• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீதையின் பாதையில்...

By Staff
|

நடைமுறை வாழ்க்கையில் பகவத் கீதை நமக்கு எப்படியெல்லாம் உதவ முடியும், வழிகாட்ட முடியும் என்பதைஅலசும் இந்தத் தொடரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.இயந்திரமயமான வாழ்வில் உங்களுக்கு கீதை மூலம் மன அமைதித் தேடித் தரும் எங்களின் முயற்சி இது...

உற்சாகமாக இருக்கும் காலம் இளமைக் காலம். கையில் வைத்திருக்கும் கடைசிக் காசை எலக்ட்ரிக் ரயிலில் பறிகொடுத்தாலும் சோகம் இல்லாமல், பிளேடு போட்டவன் சாமர்த்தியத்தை வியந்து பேசும் மனசு இருபதுகளின்வயசு.

காற்றைக் கிழிக்க இரண்டு இறக்கைகள் இல்லாததுதான் குறை. கண்ணிலும், இதழிலும் வாலிபர் கதையெழுதிவண்ணம் செய்யும் பருவம் அந்தப் பருவம்.

அந்தப் பருவத்தில் தீயவர், கயவர் தோளில் கை போட்டு நெருங்(க்)கி விட்டால் , ஒரு பாரதப் புதல்வன் பாழாகிவிடுகிறான்.

எதைத் தேடினாலும் ஒரு தீவிரத்துடன் தேடும் இளமை வேகத்தில் ஒரு ஞானியின் ஒளி ஊடுறுவி விட்டால், வேகம்விவேகமாக ஒரு நரேந்திரன் விவேகானந்தராகப் பரிணாமம் பெற்று விடுகிறான்.

இந்திய நந்தவனத்தில் மலர்ந்தும் மலராத இளமை இருபதுகளே, உங்கள் மன மலர்கள் இறைவனுக்குஅர்ச்சிக்கப்படும் புனிதமானவையா, அல்லது கொஞ்சம் தப்பிப் போய் விலைமகளின் வியர்வையால் கசங்கும்வீண் மலர்களா?

இதை முடிவு செய்ய வேண்டிய காலம் இது. கொஞ்சம் எனக்குக் காது கொடுங்கள்.

சொற்பொழிவு, உபந்நியாஸம் என்று எங்கு நிகழ்ந்தாலும், வருபவர்களில் ஒரு சிலர் வாழ்க்கையை ஏறத்தாழநடத்தி முடித்தவர்கள், கண்ணாடிக்குள் புதைக்கப்பட்ட கண்களின் ஓரத்தில் காலம் உழுது போட்ட கரிசல் கோடுகள்உடைய அறிவு ஜீவிகள்.

இன்னொரு பக்கமோ, இனி தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்கிற உண்மை உணர்ந்த உயர்ந்தோர்கள். கேட்டுஆகப் போவது எதுவுமில்லை என்றாலும் கேட்பது மூச்சு விடுவது போல் பழக்கமாகி விட்டபடியால், வந்து அமரும்அறிவுச் சுடர்கள் . எப்படிப் பார்த்தாலும் தரமான சமய வாழ்க்கை விளக்கக் கூட்டங்களுக்கு வருகிறவரின் சராசரிவயது நாற்பதுக்கு மேல்.

கண்ணாடி இல்லாத முகங்கள் குறைவு. இருபதுகள், முப்பதுகள் இல்லாமைக்கு யார் முதல் காரணம்?சொற்பொழிவாளர். அவர் பேச்சில் இளமை இல்லை. அரங்கிலும் இளமை இல்லை.

இரண்டாவது காரணம் வெளி உலக ஆகர்ஷணம். இளைய மனங்களை இழுத்துப் போடும் வண்ணத் திரைகள்.விதம் விதமாக விரிக்கப்பட்ட பொறிகளில் இளைய வண்டுகள். ஆனால் கீதையும், குறளும் சாகப் போகிறவனுக்குஎழுதப் பட்டதா? வாழ வேண்டியவனுக்கு வழங்கப்பட்டதா?. நண்பர்களே, அது நமக்காக. கல்லறைக்குக் கடிதம்எழுதும் முதுமைக்கு அல்ல. உலகை விலை பேசும் நிலையில் இருக்கும் நமக்காக. நாடி நரம்புகள் முறுக்கேறிநிற்கும் இளமை உலகுக்காக. நேற்றைக்காக கீதை எழுதப்படவில்லை. நாளைக்காக ஏன் இன்றைக்காக கீதைவழங்கப்பட்டது.

ஆக்ஸிஜன் நாசி வழியாக ஏற்றப்படும்போது சஹட யோகம் படிக்க முடியுமா? ரத்தம் பாட்டில் வழியாகஏற்றப்படும்போது, சித்தம் சிவமாக வேண்டும் என்று யாரும் சத்தம் போட வேண்டியதில்லை. அப்போது பயமும்,பக்தியும், ஞானமும் தானே வரும்.

என் சொற்பொழிவுக்கு வயதான பெரியவர் ஒருவர் வந்து இரண்டு மணி நேரம் கேட்டார். நான்சந்தோஷப்படவில்லை. காரணம் அவர் உட்கார அரை மணி நேரம் ஆகும். உட்கார்ந்தால் எழுந்திருக்க ஒரு மணிநேரம் ஆகும். அவர் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?.

எண்பது வயதுக் கிழவர் "இப்போது நான் மிகவும் யோக்கியனாகி விட்டேன் என்று சொன்னால் அதில் என்னஆச்சரியம் இருக்கிறது. யோக்கியமாக இருப்பதைத் தவிர வேறு என்ன வழி என்று கேட்கத் தோன்றுகிறது.

இளரத்தம் துள்ளும் இளமை வயதில் சித்தம் சிவமானால், செய்வனவெல்லாம் தவமானால் வீட்டுக்கும்,நாட்டுக்கும் நண்மை.

வெண்ணெய் கடையும்போது, விடியற்காலம் சூரிய உதயத்திற்கு முன் கடைவார்கள். அப்படிச் செய்தால்வெண்ணெய் இளகாமல் பந்து போல் திரண்டு வரும். வெயில் ஏற, ஏற வெண்ணெய் இளகி இளகி ஓடும். திரண்டுவராது. இதே போலத்தான் பக்தி. இளமையில் கடைந்து திரட்ட வேண்டியது. முதுமை வர வர உலக விவகாரத்தில்உருகி விடும் என்கிறார் பகவான் ராமகிருஷ்ணர்.

மழைக்காகப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினால் குழந்தைகள் குடை எடுத்துக் கொண்டு வருவார்கள்.பெரியவர்களோ பிரார்த்தனை பலித்து மழை எங்கே பெய்யப் போகிறது என்று வெறுங்கையுடன் வருவார்கள்.

குமார சம்பவத்தில் மேரு மலைச் சாரலில் அம்பிகை தவம் பண்ணப் போகிறாள். ஐந்து வயது இந்த வயதில் தவமா?என்று அம்மா அழுகிறாள். தவம் செய்தால் தேவியின் உடல் தாங்காது என்பதை பூவின் மேல் வண்டுஉட்கார்ந்தால் தாங்கும். பறவை அமர்ந்தால் தாங்குமா என்று கேட்பதாக காளிதாஸன் உவமை கூறுகிறார். ஆனால்தவம் செய்யப் பிள்ளை பிராயமே நல்லது என்பதை அம்பிகை நிரூபித்தாள்.

பிள்ளைப் பருவத்துப் பிடிவாதம் நல்ல விஷயங்களுக்குத் தாவினால் கொள்ளை, கொள்ளையாய் வெற்றி வரும்.

"எண்ணிய எண்ணி யாங்கு எய்துவர்

எண்ணியவர் திண்ணியராகப் பெறின்.

என்பது தமிழ் மறை. இந்தப் பிடிவாதத்தை நம் இளம் பிள்ளைகளுக்குயாராவது சொல்லியா கொடுக்க வேண்டும். எனவேதான் இளமையில் செம்மைப்பட அழைக்கிறேன். நல்லதைநோக்கி நடப்போம் என்று நண்பர்களை வற்புறுத்துகிறேன். வாழ்த்தி வரவேற்கிறேன். இந்த அனுபவம் எவ்வளவுசுகமானது என்று வாழ்ந்து பார்த்தால் தெரியும்.

நம்மிடம் எந்தவிதமான தவறுகளும் இல்லை என்கிறபோது, நம் மீது நமக்கே ஒரு மரியாதை வரும். நமக்கே,நம்மை மதிக்கத் தோன்றும். மெல்ல, மெல்ல வாழ்வில் மேலே உயர கீதையும், குறளும் நமக்குப் பாதை வகுத்துக்கொடுக்கும்.

நண்பர்களே, உங்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறதா..?

(தொடரும்...)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more