தமிழ் தீவிரவாதிகள் விடுதலை குறித்து கருணாநிதி மீண்டும் ஆலோசனை
சென்னை:
வீரப்பன் விதித்த நிபந்தனைப்படி தமிழக சிறையில் உள்ள 5 தமிழ் தேசிய விடுதலைப் படை தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதிகோட்டையில் திங்கள் கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ் தேசிய விடுதலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகள் ஐந்து பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் (என்.எஸ்.ஏ.) வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவர்களில் இருவர் இப்படையின் தலைவன் மாறனின் நெருங்கிய கூட்டாளிகள். மற்ற மூவர் கும்பகோணம் வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள்.ஐந்து பேர் மீதும், விடுதலைப் புலிகளுக்கு பெட்ரோல், மருந்து கடத்தியதற்காக தடா சட்டத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வெள்ளி திருப்பூர் காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை கொள்ளை அடித்தது, அதிரடிப் படை காவலரை கொன்றது, ராட்சத டி.வி. கோபுரத்தை வெடிகுண்டுவைத்து தகர்த்தது தொடர்பான வழக்குகளும் உள்ளன.
இந்த வழக்குகள் அனைத்திலும் இருந்து இவர்களை விடுவித்தால் தான் வீரப்பன் நிபந்தனையை நிறைவேற்ற முடியும். அதற்கான சாத்தியக் கூறுகள்குறித்து இந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி விவாதித்தார்.
உயர்நீதிமன்ற அனுமதியுடன் இந்த வழக்குகளில் இருந்து இந்த ஐவரையும் விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிடலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications