போன் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கும் இ-சஞ்சீவனி ஆப்.. மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இ சஞ்சீவனி ஆப் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லி: தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கும் இ சஞ்சீவனி செயலியின் செயல்பாடுகளுக்கு பிரதமர் மோடி பெருமிதத்துடன் பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமது 98-வது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று ஆற்றிய உரை- முழுமையாக..

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் இந்த 98ஆவது பகுதியில் உங்களனைவரோடும் இணைவதில் எனக்கு ஈடில்லா மகிழ்ச்சி. சதம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம், மனதின் குரலை நீங்கள் அனைவரும் உங்களுடைய பங்களிப்பால் ஒரு அற்புதமான மேடையாக மாற்றியிருக்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும், எத்தனையோ இலட்சக்கணக்கான செய்திகள் வாயிலாக, பல்வேறு மக்களின் உள்ளத்தின் குரல்கள் என்னை வந்தடைகின்றன. நீங்கள் உங்களுடைய மனதின் சக்தியை நன்கறிவீர்கள்; அதைப் போலவே சமூக சக்தியானது எவ்வாறு தேசத்தின் சக்தியை அதிகரிக்கிறது என்பதை மனதின் குரலின் பலப்பல பகுதிகளில் கவனித்திருக்கிறோம், புரிந்து கொண்டிருக்கிறோம், இவற்றை நானும் அனுபவித்திருக்கிறேன், ஏற்றுக் கொண்டும் இருக்கிறேன். எனக்கு இன்னும் அந்த நாள் நினைவில் இருக்கிறது...... அன்று தான் நாம் மனதின் குரலிலே, பாரதத்தின் பாரம்பரியமான விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிப்பது பற்றிப் பேசினோம், அல்லவா? உடனடியாக பாரதநாட்டு விளையாட்டுக்களோடு இணைவது, அதில் திளைப்பது, அவற்றைக் கற்றுக் கொள்வது பற்றிய எழுச்சி நாட்டில் உருவானது. மனதின் குரலில் நாம் பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் பற்றிப் பேசிய போது, நாட்டுமக்கள் இதற்கும் கூடத் தங்கள் கைகளாலேயே மெருகேற்றினார்கள். இப்போது பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் மீது எந்த அளவுக்கு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அயல்நாடுகளிலும் இவற்றுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. மனதின் குரலில் பாரத நாட்டுப் பாரம்பரியங்களில் ஒன்றான கதை சொல்லுதல் பற்றி நாம் பேசினோம், உடனடியாக இதன் புகழ் தொலை தூரங்களையும் சென்றடைந்து விட்டது. மக்கள் மிக அதிக அளவில் பாரத நாட்டுக் கதை சொல்லும் முறைகளின்பால் ஈர்க்கப்படத் தொடங்கினார்கள்.
நண்பர்களே, சர்தார் படேலின் பிறந்த நாளான ஒற்றுமை தினம் தொடர்பாக நாம் மனதின் குரலில் மூன்று போட்டிகள் பற்றிப் பேசினோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப் போட்டிகள், தேசபக்திப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் மற்றும் ரங்கோலி என்ற கோலம் போடுதலோடு தொடர்புடையன. நாடெங்கிலும் இருந்து 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரளாக இதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூறும் போது பேருவகை எனக்கு ஏற்படுகிறது. சிறுவர்கள், பெரியோர், மூத்தோர் என இதில் அனைவரும் பெரும் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் தங்களுடைய நுழைவுகளை அனுப்பி இருக்கிறார்கள். இந்தப் போட்டிகளில் பங்கெடுக்கும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள். உங்களில் ஒவ்வொருவருமே ஒரு சாம்பியன் தான், கலையின் சாதகர் தாம். நம்முடைய தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தின் மீது உங்கள் இதயங்களில் எத்தனை பிரேமை இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
நண்பர்களே, இன்று இந்தச் சந்தர்ப்பத்தில் லதா மங்கேஷ்கர் அவர்கள், லதா அக்காவின் நினைவு எழுவது என்பது மிகவும் இயல்பான விஷயம் தான். ஏனென்றால் இந்தப் போட்டி தொடங்கிய வேளையில், அன்றைய நாளன்று தான் லதா அக்கா ஒரு ட்வீட் வாயிலாக, நாட்டுமக்களிடம் இந்த நிகழ்ச்சியோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நண்பர்களே, தாலாட்டு எழுதும் போட்டியிலே முதல் பரிசினை, கர்நாடகத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.எம். மஞ்சுநாத் அவர்கள் வென்றிருக்கிறார். கன்னட மொழியில் எழுதப்பட்ட இவருடைய தாலாட்டுப் பாடலான மலகு கந்தாவிற்காக இவர் இந்தப் பரிசினை வென்றிருக்கிறார். இதை எழுதும் உத்வேகம் தனது தாய், பாட்டி ஆகியோர் பாடிய தாலாட்டுப் பாடல்களால் இவருக்குக் கிடைத்திருக்கிறது. நீங்களும் இதைக் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கும் மிக ஆனந்தமாக இருக்கும்.
அஸாமின் காமரூபம் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய தினேஷ் கோவாலா அவர்கள் இந்தப் போட்டியிலே இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் தாலாட்டுப் பாடலில் வட்டார மண் மற்றும் உலோகப் பாத்திரங்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களின் பிரபலமான கைவினைத்திறத்தின் முத்திரை இருக்கிறது.
பாடல்கள், தாலாட்டுப் பாடல்களைப் போலவே கோலப்போட்டியும் கூட மிகவும் விரும்பப்பட்டதாக இருந்தது. இதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவுக்கு அழகான கோலங்களைப் போட்டு அனுப்பியிருந்தார்கள். இதிலே வெற்றி பெற்ற நுழைவு, பஞ்சாபின் கமல் குமார் அவர்களுடையது தான். இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், உயிர்த்தியாகி வீரன் பகத் சிங்கின் மிகவும் அழகான கோலத்தை வரைந்திருந்தார். மகாராஷ்டிரத்தின் சாங்க்லியின் சச்சின் நரேந்திர அவசாரி அவர்கள் தனது கோலம் வாயிலாக ஜலியான்வாலா பாக், அங்கு அரங்கேறிய படுகொலை, உயிர்த்தியாகி உதம் சிங்கின் தைரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தார். கோவாவில் வசிக்கும் குருதத் வாண்டேகர் அவர்கள் காந்தியடிகள் தொடர்பான கோலத்தை ஏற்படுத்தியிருந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த மாலதி செல்வம் அவர்களும் கூட சுதந்திரத்தின் பல மகத்தான வீரர்கள் மீது தனது குவிமையத்தைச் செலுத்தியிருந்தார். நாட்டுப்பற்றுப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர் டி. விஜய் துர்க்கா, இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுகுவில் தனது நுழைவை அனுப்பியிருந்தார். இவர் தனது பகுதியில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரரான நரசிம்ம ரெட்டி காருவினால் அதிகக் கருத்தூக்கம் பெற்றிருக்கிறார்.
எனதருமை நாட்டுமக்களே, விஷயம் பனாரஸ் பற்றியதாக இருந்தாலும், ஷெஹனாய் பற்றியதாக இருந்தாலும், உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் அவர்களைப் பற்றியதாக இருந்தாலும், என்னுடைய சிந்தையானது இயல்பாகவே அதை நோக்கிச் சென்றுவிடும். சில நாட்கள் முன்பாக, உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் இளைஞர் விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருதானது இசை மற்றும் நிகழ்த்துக் கலைகள் துறையில் உயர்ந்துவரும் திறமைமிக்கக் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது கலை மற்றும் இசையுலகின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதோடு, இதன் வளத்திற்கும் தனது பங்களிப்பை அளித்து வருகின்றது. எந்த இசைக்கருவிகளின் புகழ் காலப்போக்கில் மங்கத் தொடங்கியிருக்கிறதோ, அவற்றில் யார் புத்துயிரைப் புகுத்தியிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள்.
இந்த இசைக்கருவி என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு இது என்ன என்பது தெரியாமல் இருக்கலாம். இந்த இசைக்கருவியின் பெயர் சுரசிங்கார் ஆகும், இந்த மெட்டினை ஏற்படுத்தியிருப்பவரின் பெயர் ஜாய்தீப் முகர்ஜி. ஜாய்தீப் அவர்கள், உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் விருதினைப் பெறும் இளைஞர்களில் ஒருவராவார். இந்தக் கருவியின் இசையைக் கேட்பது என்பதே கடந்த 50கள், 60களுக்குப் பிறகு இயலாத ஒன்றாகி விட்டது. ஆனால் ஜாய்தீப் அவர்கள், சுரசிங்காரை மீண்டும் பிரபலமடையச் செய்வதில் முழு ஈடுபாட்டாடு இறங்கியிருக்கிறார். இதைப் போலவே சகோதரி, உப்பலப்பு நாகமணி அவர்களின் முயற்சியும் கூட மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது, இவருக்கு மாண்டலின் கருவியில் கர்நாடக இசைக்காக விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. இதைப் போலவே சங்க்ராம் சிங் சுஹாஸ் பண்டாரே அவர்களுக்கும் வார்க்கரி கீர்த்தனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இசையோடு இணைந்த கலைஞர்கள் மட்டுமே இல்லை. வீ துர்க்கா தேவி அவர்கள், மிகப் பழமையான நாட்டிய வகையான கரகாட்டத்திற்காக இந்த விருதினைப் பெறுகிறார். இந்த விருதின் மேலும் ஒரு வெற்றியாளர், ராஜ் குமார் நாயக் அவர்கள், தெலங்கானாவின் 31 மாவட்டங்களில், 101 நாட்கள் வரை நடக்கக்கூடிய பேரினி ஓடிசி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இன்று, மக்கள் இவரை பேரினி ராஜ்குமார் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். பேரினி நாட்டியம், பகவான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாட்டியம், இது காகதீய வம்சம் கோலோச்சிய காலத்தில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. இந்த வம்சத்தின் வேர்கள் இன்றைய தெலங்கானாவோடு தொடர்புடையது. விருதைப் பெறும் மேலும் ஒரு வெற்றியாளர் சைகோம் சுர்சந்திரா சிங் அவர்கள். இவர் மைதேயி புங் இசைக்கருவியைத் தயாரிப்பதில் வல்லவர் என்று அறியப்படுகிறார். இந்த இசைக்கருவி மணிப்பூரோடு தொடர்புடையது. பூரன் சிங் ஒரு மாற்றுத்திறனாளிக் கலைஞர், இவர் ராஜூலா-மலுஷாஹி, ந்யௌலி, ஹுட்கா போல், ஜாகர் போன்ற பலவகைப்பட்ட இசை வடிவங்களையும் பிரபலமாக்கிக் கொண்டு வருகிறார். இவற்றோடு தொடர்புடைய பல ஒலிப்பதிவுகளையும் இவர் தயாரித்திருக்கிறார். உத்தராக்கண்டின் நாட்டுப்புற இசையில் தனது புலமையை வெளிப்படுத்தி பூரன் சிங் அவர்கள் பல விருதுகளை வென்றிருக்கிறார். போதிய அவகாசம் இல்லாமையால், விருது பெறும் அனைவரின் விபரங்களையும் என்னால் கூற முடியவில்லை; ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றிக் கண்டிப்பாகப் படித்துப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதே போல, இந்தக் கலைஞர்கள் அனைவரும், நிகழ்த்துக் கலைகளை மேலும் பிரபலப்படுத்த, வேர்கள் மட்டத்தில் அனைவருக்கும் உத்வேகம் அளித்து வருவார்கள்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, வேகமாக முன்னேறி வரும் நமது தேசத்தின் டிஜிட்டல் இந்தியாவின் பலம், மூலை முடுக்கெங்கும் காணப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இண்டியாவின் சக்தியை வீடுகள் தோறும் அடையாளம் காணும் வகையிலே பல்வேறு செயலிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு செயலி தான், ஈ-சஞ்சீவனி. இந்தச் செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை, அதாவது தொலைவான பகுதிகளில் இருந்தவாறே, காணொளி ஆலோசனை மூலமாக, மருத்துவர்களிடம் தங்கள் நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, இதுவரை தொலைபேசி ஆலோசனை செய்வோரின் எண்ணிக்கை பத்து கோடி என்ற எண்ணிக்கையையும் கடந்து விட்டது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், காணொளி ஆலோசனை வாயிலாக பத்து கோடிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள்!! நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஒரு அலாதியான உறவு - இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சாதனைக்காக, நான் மருத்துவர்கள் அனைவருக்கும், இந்த வசதியால் பயனடையும் நோயாளிகளுக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரத நாட்டு மக்கள், தொழில்நுட்பத்தை எவ்வாறு தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு. கொரோனா காலத்தில் ஈ சஞ்சீவனி செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டு, எத்தனையோ பேர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பதை நாம் பார்த்தோம். இதைப் பற்றி மனதின் குரலில், ஒரு மருத்துவர், ஒரு நோயாளி ஆகியோரோடு உரையாடிப் பார்க்கலாமே, உங்களிடம் அவர்களின் எண்ணங்களைக் கொண்டு சேர்க்கலாமே, இது எப்படி ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்தேன். நம்மோடு சிக்கிமைச் சேர்ந்த மருத்துவர் மதன் மணி அவர்கள் இணைந்திருக்கிறார். மருத்துவர் மதன் மணி அவர்கள் சிக்கிமில் வசிப்பவர் என்றாலும், இவர் தனது மருத்துவப்படிப்பை தன்பாதிலே முடித்திருக்கிறார், பிறகு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் எம்.டி. மேற்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். இவர் ஊரகப் பகுதிகளில் பல்லாயிரம் மக்களுக்கு தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
நண்பர்களே, தேசத்தின் சாமான்ய குடிமகனுக்காக, மத்தியத் தட்டு மக்களுக்காக, மலைப்பிரதேசங்களில் வசிப்போருக்காக, இந்த ஈ-சஞ்சீவனியானது உயிர்க்கவசமாகத் திகழும் ஒரு செயலி. இது பாரதத்தின் டிஜிட்டல் புரட்சியின் சக்தி. மேலும் இதன் தாக்கத்தை இன்று நாம் ஒவ்வொரு துறையிலும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பாரதத்தின் யுபிஐயின் சக்தியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகின் எத்தனையோ தேசங்கள் இதன்பால் கவரப்பட்டு இருக்கின்றன. சில நாட்கள் முன்பாக பாரதத்திற்கும், சிங்கப்பூருக்கும் இடையே, யுபிஐ-பே நௌ இணைப்பு தொடங்கப்பட்டது. இப்போது சிங்கப்பூர் மற்றும் பாரதத்தின் மக்கள் தங்கள் மொபைல் வாயிலாக, அவரவர் தங்கள் நாடுகளுக்குள்ளே எப்படி பணப்பரிமாற்றத்தைச் செய்து கொள்கிறார்களோ, அதைப் போலவே இப்போது பரஸ்பரம் பரிமாற்றத்தைச் செய்து கொள்ள முடியும். மக்களும் இதனால் ஆதாயம் அடையத் தொடங்கிவிட்டர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரதத்தின் ஈ-சஞ்ஜீவனி செயலியாகட்டும், யுபிஐ ஆகட்டும், வாழ்க்கையை சுலபமாக்கும் தன்மையை அதிகரிப்பதில் இவை மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.
என் கனிவான நாட்டுமக்களே, ஒரு தேசத்தில் அழிந்து வரும் பறவையினமோ, ஏதோ ஒரு உயிரினமோ, அழிவின் விளிம்பிலிருந்து அவை காப்பாற்றப்படுகிறன, இது உலகிலே பேசுபொருளாக ஆகிறது. நமது தேசத்திலும் கூட இப்படி பல மகத்துவமான பாரம்பரியங்கள் அழிந்து விட்டன, மக்களின் மனங்களிலிருந்து அகன்று விட்டன. ஆனால் இப்போது மக்களின் பங்களிப்புச் சக்தியின் துணையோடு, இவற்றிற்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, இது தொடர்பான விவாதத்தை அரங்கேற்ற மனதின் குரலை விடச் சிறப்பான மேடை வேறு என்னவாக இருக்க முடியும்?
நான் உங்களிடத்திலே இப்போது கூறவிருப்பது, இந்தத் தகவல் உள்ளபடியே உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வல்லது, நமது மரபின் மீது உங்களுக்குப் பெருமை உண்டாகும். அமெரிக்காவில் வசிக்கும் கஞ்சன் பேனர்ஜி அவர்கள், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு தொடர்புடைய இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின்பால் என் கவனத்தை ஈர்த்திருக்கிறார். நான் அவர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். நண்பர்களே, மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பான்ஸ்பேரியாவிலே, இந்த மாதம், த்ரிபேனி கும்போ மொஹொத்ஷோவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள் என்றாலும், இது ஏன் இத்தனை விசேஷமானது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏன் விசேஷமானது என்றால், இந்த நிகழ்வு 700 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது என்றாலும் கூட, துரதிர்ஷ்டவசமாக 700 ஆண்டுகளுக்கு முன்பாக, பங்காலின் திரிபேனியில் நடக்கும் இந்த மஹோத்சவம் தடைப்பட்டுப் போனது. இது நாடு விடுதலை அடைந்த பிறகு தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால், அப்படி நடக்கவில்லை. ஈராண்டுகள் முன்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், 'திரிபேனி கும்போ பொரிசாலோனா ஷொமிதி' மூலமாக, இந்த மகோத்ச்வத்தை மீண்டும் தொடங்கினார்கள். இந்த ஏற்பாட்டோடு தொடர்புடைய அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு பாரம்பரியத்திற்கு மட்டும் உயிர் அளிக்கவில்லை, மாறாக, நீங்கள், பாரதத்தின் கலாச்சார மரபின் பாதுகாப்பிற்கும் பேருதவியாக இருந்திருக்கிறீர்கள்.
நண்பர்களே, மேற்கு வங்கத்தின் திரிபேனி, பல நூற்றாண்டுகளாகவே ஒரு பவித்திரமான இடமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இதைப் பற்றிய குறிப்புகள், பல்வேறு புனித நூல்களில், வைணவ இலக்கியங்களில், சாக்த இலக்கியங்களில், இன்னும் பிற வங்காள இலக்கியங்களில் காணப்படுகிறது. பல்வேறு வரலாற்று ஆவணங்களிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், ஒரு காலத்திலே இந்தப் பகுதி, சம்ஸ்கிருதம், கல்வி மற்றும் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் மையமாக விளங்கியிருந்தது என்பது தான். பல புனிதர்களும், இதை மாக சங்கராந்தியில் கும்ப ஸ்நானம் செய்ய பவித்திரமான இடமாகக் கருதுகிறார்கள். திரிபேனியில் நீங்கள் கங்கைத் துறை, சிவன் கோயில், சுடுமண் சிற்பக்கலையால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கட்டிடங்களைக் காணலாம். திரிபேனியின் மரபை மீள் நிறுவவும், கும்பப் பாரம்பரியத்தின் பெருமைக்குப் புத்துயிர் அளிக்கவும் இங்கே, கடந்த ஆண்டு கும்ப மேளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கும்ப மஹாஸ்நானம் மற்றும் திருவிழாவானது, இந்தத் துறையில், ஒரு புதிய சக்தியைப் பெருக்கெடுத்து ஓட விட்டிருக்கிறது. மூன்று நாட்கள் வரை, ஒவ்வொரு நாளும் நடைபெறும் கங்கை ஆரத்தி, ருத்ராபிஷேகம் மற்றும் யாகங்களில் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த முறை நடைபெற்ற மஹோத்சவத்தில் பல்வேறு ஆசிரமங்கள், மடங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். வங்காளப் பாரம்பரியங்களோடு தொடர்புடைய பல்வேறு வழிமுறைகளான கீர்த்தனைகள், பாவுல், கோடியோன் நடனங்கள், ஸ்திரீ-கோல், போரேர் கானம், சோஊ-நடனம், மாலைநேர நிகழ்ச்சிகளில், கருத்தைக் கவரும் மையங்களாக ஆகியிருந்தன. தேசத்தின் பொன்னான கடந்த காலத்தோடு நமது இளைஞர்களை இணைக்கும் பாராட்டுக்குரிய முயற்சியாக இது அமைந்திருந்தது. பாரதத்தில் இப்படிப்பட்ட மேலும் பல பழக்கங்கள் இருந்தன, இவற்றை மீளுயிர்ப்பிக்க வேண்டியது அவசியம். இவை பற்றி நடக்கும் விவாதங்கள், இவற்றின்பால் மக்களின் மனங்களில் கண்டிப்பாக உத்வேகத்தை ஊட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
என் அன்புநிறை நாட்டுமக்களே, தூய்மை பாரதம் இயக்கத்தில் நமது தேசத்தில் மக்களின் பங்கெடுப்பு என்பதன் பொருளையே மாற்றி விட்டது. தேசத்தில் எங்காவது யாராவது தூய்மையோடு தொடர்புடையவராக இருக்கிறார், சிலர் இவை பற்றிய தகவல்களை எனக்கு அவசியம் அனுப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒன்றின் மீது என் கவனம் ஈர்க்கப்பட்டது, இது ஹரியாணாவின் இளைஞர்களின் தூய்மை இயக்கம். ஹரியாணாவில் இருக்கும் ஒரு கிராமம், துல்ஹேடி. இங்கிருக்கும் இளைஞர்கள், நாம் பிவானி நகரத்தைத் தூய்மைக்கான ஒரு எடுத்துக்காட்டாக ஆக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்கள். இவர்கள் தூய்மை மற்றும் மக்கள் சேவைக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்தக் குழுவோடு தொடர்புடைய இளைஞர்கள் காலை 4 மணிக்கு பிவானிக்குச் சென்று விடுவார்கள். நகரின் பல்வேறு இடங்களில், இவர்கள் இணைந்து துப்புரவுப் பணியை மேற்கொள்வார்கள். இவர்கள் இதுவரை நகரின் பல்வேறு பகுதிகளில் பல டன் பெறுமானமுள்ள குப்பையை அகற்றியிருக்கிறார்கள்.
நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒரு மகத்துவம் வாய்ந்த இலக்கு Waste to Wealth குப்பையிலிருந்து கோமேதகம். ஒடிஷாவின் கேந்திரபாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியான கமலா மோஹ்ரானா, ஒரு சுயவுதவிக் குழுவை இயக்கி வருகிறார். இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பால்கவர் மற்றும் பிற பேக் செய்யப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களைக் கொண்டு கூடைகள், மொபைல் ஸ்டாண்டுகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள். இது இவர்களுக்குத் தூய்மையோடு கூடவே வருமானத்தையும் ஈட்டும் ஒரு நல்ல வழிமுறையாக ஆகி வருகிறது. நாம் தீர்மானம் மட்டும் செய்து விட்டால் போதும், தூய்மை பாரதத்திற்கு நமது மிகப்பெரிய பங்களிப்பை நம்மால் அளிக்க முடியும். குறைந்தபட்சம் நெகிழிப் பைகளுக்கு பதிலாகத் துணிப் பைகளைப் பயன்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டை நாமனைவரும் மேற்கொண்டாக வேண்டும். உங்களுடைய இந்த உறுதிப்பாடு, உங்களுக்கு எத்தனை நிறைவை அளிக்குமோ, அதே அளவுக்கு இது பிறகுக்குக் கருத்தூக்கமாகவும் அமையும்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நானும் நீங்களும் இணைந்து, உத்வேகமளிக்கும் பல விஷயங்கள் குறித்து, மீண்டும் ஒருமுறை கலந்தோம். குடும்பத்தோடு அமர்ந்து இதைக் கேட்டோம், இப்போது இதை நாள்முழுவதும் அசை போட்டுக் கொண்டிருப்போம். நாம் தேசத்தின் கடமையுணர்வு குறித்து எந்த அளவுக்கு விவாதங்களில் ஈடுபடுகிறோமோ, அந்த அளவுக்கு நமக்குள் சக்தி பிறக்கிறது. இந்த சக்திப் பெருக்கோடு பயணித்து இன்று நாம் மனதின் குரலின் 98ஆவது பகுதி என்ற கட்டத்தை எட்டியிருக்கிறோம். இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து ஹோலிப் பண்டிகை வரவிருக்கிறது. அனைவருக்கும் ஹோலிப் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்கள். நாம், நமது பண்டிகைகளின் போது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உறுதிப்பாட்டோடு கொண்டாட வேண்டும். உங்களுடைய அனுபவங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். இப்போது நான் விடை பெறுகிறேன். அடுத்த முறை, மீண்டும் புதிய விஷயங்களோடு சந்திப்போம். பலப்பல நன்றிகள். வணக்கம்.












Click it and Unblock the Notifications