நடுக்காடு: வீரப்பன்..ராஜ்குமார்..கோபால்..வீடியோ
சென்னை:
வீரப்பன் என்னை அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்கிறார். யாரும் கவலைப்பட வேண்டாம் என்று நடிகர் ராஜ்குமார் கூறியிருக்கிறார்.
நக்கீரன் கோபால், காட்டில் ராஜ்குமார், வீரப்பன் ஆகியோரை சந்தித்துப் பேசிய வீடியோ கேசட் ஒன்றைக் கொண்டு வந்தார்.
சுமார் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தக் கேசட்டில் பதிவாகியுள்ள விவரங்கள் வருமாறு:
நடுக்காடு. காட்டுக்குள் மரங்களை மறைத்தபடி கறுப்புப் போர்வை கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்பு பல போர்வைகள் விரிக்கப்பட்டுள்ளன.
அதில் கடத்தப்பட்ட ராஜ்குமார், அவரது உறவினர்கள் அமர்ந்துள்ளனர். சிறிது தூரத்திலிருந்து நக்கீரன் கோபால் வருகிறார்.
நடிகர் ராஜ்குமார்: நமஸ்காரம் வாங்க! வாங்க!
கோபால்: ஐயா வணக்கம். எப்படி இருக்கீங்க.
ராஜ்குமார்: நல்லா இருக்கேன். (எல்லாரும் விரிக்கப்பட்ட போர்வையில் அமர்கிறார்கள்)
கோபால்: என்ன சார் நடந்தது?
ராஜ்: காஜனூர் பண்ணை வீட்டில இருந்தோம். அப்போ அடையாளம் தெரியாத சிலர் வந்து யார் ராஜ்குமார்ன்னு கேட்டாங்க. நான் முதலில் வருமானவரிஅதிகாரிகள் என்று நினைத்தேன். பெரிய மீசையைப் பார்த்தப்புறம் தான் வீரப்பன்னு தெரிஞ்சது.
யாரையும் எதுவும் செஞ்சுடாதே வீரப்பா. நானே வந்து விடுகிறேன் என்று சொன்னேன். என் மனைவி வருத்தம் அடைந்தார். யாரும் சத்தம் போடவேண்டாம் என்றேன். அப்போது என்னுடன் இருந்த இவர்களையும் வீரப்பன் கடத்திக் கொண்டு வந்தார்.
கோபால்: இரு மாநில முதல் அமைச்சர்களும், அம்மாவும் உங்களுக்கு இந்த மருந்துகளை கொடுத்தனுப்பினார்கள். (ஒரு கவரைக் கொடுக்கிறார்.அதை ராஜ்குமார் பிரித்துப் பார்க்கிறார்)
அப்போது அங்கு வீரப்பன் வருகிறான். அவன் துப்பாக்கி அணிந்தபடி சீருடையில் இருக்கிறான். அவன் தோளில் பை ஒன்று தொங்குகிறது. நக்கீரன்கோபாலுடன் பேசுகிறான் வீரப்பன்.
பின்னர் வீரப்பன் 100 அடி தூரம் நடந்து சென்று சாமி கும்பிடுகிறான். அவன் கையில் துப்பாக்கி இருக்கிறது.
ராஜ்குமார் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கிறார். அவருடைய வேட்டியில் காட்டு முள் ஒன்று இருக்கிறது. அவர் சிரித்துக்கொண்டே அந்த முள்ளைஎடுத்து எறிகிறார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களை உணகிறார் ராஜ்குமார்.
கோபால்: நீங்கள் கடத்தப்பட்டதால் நாட்டில் மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டத்துடன் உள்ளனர். அங்கே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலஅரசுகளும் என்னை அனுப்பியதால் நான் வந்துள்ளேன்.
ராஜ்: அது சரி.
கோபால்: உங்கள் ரசிகர்கள், அம்மா எல்லாரும் கவலையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காக நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
ராஜ்: நான் கடத்தப்பட்டதை ஒரு விபத்தாகக் கருதுகிறேன். ரசிகர்களும், வீட்டிலிருப்பவர்களும் கவலைப்படுவது சகஜம்தான். என்னை டெலிவிஷன் மூலம்பார்த்தால் அவர்களுக்கு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கும்.
(மேற்கண்டவாறு தமிழில் பேசிவிட்டு கன்னடத்தில் பேசத் தொடங்குகிறார்)
நான் காட்டில் நலமுடன் இருக்கிறேன். நான் இங்கே நிம்மதியாக இருப்பது போல் நீங்கள் அங்கே நிம்மதியாக இருங்கள். ரசிகர்களுக்கு துக்கம் ஏற்பட்டுஇருப்பதும், தொந்தரவு ஏற்பட்டு இருப்பதும் சகஜம்தான். என்றாலும் அன்பு, பாசம் என்பவை நிலையானவை. உங்கள் அன்பினால் நான் கண்டிப்பாகநலமுடன் வந்து சேர்வேன்.
வீரப்பன் என்னை மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்கிறார். இரண்டு மாநில முதல்வர்களும் வீரப்பனின் கோரிக்கைகளைபரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு தாய் ராஜராஜேஸ்வரி கருணை காட்ட வேண்டும்.
என் மனைவி மற்றும் எங்கள் உறவினர்கள் ரேடியோவில் பேசியதைக் கேட்டேன். அவர்களுக்கு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம். நான் உங்களைஎல்லாம் பார்க்க வருவேன். எனக்கு இது வாழ்வில் தேவையான அனுபவமாகத்தான் இருந்தது.
யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார். அத்துடன் அந்தக் கேசட் முடிகிறது.












Click it and Unblock the Notifications