வீரப்பனை கோபால் இன்னும் சந்திக்கவில்லை
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை நக்கீரன் கோபால் இன்னும் சந்திக்கவேயில்லை. வீரப்பனிடமிருந்து எந்தக் கேசட்டும் வரவில்லை என்று தமிழக டி.ஜி.பி.சர்மா கூறியுள்ளார்.
வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் பேச்சு அடங்கியதாக கூறப்படும் ஆடியோ கேசட் வெள்ளிக்கிழமை கன்னட டி.வியான உதயாடி.வியில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில் வீரப்பனை இன்னும் கோபால் சந்திக்கவேயில்லை. அதேபோல ராஜ்குமார் பேச்சு அடங்கிய கேசட்டும் வரவில்லை என்று தமிழகபோலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.
சென்னையில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ள சந்தனக் கடத்தல்வீரப்பனைத் தேடி காட்டுக்குள் சென்றுள்ள நக்கீரன் கோபால் இன்னும் வீரப்பனைச் சந்திக்கவில்லை. சந்தித்து விட்டதாக வந்துள்ள செய்திகள்உண்மையல்ல.
வீரப்பனிடமிருந்து கோபாலுக்கு இன்னும் தகவல் ஏதும் வரவில்லை. தகவலுக்காக கோபால் காத்திருக்கிறார். வீரப்பனைச் சந்திக்கும்வழிமுறைகள் குறித்துக் கோபால் யோசித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜ்குமாருக்காக கர்நாடக அரசு கொடுத்தனுப்பிய மருந்துகளும் வீரப்பனிடம் சேர்ந்து விட்டதாக எந்தத் தகவலும் இல்லை. எனக்கு இதுவரைகிடைத்த தகவலின்படி வீரப்பனிடமிருந்து எந்த கேஸட்டும் வரவில்லை.
ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு வீரப்பன் கேஸட் கொடுத்தனுப்பியுள்ளதாக ஒருவர் தொலைபேசியில் தகவல்தெரிவித்தார். கேஸட்டைக் கொடுக்க மாட்டேன். கேஸட்டில் உள்ளதை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார். அதன்படிதொலைபேசி மூலம் கேஸட்டில் இருந்த தகவல் ஒலிபரப்பப்பட்டது. அதைப் போலீஸார் வேறு கேஸட்டில் பதிவு செய்து கொண்டனர்.
அந்த கேஸட்டில் ராஜ்குமார் கன்னடத்தில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே சென்னையில் தங்கியிருக்கும் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார்,மருமகன் ராம்குமார் ஆகியோரிடம் அந்தக் கேஸட் போட்டுக் காட்டப்பட்டது. கேஸட்டைக் கேட்ட இருவரும் ராஜ்குமாரின் குரல்தான் என்றுஉறுதி செய்தனர். பின்னர் கேஸட்டில் இருந்த ராஜ்குமாரின் கன்னட மொழிப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்து முதல்வரிடம் தெரிவித்தோம்.
மற்றபடி போலீஸாரோ, முதல்வரோ, ராஜ்குமாரின் மகனோ அல்லது மருமகனோ வீரப்பனிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் எந்தக்கேஸட்டையும் கேட்கவில்லை. அவ்வாறு வந்துள்ள தகவல்கள் தவறானவை.
இப்போது அந்தக் கேஸட் எங்கிருக்கிறது, உண்மையில் அந்தக் கேஸட் வீரப்பனிடமிருந்து வந்ததுதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால்அந்தக் கேஸட்டில் இருந்தது ராஜ்குமாரின் குரல்தான் என்பதை அவரது மகன் உறுதி செய்துள்ளார்.
மகனே தனது தந்தையின் குரலை உறுதி செய்த பிறகு வேறு வகையில் கேஸட்டில் இருக்கும் குரல் ராஜ்குமாருடையதுதானா என்பதை உறுதி செய்யவேண்டியஅவசியம் ஏற்படவில்லை.
கர்நாடக மாநிலப் போலீஸாருக்கு வீரப்பனின் அந்த கேஸட் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்தகேஸட்டின் நகலை நான் கேட்டு வாங்குவேன்.
கர்நாடகப் போலீஸாருடன் தமிழகப் போலீஸார் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர். இதுவரை கேஸட் பற்றிய தகவல் ஏதும் அங்கிருந்து வரவில்லை.
தமிழகப் போலீஸாருக்கு கிடைக்கும் தகவலுக்கும், கர்நாடக போலீஸாருக்குக் கிடைக்கும் தகவலுக்கும் இடையே கால வித்தியாசம் நிறைய உள்ளது.அதனால் இரு தரப்பு செய்திகளுக்கும் இடையே சிறு வேறுபாடுகள் இருக்கலாம்.
இப்போதைய நிலவரப்படி வீரப்பனை கோபால் இன்னும் சந்திக்கவில்லை. வீரப்பனிடமிருந்து கேஸட் ஏதும் வரவில்லை என்றார் சர்மா.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூடுதல் டி.ஜி.பிக்கள் குமாரசாமி, அலக்சாண்டர், ஐ.ஜி.சுப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, நடிகர் ராஜ்குமார் பேசிய ஆடியோ கேசட், வியாழக்கிழமை இரவு கருணாநிதியிடம் வந்து சேர்ந்தாககூறப்பட்டது. நேரடியாக சத்தியமங்கலத்திலிருந்து சென்னைக்கு வராமல் பாண்டிச்சேரி வழியாக வந்துள்ளதுபல்வேறு கேள்விகளை எழுப்பியது.
சத்தியமங்கலம் காட்டிலிருந்து கேசட், ஜெயம்கொண்டம் வழியாக பாண்டிச்சேரிக்கு அனுப்பப்பட்டதாகவும்,அங்கு பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர் ஒருவர் இந்தக் கேசட்டை, வாரப் பத்திரிக்கை ஒன்றின் நிருபரிடம்கொடுத்ததாகவும், அவர் அதை போலீஸில் கொடுத்ததாகவும், போலீஸார் கேசட்டைப் பெற்று, சென்னைக்குஅனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.
இரு மாநில அரசுகளின் தூதராக வீரப்பனைச் சந்திக்கச் சென்றுள்ள கோபால் மூலம் கேசட் வராதது வியப்பையும்,கேள்விகளையும் எழுப்பியது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து எங்களுக்குஎதுவும் தெரியாது. கேசட் பாண்டிச்சேரி வழியாகத்தான் சென்னைக்கு வந்துள்ளது. அரசியல் காரணங்கள் ஏதும்இருக்கலாம் என்று நினைக்கிறோம் என்றார்.
கேசட்டில் உள்ள ராஜ்குமார் பேச்சு விவரம்:
நடிகர் ராஜ்குமார் பேச்சு அடங்கிய கேசட்டில் உள்ளதாவது:
நான் நலமாக இருக்கிறேன். வீரப்பன் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடத்தல் ஒரு விபத்து மாதிரிநடந்து விட்டது.
என்னைக் காப்பாற்றுவதற்காக இரு மாநில அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அதே போலஎனது ரசிகர்களும் பொறுமைகாத்து தமிழ் மக்கள் மீது எந்தத் தாக்குதலையும் தொடுக்கக் கூடாது.
விரைவிலேயே நான் வந்து சேருவேன். தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது எனக்குத்தான் கெட்டபெயரை ஏற்படுத்தும். அதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாம் என்று கர்நாடக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ரேடியோ மூலம் எனது குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைகளை நானும் கேட்டேன். என்னைப் பற்றி அவர்கள்யாரும் கவலைப்பட வேண்டாம்.
வீரப்பன் என்னை ஒரு சகோதரன் போல பார்த்துக் கொள்கிறார். இது எனக்கு ஒரு புதிய அனுபவமாகும்.வீரப்பனின் பிரச்சினைகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். அவரிடம் சில கோரிக்கைகள் உள்ளன. அவர் மனதில்ஏதோ உள்ளது. அதைப் புரிந்து கொண்டு அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற இரு மாநில அரசுகளும் முயலவேண்டும்.
வீரப்பன் காட்டு வாழ்க்கையிலிருந்து, திரும்பி, பொது வாழ்க்கைக்கு வர விரும்புகிறார். நாம் அதற்கு அனுமதி தரவேண்டும். தன்னைத் திருத்திக் கொள்ள வீரப்பனுக்கு ஏன் ஒரு வாய்ப்புத் தரக் கூடாது?
எங்களை மீட்பதற்காக போலீஸ் உள்பட யார் வந்தாலும், நாங்கள் தப்பி விடுவோம்.ஆனால் உங்களது உயிருக்குநாங்கள் உத்தரவாதம் இல்லை என்று வீரப்பன் என்னிடம் கூறியுள்ளார்.
ஜூலை 30-ம் தேதி இரவு எனது வீட்டிலிருந்து வீரப்பன் என்னைக் கடத்தியபோது, நானாகவே அவருடன்கிளம்பினேன் என்றார் ராஜ்குமார்.
இதற்கிடையே, ராஜ்குமார் கேசட் குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், ராஜ்குமார் பேச்சைநான் இன்னும் கேட்கவில்லை. அதைக் கேட்டபின் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.
ராஜ்குமார் பேச்சு அடங்கிய கேசட்டின் பிரதியை அனுப்பும்படி உதயா டி.வி. நிறுவனத்திடம் கோரியுள்ளேன்.அதன் பிறகு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications