பெரியார் பிறந்த நாள்: ஜெ. மூப்பனாரின் தடபுடல் ஏற்பாடுகள்
சென்னை:
பெரியாரின் 122-வது பிறந்த நாள் விழா சென்னையில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது.
இவ் விழாவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்குகிறார். விழா ஏற்பாடுகளை தமாகாதலைவர் மூப்பனார் கவனிக்கிறார். இத் தகவலை திராவிடர் கழக செயலர் கி. வீரமணி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களின் அவர் மேலும் கூறுகையில்,
மதச்சார்பின்மையை வலியுறுத்தி வரும் தமிழக தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பெரியாரின் 122-வதுபிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ் விழாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் கவனிக்கிறார். விழாவை எப்படி நடத்துவது,விழாவுக்கு யார், யாரை அழைப்பது என்பது பற்றி விழாக் குழு முடிவு செய்யும் என்றார் வீரமணி.
விழா ஏற்பாடுகளைக் கவனிக்க உள்ள மூப்பனார், நிருபர்களிடம் கூறுகையில், பெரியாரின் கொள்கைகள் மக்கள்மனதில் ஆழமாகப் பதியவேண்டும். அதற்கான ஒரு நடவடிக்கையாக இவ் விழாவை சிறப்பாக நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள் தேவே கவுடா, வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால், சீதாராம் கேசரி, ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பரதன், கான்ஷிராம், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நூற்றாண்டின் முதல் விழா என்பதால் பெரியாரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட முடிவுசெய்துள்ளோம். இக் கூட்டத்துக்கும் தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலுக்கும் எந்தசம்பந்தம் இல்லை என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications