கோபால் பற்றி மூச்!" ... ஜெ.வுக்கு கோர்ட் தடை
சென்னை:
நக்கீரன் கோபால் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்க அதிமுக பொதுச் செயலாளர் அதிமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான். கடத்தப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் நக்கீரன்கோபால் ஈடுபட்டுள்ளார்.
தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் தூதராக காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் கோபால் பேசி வருகிறார்.
இந் நிலையில், நக்கீரன் கோபால் பற்றி சில கருத்துக்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
கோபாலை வீரப்பனின் ஏஜென்ட் என்றும் பிளாக் மெயில் செய்பவர் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் மனுத் தாக்கல் செய்தார்.
தன்னை அவதூறாக விமர்சித்த ஜெயலலிதா ரூ. 10.5 லட்சம் மானநஷ்ட ஈடு தரவேண்டும் என்று தனது மனுவில் கோபால் கூறியுள்ளார்.
ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தில் அரசுத் தூதராகத்தான் வீரப்பனைச் சந்திக்க நான் சென்றுள்ளேன்.
கர்நாடகத்தில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் அமைதியான வாழ்க்கைக்காகவே இம் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். இதில்சொந்த விருப்பம் ஏதும் இல்லை.
ஜெயலலிதா இவ்வாறு என்னை தொடர்ந்து விமர்சித்து வந்தால் எனது பெயருக்குக் களங்கம் ஏற்படும்.
ஆகவே என்னை இனிமேல் அவதூறாக விமர்சிக்க ஜெயலலிதாவுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று தனது மனுவில் கோபால் கூறியிருந்தார்.
கோபாலின் இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராமமூர்த்தி, நக்கீரன் கோபாலை இனிமேல் அவதூறாக விமர்சிக்க ஜெயலலிதாவுக்குஇடைக்காலத் தடை விதித்தார்.
மேலும், கோபால் தாக்கல் செய்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications