ராஜ்குமாரை மீட்க ஏற்பாடுகள் தயார் .. கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்று கர்நாடக போலீஸ் அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக இரு மாநில அரசுகளின் தூதராக நக்கீரன் கோபால் 28 ம் தேதி 3 வது முறையாக காட்டுக்குச் செல்கிறார். இருமாநில அரசுகளும் வீரப்பனின் கோரிக்கையை நிறைவேற்ற தீவிரம் காண்பித்து வருகின்றது. இந்த முறை எப்படியாவது ராஜ்குமாரை மீட்டு வந்துவிடுவேன் என்று கோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தடா கைதிகள் ஜாமீன் வழக்குவிசாரணைக்குப் பின் அதன் முடிவுகள் உடனடியாக அரசு தூதர் கோபாலிடம் தெரிவிக்கப்படும்.
நீதிபதி சதாசிவ கமிஷனின் அறிக்கை வெளிவந்ததும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கர்நாடக அரசு சார்பில் ரூ 5 கோடி ஒதுக்கி உள்ளது.இதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
ராஜ்குமாரை விடுவிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இரு மாநில அரசுகளும் துரிதப்படுத்தியுள்ளன என்றார் மல்லிகார்ஜூன கார்கே.
இதற்கிடையே, கோலாரில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் எப்போது முடிவடையும் என்றபோது, விரைவில் நல்ல தகவல் வரும் என்றார்.












Click it and Unblock the Notifications