சென்னை, ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் MSME துறை எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது?

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் மொத்த MSME தொழில்களின் தமிழ்நாடு மட்டும் சுமார் 15 சதவீதத்தை பங்கீட்டை வகிக்கிறது. இதில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் MSME துறையின் முக்கிய மையங்களாக உள்ளன. இந்த ஐந்து மாவட்டங்களில், எம்.எஸ்.எம்.இ துறையானது எவ்வாறு செயல்பட்டு வருகிறது. அவற்றின் சிறப்பு பங்களிப்புகள் என்ன என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

MSME

சென்னை:

சென்னையை பொறுத்த வரையில் ஆட்டோமோட்டிவ் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு மையங்கள் அதிகம். மேலும் பொறியியல், தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த எம்.எஸ்.எம்.இ-க்கள், நிதி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்கள் அதிகம். தொடர்ந்து அதிகரித்து வரும் ஆட்டோமேட்டிவ் உதிரி பாகங்கள், தொழில்நுட்ப சேவை சார்ந்த எம்.எஸ்.எம்.இ துறையானது, வேலை வாய்ப்புகளில் முக்கிய பங்கு வகிக்கலாம். குறிப்பாக சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் வர்த்தக, தொழில்நுட்ப மையமாக இருப்பதால், எம்.எஸ்.எம்.இ-களின் வளர்ச்சிக்கு சாதகமாக பல காரணிகள் உள்ளன.

ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் உள்ள பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் துல்லியமான பொறியியல் சேவைகளை வழங்கும் துணை நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த சலுகைகள் மற்றும் தமிழக அரசின் ஊக்குவிப்புகளால், மின்னணுவியல் மற்றும் ஹார்டுவேர் தயாரிப்பு எம்.எஸ்.எம்.இ-க்கள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வேகமாக வளர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் சர்வதேச வர்த்தகத்துக்கு சாதகமாக இருப்பதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சார்ந்த நிறுவனங்களின் வர்த்தகமும் எளிதாகும்.

சென்னைக்கு அருகிலுள்ள பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படுவது, நிறுவனங்களுக்கு தேவையான நிலம் மற்றும் உள்கட்டமைப்புக்கான வாய்ப்புகளை வழங்கும். இப்படி வலுவான எதிர்காலத்தை கொண்டுள்ள எம்.எஸ்.எம்.இ-க்கள், சென்னையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை நேரடியாக அதிகரிக்கும்.

கோயம்புத்தூர்:

தென் இந்தியாவின் மான்செஸ்டராக பார்க்கப்படும் கோயம்புத்தூர் ஜவுளித் துறை, பம்புசெட் உற்பத்தி வெட்கிரைண்டர்கள், பவுண்டரிகள் மற்றும் பொது பொறியியல் சம்பந்தமான சிறு தொழில்கள் அதிகம். கோயம்புத்தூரிலும் எம்.எஸ்.எம்.இ-க்களின் எதிர்காலம் வலுவாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல தசாப்தங்களாக கோவை தொழில் மையமாக இருந்து வருவதால், அங்குள்ள எம்.எஸ்.எம்.இ-க்களின் சுற்றுச்சூழல் அமைப்பு ஆழமான அடித்தளத்தைக் கொண்டுள்ளது.

கோயம்புத்தூருக்கு அருகில் திருப்பூர் இருப்பதால், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் வலுவான விநியோகச் சங்கிலி உள்ளது. இந்தத் துறை ஏற்றுமதியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால், இதுவும் எம்.எஸ்.எம்.இ-க்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கலாம். மேற்கொண்டு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், விண்வெளி உதிரி பாகங்கள் மற்றும் நவீன மின்னணுவியல் உற்பத்தி துறைகளிலும் எம்.எஸ்.எம்.இ.க்கள் அதிக கவனம் செலுத்துவதால், துறையின் பல்வகைப்படுத்தல் எதிர்காலத்தை நிலையானதாக மாற்றும். தமிழக அரசும் கோவையில் பெரிய அளவில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை பூங்காக்களை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது புதிய நிறுவனங்கள் உருவாகவும், ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் அடையவும் உதவும். இங்கு பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், செயல்பாட்டு செலவுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பது முதலீட்டாளர்களை ஈர்க்கலாம். எம்.எஸ்.எம்.இ-க்களின் இந்த வலுவான எதிர்காலம், வேலைவாய்ப்பை நேரடியாகப் பல துறைகளில் அதிகரிக்கும்.

ஓசூர்:

ஓசூரை பொறுத்த வரையில் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரி பாகங்கள், மின்னணு பாகங்கள் மற்றும் விண்வெளி உதிரி பாகங்கள், மற்றும் பிற உற்பத்தி சார்ந்த தொழில்கள் அதிகம். தமிழ்நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு எம்.எஸ்.எம்.இ மையமாக உள்ளது. அதன் புவியியல் இருப்பிடம் பெங்களூருக்கு அருகாமையில் இருப்பதால், இங்குள்ள நிறுவனங்களுக்கு எதிர்கால வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

ஓசூரின் MSME-க்களின் எதிர்காலம், அதன் முக்கியத் துறைகள் மற்றும் அரசு உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றால் உறுதி செய்யப்படுகிறது. ஓசூரில் ஏற்கனவே டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, அசோக் லேலண்ட், டைட்டன் போன்ற பெரிய நிறுவனங்கள் இருப்பதாலும், புதிய நிறுவனங்கள் அதிக அளவில் வருவதாலும், துணைத் தொழில்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ-களுக்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது.

மேலும் அதிகரித்து வரும் தேவை மத்தியில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு மையங்கள் இங்கு அதிகரித்து வருவதால், EV உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி உள்ளது. மொத்தத்தில் ஓசூரின் எம்.எஸ்.எம்.இ. துறையின் வளர்ச்சி, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

திருச்சி:

பொறியியல் மற்றும் கொதிகலன் உற்பத்தி தொழில் சார்ந்த எம்.எஸ்.எம்.இ, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) சார்ந்த சிறு துணை நிறுவனங்கள் திருச்சியில் அமைந்துள்ளன. மத்திய அரசு மின் உற்பத்தி மற்றும் ஆற்றல் துறையில் தொடர்ந்து முதலீடு செய்யும் போது, BHEL மற்றும் அதைச் சார்ந்த எம்.எஸ்.எம்.இ-க்களுக்கான ஆர்டர்கள் மற்றும் உபகரண தேவைகள் தொடர்ந்து உயரும். மத்திய அரசின் டிஐசி திட்டம் திருச்சியை ஒரு முக்கிய மையமாக கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறைக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் துல்லியமான கூறுகளை உற்பத்தி செய்யும் புதிய எம்.எஸ்.எம்.இ -க்கள் திருச்சியில் தொடங்கப்படலாம். இதன் மூலம் திருச்சி எம்.எஸ்.எம்.இ -க்களின் எதிர்கால வளர்ச்சி, வேலைவாய்ப்பை நேரடியாக அதிகரிக்கும்.

தூத்துக்குடி:

துறைமுகம் சார்ந்த தொழில்கள், உரம், கெமிக்கல்கள், உப்பு தயாரிப்பு மற்றும் கடல்சார் ஏற்றுமதி சார்ந்த எம்.எஸ்.எம்.இ-க்கள் இங்கு அதிகம். இங்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் என்ற நிலையில், அருகிலேயே துறைமுகம் இருப்பதும் சாதகமாக ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் தற்போது தமிழக அரசு தென் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. சமீபத்தில் தூத்துக்குடியில் கிரீன் ஹைட்ரஜென் மற்றும் அமோனியா தயாரிப்பில் புதிய முதலீடுகள் குவிந்து வரும் காரணத்தால் இத்துறை சார்ந்த MSME நிறுவனங்கள் இப்பகுதியில் உருவாக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) அமைக்கப்பட்டால், அந்தப் புதிய நிறுவனங்களுக்கு தேவையான துணைத் தொழில்கள் மற்றும் விநியோகச் சங்கிலி எம்.எஸ்.எம்.இ-களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். இது தூத்துக்குடியில் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கலாம். இருப்பினும் அவை அனைத்தும் மேற்கொண்டு வரவிருக்கும் முதலீடுகளைப் பொறுத்தே அமையும். இது தூத்துக்குடி மட்டுமல்ல, மற்ற பகுதிகளிலும் வரவிருக்கும் முதலீடுகளைப் பொறுத்தே அவற்றின் வளர்ச்சியும் இருக்கும்.

எவ்வளவு நிறுவனங்கள்?:

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 5.6 மில்லியனுக்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ -க்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் 2.5 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் மைக்ரோ பிரிவில் 4,733,212 நிறுவனங்களும், சிறு நிறுவனங்கள் பிரிவில் 60,013 நிறுவனங்களும், நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் 5,335 நிறுவனங்களும் அடங்கும்.

தமிழகத்தில் உதயம் ரிஜிஸ்ட்ரேஷன் தளத்தின் தகவல்கள் படி தமிழ்நாட்டில் அதிகப்படியான எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இருக்கும் மாவட்டமாக சென்னை முன்னணியில் உள்ளது. இங்கு வேகமாக வளர்ந்து வரும் சூழல் தான் இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதாவது எம்.எஸ்.எம்.இ-களின் வளர்ச்சிக்கு தேவையான நிதி நிறுவனங்கள், மூலப்பொருட்கள் வழங்குனர்கள், மனித வளம் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவை சென்னையில் வலுவாக உள்ளன.

மொத்த பதிவுகளின் அடிப்படையில் சென்னை 5 லட்சத்திற்கு அதிகமான எம்.எஸ்.எம்.இ-க்களை கொண்டு முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் உள்ள கோயம்புத்தூரில் 3 லட்சத்திற்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ-க்களும் உள்ளன. திருச்சியில் 1.5 லட்சம் எம்.எஸ்.எம்.இ-க்களும், தூத்துக்குடியில் 85,000 எம்.எஸ்.எம்.இ-க்களும் தோராயமாக உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+