மீண்டும் வந்தனர் மயக்க பிஸ்கட் கொள்ளையர்கள்
சென்னை:
ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்த கும்பலை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.
வட மாநிலங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து அவர்களிடமிருந்து நகைமற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததையடுத்து தமிழக ரயில்வே ஐ.ஜி திலகவதி தலைமையில்தனிப்படை அமைக்கப்பட்டது.
இப்படையினரின் தீவிர நடவடிக்கையால் ரயில்களில் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து இக்கும்பலின் கைவரிசை கடந்த சில நாட்களாகக் குறைந்திருந்தது.
இந்நிலையில், இத்தகைய கும்பல் மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. ஹவுரா மெயிலில் சென்னை வந்து கொண்டிருந்த பயணிகளிடம் இக்கும்பல் நகை,பணத்தைக் கொள்ளையடித்துள்ளது.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி ஷீல், நாராயணம் ஷீல் உள்பட 5 பேர் ஹவுரா மெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை இந்தரயில் சென்னை வந்தது. ரயில் நின்ற பிறகு ரயில் பெட்டியைச் சுத்தம் செய்ய துப்பரவுப் பணியாளர்கள் வந்தனர். அப்போது 5 பேரும் மயக்கமுற்றுஇருந்தனர். அவர்களது உடைமைகள் ஏதும் இல்லை. உடனடியாக அவர்கள் 5 பேரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மயக்கம் தெளிந்து அவர்களை விசாரணை நடத்திய பிறகு தான் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு தெரிய வரும் என்று ரயில்வே போலீஸார்தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications