ரசிகர்கள் காட்டுக்குச் செல்ல வேண்டாம்: ராஜ்குமார் மகன்கள் வேண்டுகோள்
பெங்களூர்:
ராஜ்குமாரின் ரசிகர்கள் யாரும் அவசரப்பட்டு சத்தியமங்கலம் காட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று ராஜ்குமார் குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார் மற்றும் ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர் பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஜூலை 30 ம் தேதி எங்கள் அப்பா ராஜ்குமார், வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். அவர் அங்கு பத்திரமாகஇருக்கிறார் என்று இரு மாநில அரசுத் தூதர் கோபால் மூலம் தெரிந்து கொண்டோம்.
அவர் கண்டிப்பாக இன்னும் 5 அல்லது 6 நாட்களில் விடுவிக்கப்பட்டு விடுவார் என்று நம்புகிறோம். எங்கள் தந்தையை விடுவிப்பது தொடர்பாக தமிழக,கர்நாடக அரசுகள் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது எங்களுக்குத் திருப்திகரமாக உள்ளது.
இதனால் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவசரப்பட்டு காட்டுக்குச் செல்ல வேண்டாம். அது சில நேரங்களில் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும். திங்கள்கிழமை காலை பத்திரிக்கைகளைப் பார்த்ததில் ராஜ்குமார் ரசிகர்கள் பலர் காட்டுக்குச் சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
யாரும் காட்டுக்குச் செல்ல வேண்டாம். அரசுத் தூதர் கோபால் மீண்டும் காட்டுக்குச் செல்கிறார். அவர் இந்த முறை திரும்பும்போது நல்ல பதிலுடன்திரும்புவார் என்று நம்புகிறோம். எங்கள் தந்தையை வீரப்பன் அன்புடன் நடத்துவதாகவும், அந்த சூழ்நிலையை அவர் மிகவும் தைரியமாக சந்திப்பதாகவும்கோபால் தெரிவித்தார். இது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications