அதை கேட்ட சிங்க ராஜாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை..கரடி சொன்னதை ஏற்றுக்கொண்டது. முதல் ஆளாக மறுநாள் காலையில் சிங்கத்தின் குகைக்கு குட்டி முயல் ஒன்று போனது. பயங்கர பசியோடு இருந்த சிங்கத்திற்கு குட்டி முயலைப் பார்த்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
"நானே கொலை பசியில் இருக்கிறேன்..நீ வந்ததே லேட்.. நீ என் கடவாய் பல்லுக்கு கூட போத மாட்டாய் எப்படி என் பசி தீரும்" என்று முயலைப் பார்த்து கோபமாகக் கேட்டது சிங்கம்.
அதைப்பார்த்த குட்டி முயலோ..பயந்து நடுங்குவது போல பேசியது..சிங்கராஜா என்னை மன்னிச்சிருங்க..உங்களுக்காக என்னோட குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வந்து கொண்டிருந்தோம். ஆனால்..வரும் வழியில் உங்களை விட ஒரு பெரிய சிங்கம் என் குடும்பத்தாரை கொன்று தின்று விட்டது என்று சொல்லியடி கண்ணை கசக்கியது.

அதைக்கேட்ட சிங்கத்திற்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. ஆத்திரம் கண்ணை மறைக்க.. என்ன என் காட்டில் இன்னொரு சிங்கமா? எப்படி இருப்பான் அவன் என்று கேட்டது? அதற்கு முயலோ..என்னுடன் வாருங்கள் நான் காட்டுகிறேன் என்று சிங்கத்தை அழைத்து சென்றது குட்டி முயல்.
சிங்க ராஜாவை பக்கத்தில் இருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் கூட்டிச்சென்றது.. இதோ இந்த கிணற்றுக்குள்தான் அந்த சிங்கம் மறைந்துள்ளது என்று சொன்னது முயல். சிங்கமும் கோபத்தோடு கிணற்றை எட்டிப்பார்த்தது. உள்ளே ஒரு உருவம் தெரிந்தது. அது தன்னுடைய நிழல்தான் என்பதைக்கூட உணராத சிங்க ராஜாவோ படக்கென்று கிணற்றுக்குள் குதித்தது. தண்ணீருக்குள் சிக்கிக்கொண்ட சிங்கத்தால் வெளியே வர முடியவில்லை..மெல்ல மெல்ல தண்ணீருக்குள் மூழ்கி இறந்து போனது.
புத்திசாலி முயல்குட்டியோ நடந்த விசயங்களை தனது உறவுகளிடமும் மற்ற விலங்குகளிடமும் சொல்லி மகிழ்ச்சியடைந்தது. அது முதல் அந்த காட்டில் இருந்த விலங்குகள் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ்ந்தன.
என்ன குழந்தைகளே..உடல் பலத்தை விட மூளை பலம்..புத்தி பலம்.. அறிவு பலம் ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் எளிதாக சமாளிக்கலாம்.












Click it and Unblock the Notifications