கருணாநிதி, கிருஷ்ணா என்ன செய்யப் போகிறார்கள்?
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வீரப்பன் கூறியுள்ள நிலையில், அவரை பத்திரமாகமீட்பது மற்று இரு மாநில மக்களுக்கிடையே கசப்புணர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ஆகிய பெரும் பொறுப்புகள், தமிழக , கர்நாடகமுதல்வர்களின் தலையில் விழுந்துள்ளது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் 7 நாட்கள் ஆகிவிட்டன. வீரப்பனின் 10 கோரிக்கைகள் வெளியாகியுள்ளன.
சென்னைக்குச் செல்லும் முன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பனிடமிருந்து புதிய தகவல்கள் எதுவும் வரவில்லை. வீரப்பன்தனது நிபந்தனைகள் குறித்து எந்தவிதக் கெடுவும் விதிக்கவில்லை. ராஜ்குமாரை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக
இருக்கிறோம்.ராஜ்குமாரை மீட்க என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார்.
கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கிடையே நெடுங்காலமாக இருந்து வரும் காவிரிப் பிரச்சனையால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பற்றநிலை உள்ளது. இந்நிலையில் கர்நாடக மக்களால் பெரிதும் உயர்வாக மதிக்கப்படும் நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியிருப்பது கர்நாடகத்தில் வாழும்தமிழர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்குமார் கடத்தப்பட்ட விவரம் தெரியவந்தவுடனேயே தமிழர்களை குறி வைத்துத் தாக்குவது துவங்கியது. தமிழ் பத்திரிக்கை அலுவலகங்கள்தாக்கப்பட்டது. பெங்களூர் நகரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான மார்க்கெட், காக்ஸ்டவுன்,காடுகொண்டனஹள்ளி, மாகடி ரோடு பகுதிகளில் வன்முறை வெடித்தது.
தமிழ்நாடு பதிவுஎண் கொண்ட வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும், தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப்பகுதியில் பஸ்போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
இந்நிலையில் இருமாநில அரசுகளும் வீரப்பனின் 10 கோரிக்கைகள் குறித்து தெளிவான முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள்எடுக்கும் எந்த முடிவும் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எந்தவிதப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், எதிர்காலத்தில் அவர்கள்பிரச்சனையின்றி வாழ வழிவகுக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
சிறந்த நிர்வாக அனுபவம் கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் இந்த சிக்கலை எப்படித் தீர்க்கப் போகிறார்கள்என்பதை இரு மாநில மக்களும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications