Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய சினிமாவையும் விட்டுவைக்காதாமே புதிய தணிக்கை விதி? அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

திரைப்படக் கலைக்கு ஏற்கெனவே இருந்துவருகிற வணிக நெருக்கடிகள், தயாரிப்பாளர் - தொழிலாளர் பிரச்சினைகள், பெருமுதலீட்டு நட்சத்திரப் படங்களால் திரையரங்குகள் ஆக்கிரமிப்பு, தொலைக்காட்சி வருகை, இணைய வழி ஒளிபரப்புத் தளங்கள் ஆகிய சவால்களோடு, இன்றைய கொரோனா காலப் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் சார்ந்த சிக்கல்களும் இருக்கின்றன. நாளை பொதுமுடக்கம் முற்றிலுமாக விலக்கப்பட்ட பிறகும் கூட விலகாதோ இந்தப் பெருந்தொற்று என்ற கவலையைத் திரையுலகினருக்கு ஏற்படுத்தியிருக்கிறது ஒன்றிய அரசின் புதிய அறிவிப்பு.

திரைப்படங்களைத் தணிக்கை செய்து, சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு திரையிடுவதற்காக என கொண்டுவரப்பட்டதுதான் 1952ம் ஆண்டின் திரைப்படவியல் சட்டம். அந்தச் சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தத் திருத்தங்களின் பலனாகத்தான், பல படங்கள் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டு அரங்கிற்கு வராமலே இருளில் முடங்கிவிடக்கூடிய அபாயம் நீங்கியது. திரைப்படச் சான்றிதழுக்கான தணிக்கை வாரியம் (சிபீஎஃப்சி), ஒரு படத்திற்கு 'யு' (அனைவருக்குமானது) அல்லது 'ஏ' (வயதுவந்தோருக்கு மட்டும்) என்று சான்றிதழ் தருவதற்கு மாறாக, வயது அடிப்படையில் யுஏ7+, யுஏ10+, யுஏ13+, யுஏ 16+ என்று சான்றிதழ் வழங்க 2016ல் மூத்த இயக்குநர் ஷியாம் பெனகல் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. படத்தில் மிக அதிகமாக வன்முறைக் காட்சிகளோ பாலியல் காட்சிகளோ இருக்குமானால் 'வயதுவந்தோருக்கு எச்சரிக்கையோடு' என்ற சான்றிதழ் வழங்கவும் பெனகல் குழு வரிந்துரைத்தது.

முதிர்ச்சியால் வந்த மாற்றங்கள்

கால மாறுதல்களுக்கு ஏற்ப திரைப்படத்துறை முதிர்ச்சியடைந்து வந்திருப்பது போலவே தணிக்கை வாரியமும் முதிர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன என்கிறார் பத்திரிகையாளர் சுனில் நாயர் (டைம்ஸ் ஆஃப் இந்தியா). ஷியாம் பெனகல் குழுவும், நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான குழுவும் தங்களது அறிக்கைகளில், தணிக்கை வாரியம் தனது எல்லையை மீறி ஒரு நெறிமுறைக் காவலன் போலச் செயல்படக்கூடாது என்றும் எச்சரித்துள்ளன. திரைப்படப் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், பார்வையாளர்கள் முறையான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்க உதவுதல் என்ற இரு செயல்களுக்கும் இடையே நிதானமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் வாரியத்திற்கு வழிகாட்டியுள்ளது.

ஒரு கதைப் புத்தக வெளியீட்டிற்கோ, நாடக நிகழ்வுக்கோ, ஓவியக் காட்சிக்கோ, அரசியல் பேச்சுக்கோ இப்படி முன்கூட்டியே சரிபார்த்துச் சான்றளிக்கிற ஏற்பாடுகள் இல்லாதபோது, திரைப்படத்திற்கு மட்டும் தணிக்கை வாரியம் தேவைதானா, இருபத்தோராம் நூற்றாண்டிலும் அது தொடர்வது முறைதானா என்று திரைக்கலைஞர்கள் கேட்கவே செய்கிறார்கள். ஆனாலும், ஒப்பீட்டளவில் இப்படிப்பட்ட மாற்றங்களுடனும் வழிகாட்டுதல்ளைப் பின்பற்றியும் வாரியம் செயல்படுமானால் சரிதான் என்று ஏற்றுக்கொண்டார்கள். காலப்போக்கில் இதில் மேலும் முற்போக்கான மாற்றங்கள் வரும் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பில் கொதிநீரை ஊற்றுவது போன்ற மாற்றம்தான் வருகிறது!

தணிக்கை வாரியத்திற்கான சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட உள்ளது. அது குறித்து பொதுமக்கள் கருத்துக்கூறுவதற்கு நடப்பு ஜூலை 2 வரையில் காலக்கெடு தரப்பட்டது. படத்துறையினர், கலை இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் பலரும் அந்தக் காலக்கெடுவிற்குள் தங்கள் கருத்துகளை அனுப்பியிருக்கிறார்கள். பலர் ஊடகங்கள் வாயிலாகத் தங்களுக்கு இந்தத் திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்று வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இது திரைப்படப் படைப்பாக்கச் சுதந்திரத்தையே ஒழித்துக்கட்டுகிற, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட படங்களை முடக்குகிற, ஆட்சியாளர்களின் சித்தாந்தத்திற்கு இணக்கமான கருத்துகள் மட்டுமே படங்களை இடம்பெற வைக்கிற இலக்கிற்கான திட்டமே என்று விமர்சிக்கிறார்கள். தமிழகத்திலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கின்றன. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தத் திருத்தத்தைக் கைவிட வலியுறுத்துகிறார்கள்.

Kumaresan article on Modi govt’s new cinema bill

வாரியச் சுதந்திரத்திற்கும் வரம்பு!

உண்மையில் அது சரியாக இல்லாத ஒன்றைத் திருத்துகிற ஏற்பாடல்ல, சரியாக இருக்கிற ஒன்றைக் கெடுக்கிற ஏற்பாடு என்று சாடத்தக்க அளவுக்கு அந்தத் திருத்தம் என்னதான் சொல்கிறது? தற்போதைய சட்டமாவது படம் வெளியாவதற்கு முன் தணிக்கைக் குழுவினர் பார்த்துவிட்டு, தங்களுக்கிடையே விவாதித்து, சான்றிதழ்கள் வழங்கவோ அல்லது மறுக்கவோ அதிகாரம் அளிக்கிறது. மேற்படி திருத்தமோ, ஒரு படத்தை வெளியிடுவதற்குச் சான்றிதழ் அளித்த பிறகு, அந்தப் படம் திரையிடப்பட்ட பிறகு, "பொதுமக்களில்" யாராவது, அல்லது ஏதேனும் ஒரு அமைப்பு புகார் செய்தால், கொடுத்த சான்றிதழைத் திரும்பப்பெறுமாறு வாரியத்திற்கோ, வாரியத் தலைவருக்கோ ஆணையிடும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு அளிக்கிறது! ஆக, படிப்படியாக முன்னேறி பெருமளவுக்கு ஒரு சுதந்திரமான நிறுவனமாகச் செயல்பட்ட தணிக்கைச் சான்றிதழ் வாரியம் இப்போது அரசாங்கத்தின் ஆணைப்படி செயல்பட வேண்டிய ஒரு அலுவலகமாகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக, கடந்த ஏப்ரலில்தான், ஒரு படத்திற்குச் சான்றிதழ் மறுக்கப்படும் நிலையில், அல்லது வயதானவர்கள் மட்டுமே பார்க்கத்தக்கது என்று சான்றளிக்கப்படும் நிலையில், அதை எதிர்த்து முறையீடு செய்வதற்காக இருந்துவந்த திரைப்படத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டது. மிகக்குறைவான முறையீடுகளே வருகின்றன என்பதால் ஒரு நடுவர், ஊழியர்கள், அலுவலகம் என்ற செலவுகளைத் தவிர்ப்பதற்காகவே தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தணிக்கை வாரியத்தின் முடிவு சரியில்லை என்று தயாரிப்பாளர் கருதினால் நீதிமன்றத்தை நாடலாம், அதற்குத் தடையில்லை என்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

வாரியம் தவறான முடிவெடுக்கிறபோது, பாதிக்கப்படுகிற தங்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய இடமாக இருந்தது தீர்ப்பாயம்தான், ஆகவேதான் ஆட்சியாளர்களோ, மதவாதிகளோ, சாதியவாதிகளோ, இதர பிற்போக்குவாதிகளோ ஏற்க மறுக்கிற உள்ளடக்கங்களைக் கொண்டிருந்த படங்களைத் திரையிட முடிந்தது. திருத்தத்தின்படி நீதிமன்றத்தை நாடுவதென்றால் வழக்கு, விசாரணை தள்ளிவைப்பு, மறுபடி மறுபடி தள்ளிவைப்பு என்று மாதக்கணக்கில், ஏன் ஆண்டுக்கணக்கில் கூட இழுத்தடிக்கப்படும். சும்மாவே நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியிருக்கிற நிலையில், நீதிபதிகளுக்கு இது கூடுதல் பளுவாகும். தீர்ப்பளிக்கப்படும்போது, படம் காலப் பொருத்தத்தைக் கடந்து, பழையதாகிவிடும். படத்திற்குச் சாதகமான தீர்ப்பாகவே வந்தாலும் கூட பயனிருக்காது, ஏனெனில் மக்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிடும் என்று படவுலகினர் வெளிப்படுத்தும் கவலையைப் புறந்தள்ளிவிட முடியாது. அதுவும், முற்றிலும் வணிகச் சந்தை நோக்கத்துடனான பெருமுதலீட்டு, பெருநட்சத்திர ஆதிக்கப்படங்களை விட, குறைந்த முதலீட்டில் முனைந்து உருவாகிற படங்கள்தான் மாறுபட்ட அரசியல், சமுதாய சிந்தனைகளைப் பேசுகின்றன. அவர்களுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கான செலவுச்

சுமையோடு, ஒருவேளை சாதகமான தீர்ப்புக் கிடைத்தாலும் தாமதமாவதால் ஏற்படுகிற இழப்பும் தாங்க முடியாததாகிவிடும். இது, காலப்போக்கில் பழமைவாதக் கருத்துகளைக் கொண்டாடுகிற படங்கள் அல்லது வெறும் பொழுதுபறிப்புப் படங்கள் மட்டுமே வருவதற்குத்தான் இட்டுச்செல்லும்.

மக்களின் பிரச்சினை

இது, சினிமா சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டிய பிரச்சினை அல்ல. ரசிகர்களாகிய பொதுமக்கள் விசனப்பட வேண்டிய பிரச்சினை இது. குடும்பச் சிற்றுலா போலத் திரையரங்கிற்குச் சென்று, வீட்டிலேயே இருந்தபடி தொலைக்காட்சி அலைவரிசையைத் திருப்பி, எங்கிருந்தாலும் இணையத்தள செயலியைச் சொடுக்கி என சினிமாவை ஒரு பண்பாட்டு அடையாளமாக்கியிருப்பவர்கள் அவர்கள்தான். நாம் என்ன படம் பார்க்க வேண்டும், அதிலே எந்தக் கருத்தைக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்கிற அதிகாரத்தை வாரியம் வாரிக்கொள்கிறது. சரியாகச் சொல்வதென்றால் வாரியத்தின் மூலமாக அரசாங்கம் வாரிக்கொள்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாகப் பொறுப்பேற்கிறவர்கள் வாரியத்தின் இந்தப் புதிய அதிகாரம் தங்களுக்கும் சாதகமானது என்று நினைக்க மாட்டார்கள் என்பதற்கோ, அதை வாரியத்திடமிருந்து விலக்கிக்கொள்வார்கள் என்பதற்கோ உத்தரவாதம் இல்லை.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19வது பகுதியின் பிரிவு 1 உறுதிப்படுத்துகிறது. ஆனால், அதே பகுதியின் பிரிவு 2, அதற்கு சில விதிவிலக்குகளைச் சொல்கிறது. நாட்டின் உயர்தன்னாளுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது அறநெறி ஆகியற்றுக்கு எதிரானதாகவோ, அல்லது அவதூறு செய்வதாக அல்லது நீதிமன்ற அவமதிப்பாக இருக்குமானால் அந்தச் சுதந்திரத்திற்குக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு என்று அந்தப் பிரிவு சொல்கிறது. அந்தப் பிரிவிலிருந்து எடுத்துக்கொண்டுதான், இப்போது பேசுபொருளாகியிருக்கிற சினிமாட்டோகிராப் சட்டத்திற்கான புதிய விதியாக 5பீ(1) உருவாக்கியிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதிகார அமைப்பிற்கு இசைவில்லாத எந்தவொரு கருத்தையும் இந்த விதிக்குள் கொண்டுவந்துவிட முடியும் என எளிதில் ஊகிக்கலாம். ஆகவே, தணிக்கைச் சான்றிதழ் பெற்ற எந்தவொரு படத்திற்கும் எதிராக எந்தவொரு தனி மனிதரோ, ஏதோவொரு அமைப்போ புகார் செய்ய முடியும். அதன் அடிப்படையில், சான்றிதழைத் திரும்பப்பெறுமாறு, வேறுவகையான சான்றிதழ் அளிக்குமாறு தணிக்கை வாரியத்திற்கு ஆணையிடும்.

இது இனிமேல் வரப்போகிற படங்கள் மட்டுமல்ல, இதுவரை வந்துள்ள படங்களும் கூட இந்தத் திருத்த விதிக்குள் வரும் என்று சுட்டிக்காட்டுகிறார் திரைப்பட இயக்குநரும் இசையமைப்பாளருமான விஷால் பரத்வாஜ். அப்படி நிகழுமானால், நாம் எப்போதோ ரசித்து வரவேற்ற, சமூகப் பாகுபாடுகள், மதவெறி உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களின் மீது அடி கொடுத்த, பெண்களும் குழந்தைகளும் ஒடுக்கப்பட்டோரும் சுதந்திரச் சிறகுகளை விரிக்க வானத்தைத் திறந்துவிட்ட பல முற்போக்கான படங்கள் இனி அனைவரும் காணத்தகாத படங்களாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படலாம்!

நாடு முழுவதுமே இதை எதிர்த்து ஆனந்த் பட்வர்த்தன், ஷப்னா ஆஸ்மி, சுதிர் மிஸ்ரா, பிரசாந்த் உம்ராவ், அனுராக் காஷ்யப், ஹன்ஸல் மேத்தா, நந்திதா தாஸ், திபாகர் பீ ஃபர்ஹான் அக்தார், ஸோயா அக்தார், உள்ளிட்ட கலைஞர்களிடமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு 1,400 கலைஞர்கள் கையெழுத்திட்டு, சான்றிதழைத் திரும்பப் பெறுவதற்கான இந்தப் புதிய விதியைத் திரும்பப்பெற வலியுறுத்திக் கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழகத்திலிருந்தும் கமல்ஹாசன், சூர்யா, வெற்றிமாறன், கார்த்தி சுப்புராஜ், செழியன், டி.எம். கிருஷ்ணா, எஸ்.ஆர். பிரபு உள்ளிட்டோர் எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பை சகித்துக்கொள்ள மாட்டாமல் சிலர் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில், இந்த விதி ஏன் தேவை என்று விளக்காமல், தனிப்பட்ட முறையில் தாக்குகிற சொற்களைக் கொட்டுகிறார்கள்.

உலகில் வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற விதி இல்லை என்கிறார்கள் கலைஞர்கள். உலகின் மற்றநாடுகளில் சர்வாதிகாரப் பாதையில் செல்லத் துடிக்கிற அரசுகளுக்கு ஒரு முன்னுதாரணம் போல இங்கே இப்படியொரு விதி வருகிறது என்கிறார்கள். இப்படியொரு முன்னுதாரணம் என்ற அடையாளம் கிடைப்பது இந்தியாவுக்குப் பெருமையானதுதானா? கருத்துரிமையையும் கலைச்சுதந்திரத்தையும் பாதுகாத்துவந்திருக்கிற பெருமைக்குரிய இந்திய மக்கள் இக்கேள்விக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+