"ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி"
கே: சமீபத்தில் ஆந்திராவில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டவெள்ளத்தால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும்,ஆயிரக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுவதுபற்றி...?
ப: இந்த பெருமழையின் விளைவாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது மனச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நிவாரணப் பணிகளைஆந்திர அரசு முனைந்து நடத்தும் என்று எதிர்பார்ப்பதைத் தவிர, சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
கே: முன்ளாள் பிரதமர் வி.பி.சிங் கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றதற்காக, அரசு ஆறு கோடி ரூபாய் செலவு செய்திருப்பதான செய்திஉண்மையா, பொய்யா?
ப: உண்மைதான்.
கே: சந்தன வீரப்பனுக்கு மயக்க வாயு செலுத்தி பிடிக்கலாம் என்ற ஹெக்டேயின் யோசனை குறித்து...?
ப: இதைவிட, அவனுக்கு கிச்சு கிச்சுமூட்டி, அவன் சிரிப்பில் சிக்கித் தவிக்கும் போது, ராஜ்குமாரை மீட்டுக் கொண்டு வந்து விடலாம்.
கே: சந்தனக் கடத்தல் வீரப்பனை விடுங்கள். அவர் மனைவியின் பேட்டியும் நாள் தவறாமல் பத்திரிக்கைளில் வருவதைப் பார்த்தீர்களா...? இது எதைக்காட்டுகிறது?
ப: நமக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
கே: ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் மூழ்கி, 118 பேர் மரணம் பற்றிய நிகழ்ச்சி குறித்து உங்கள் கருத்து...?
ப: பரிதாபம். விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்துதான் என்ன? விதியை வெல்ல முடியவில்லை.
கே: நம் நாடு எப்போது அமெரிக்கா போன்று வளம் கொழிக்கும் நாடாக ஆகும்?
ப: அமெரிக்காவைப் போல நமது ஜனத்தொகை குறைகிறபோது.
கே: மத்திய அமைச்சரும், தமிழக பிரமுகருமான ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மரணம் குறித்து...?
ப: இளம் வயதிலேயே மரணம் அடைந்து விட்ட குமாரமங்கலத்தின் மறைவு- ஓர் உற்சாகம் மிகுந்த அரசியல்வாதியை, நாட்டிலிருந்து பறித்து விட்டது.
பழகுவதற்கு இனியவர்; பேச்சுத்திறன் உடையவர்; உழைப்புக்கு அஞ்சாதவர்; விஷய ஞானம் உள்ளவர். அவருடைய குடும்பத்தாருக்கு துக்ளக் தனதுஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
கே: மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு கருணாநிதி காட்டும் மரியாதைக்கும் அல்லது உபசரிப்புக்கும்; ஜெயலலிதா காட்டும் மரியாதை அல்லதுஉபசரிப்புக்கும் - என்ன வேறுபாடு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ப: மாற்றுக் கட்சித் தலைவர்களை சிறிய கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி, சந்திக்கிற போது, கருணாநிதி காட்டுகிற மரியாதையில், ஒருகுறைவும் இருக்காது; சரி சமமான கவுரவம் நடத்துவார்.
ஜெயலலிதா உன் அதிர்ஷ்டம், என்னை சந்திக்கிற பெருமை உனக்குக் கிட்டியிருக்கிறது. - அதை காப்பாற்றிக் கொள் என்று கூறாத குறையாகநடத்துவார்,
இவ் விஷயத்தில் இவர்கள் இருவருக்குமிடையே பெரிய வித்தியாசம் உண்டு என்பதை பல அரசியல்வாதிகள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.
கே: நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே எனக் கூறும் நக்கீரன் பரம்பரையில் வந்தவர் எங்கள் தலைவர் புரட்சித் தலைவி -என்று காளிமுத்து பறை சாற்றியுள்ளாரே...?
ப: போனால் போகிறது விடுங்கள். வீரப்பன் விவகாரம் மீண்டும் தொடங்கியதிலிருந்து நக்கீரன் காம்ப்ளக்ஸ்ஸில் சிக்கித் தவிப்பவர்கள், இப்படிஎதையாவது பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. கொஞ்ச நாளில் சரியாகி விடும்.
கே: மூப்பனார் கருத்துக்கு ஒரு ராசி உண்டு. அவர் தவிட்டைத் தொட்டால் கூட அது தங்கமாகும்; தவளையைத் தொட்டால் அது சிங்கமாகும் என்றகாளிமுத்துவின் வர்ணனை பற்றி...?
ப: ஜெயலலிதா தவளையா, தவிடா? காளிமுத்து அதைச் சொல்லவில்லையே?
கே: காந்தி கனவை நனவாக்கியவர் கருணாநிதி என்று வைகோ கூறுகிறாரே?
ப: காந்தியைப் பற்றி ஊருக்குத் தெரிந்ததை வைத்துப் பார்க்கும் போது, வைகோ எதைக் குறிப்பிடுகிறார் என்பது புரியவில்லை. காந்தி எப்போதாவதுவைகோவை தனிமையில் சந்தித்து, யாரிடமும் சொல்லாத தனது கனவு எதையாவது சொல்லியிருப்பாரோ, என்னவோ!
கே: ஊழல் என்ற முத்திரை குத்தப்பட்ட பின்பு கூட, சில அரசியல்வாதிகள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது அல்லது அவர்களுக்கு மக்கள் ஆதரவுகணிசமாக இருப்பது ஏன்?
ப; ஆட்சியில், அதிகாரத்தில், இருப்பவர்கள் கொஞ்சம் எடுக்கத்தான் செய்வார்கள் - என்ற எண்ணம் நம்மிடையே ஆழமாகப் பதிந்து விட்டது.
ஒழுங்காக இருப்பவர்களைப் பற்றிக் கூட மற்றவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், கொஞ்சம் எடுக்காமலா இருந்திருப்பார்? என்று நினைக்கிறஅளவுக்கு, இந்த எண்ணம் நம்மிடம் வேரூன்றி விட்டது.
அதனால், ஊழலைப் பெரிய தவறாக நினைக்க நம் மனம் இடம் தரவில்லை.
கே: நக்கீரன் இதழில் சின்னக்குத்தூசி, தங்களை கடுமையாக விமர்சனம் பண்ணி இருப்பது பற்றி...?
ப: அவருக்கு என்னைக் கண்டால் பிடிக்கும். அதனால் எனக்கு நல்ல விளம்பரம் தந்திருக்கிறார்.
கே: எப்போதும், எல்லாச் சமயத்திலும் உண்மையே பேசுபவர்களைக் கண்டால் என்ன செய்வீர்கள்?
ப: ரொம்ப ஆபத்தான ஆசாமி - என்று நினைத்து ஒதுங்கி விடுவேன்.
கே: காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மும்முனைத் திட்டத்தை பா.ஜ.க. அரசு செயல்படுத்த உள்ளது - என்று வெங்கையா நாயுடு அறிவித்துள்ளாரே...?
ப: அமெரிக்க ஆலோசனையைக் கேட்பது; தீவிரவாதிகளுடன் சமரசம்; அந்த முயற்சி தோற்றவுடன் மீண்டும் முயற்சி - என்ற மும்முனைத் திட்டத்தைத்தவிர, வேறெதையும் காணோம்!
கே: தமிழ் மொழி கண் போன்றது; ஆங்கில மொழி கண்ணாடி போன்றது என்று அமைச்சர் தமிழ்க்குடிமகன் வர்ணித்துள்ளது பற்றி...?
ப: சரி.கண்ணாடி போடுகிறவர்கள் எல்லோருமே அழகுக்காகப் போடுகிறவர்கள்தான்என்று நினைத்து, அவசியத்துக்காக கண்ணாடி போடுகிறவர்களின்கண்ணாயை அமைச்சர் பிடுங்கி எறியக்கூடாது.
கே: சின்ன வயதில் தாங்கள் செய்த சிறுபிள்ளைத்தனமான செயல் ஏதாவது...?
ப: பள்ளிக்கூடத்தில் படித்ததுதான்.
கே: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை - நான்காவது என்ன ஆசை?
ப: தன்னாசை - இது மற்ற மூன்றுக்குமே காரணமான ஆசை.
கே: தமிழகத்தில் அடுத்து அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்று மூப்பனார் முன்னிலையில் ஜெயலலிதாவும்; அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று நிருபர்களிடம் மூப்பனாரும் கூறி வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: விஷயம் இதுதான். சொல்கிறபடி கேட்டு இருந்தால் இருங்கள்; இல்லாவிட்டால் போங்கள் என்று ஜெயலிலதா சொல்லிவிட்டார்; எங்கேபோவது என்பது இன்னமும் தெரியவில்லைஎன்று மூப்பனாரும் சொல்லியிருக்கிறார்.
கே: இம் முறை ஒலிம்பிக் போட்டியில், நமக்கு ஏதாவது பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
ப: வெற்றி பெற்ற நாடுகளின் முகாமில் புகுந்து, கையில் கிடைத்த பதக்கத்தை திருடிக் கொண்டு வந்தால்தான் உண்டு.
கே: பேராசை பிடித்தவர்களின் அதிகம் ஆண்களா, பெண்களா?
ப: ஆண்கள்தான்.பெண்களுக்கு பேராசை இருக்கக் கூடாது என்று ஆண்கள் ஆசைப்படுகிறார்களே - இதை விட ஒரு பேராசை இருக்க முடியுமா?
கே; அரசு மருத்துவமனையில் காச நோய் வார்டு இடிந்து விழுந்து ஒருவர் மரணம் - இது பற்றி உங்கள் விமர்சனம்?
ப: சிகிச்சை செய்துதான் கொல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் ஆஸ்பத்திரிகளுக்கு இல்லை.












Click it and Unblock the Notifications