இது நியாயமா அப்பா? ராமதாஸிடம் புலம்பிய ஸ்ரீகாந்தி! அன்புமணி தான் எல்லாம்.. ஒரே வரியில் முடித்த அய்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையேயான சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில் தந்தை மகன் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக பாட்டாளிகள் உற்சாகத்தில் இருந்தனர். தற்போது பாட்டாளி மக்கள் கட்சியில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. தந்தையும் மகனும் சமரசம் செய்து கொண்ட நிலையில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியும், கட்சியின் தலைவராக இருந்த ஜிகே மணியும் கட்சிக்குள் வரவே கூடாது என அன்புமணி ராமதாஸ் ரெட் கார்ட் போட்டு விட்டாராம். இதனால் ஸ்ரீகாந்தியும் ஜிகே மணியும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சொல்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் கட்சியின் எதிர்காலம் கருதி தலைவராக பதவி உயர்த்தப்பட்டார். தொடர்ந்து தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முடிவுகளை அன்புமணி ராமதாஸ் மட்டுமே எடுத்து வந்தார்.

PMK

இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸிடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது.

பாமக

அந்த மோதல் பின்னர் தீவிரமடைந்து இருவரும் தனித்தனியாக செயல்படும் சூழல் உருவானது. இதனால் பாமக என்ன ஆகுமோ? என்ற கேள்வி அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. ராமதாஸ் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் கட்சி முழுமையாக அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ராமதாஸ்

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ராமதாஸ் அணியில் இருந்த சில பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி தலைமையை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 24ஆம் தேதி டாக்டர் ராமதாஸின் 61 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. அப்போது தைலாபுரம் தோட்டத்திற்கு தனது மனைவி, மகள்கள், பேரன் பேத்திகளுடன் சென்ற அன்புமணி ராமதாஸ் தனது தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது கண்ணீர் மல்க மகனை கட்டித்தழுவி ராமதாஸ் கண்கலங்கிய காட்சி பாமக தொண்டர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அன்புமணி ராமதாஸ்

இதன் மூலம் தந்தை மகன் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கட்சி மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதுமட்டுமில்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியையும் வன்னியர் சங்கத்தையும் முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பை அன்புமணியிடம், ராமதாஸ் ஒப்படைத்து விட்டார் எனவும், இனி கட்சி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் அன்புமணியின் வசம் சென்று விட்டதாக தைலாபுரம் வட்டாரங்கள் கூறினர்.

ஜிகே மணி

ஆனால் இந்த முடிவு காரணமாக சிலர் மன வருத்தத்தில் இருக்கின்றனர். குறிப்பாக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, கட்சியின் கௌரவ தலைவராக அறிவிக்கப்பட்ட ஜிகே மணி, முன்னாள் எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாநில நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த அன்புமணி திட்டமிட்டு இருந்தார். அந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முரளி சங்கர் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

ஸ்ரீகாந்தி

அதே நேரத்தில் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீகாந்தி, ஜி கே மணி, அருள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தனர். மேலும் முரளி சங்கரும் சில கருத்துக்களை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே ராமதாஸை நேரில் சந்தித்த மூத்த மகள் ஸ்ரீகாந்தி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அன்புமணி தான்..

"கட்சி நெருக்கடியான சூழலில் இருந்தபோது உங்களுக்கு துணையாக இருந்தேன். செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டேன். ஆனால் என்னை ஓரங்கட்டியதோடு என்னை நம்பி வந்த நிர்வாகிகளையும் ஓரம் கட்டியது நியாயமா?" என கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் கட்சியின் எதிர்காலம் அன்புமணி தான் என ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.

தைலாபுரம் விசுவாசிகள்

அதே நேரத்தில் கட்சி மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக சிலர் தகவல்களை தெரிவித்து வரும் நிலையில், அப்படி எல்லாம் இல்லை. தந்தை மகன் இணக்கம் ஏற்பட்ட பிறகு வேறு யாருக்கும் இதில் முக்கியத்துவம் வழங்கப்பட தேவையில்லை. ஸ்ரீகாந்தி, ஜி கே மணி ஆகியோர் ஏற்கனவே ஓரம் கட்டுப்பட்டு விட்டார்கள். இனி அன்புமணி ராமதாஸ் தான் எல்லாம். அவர் மட்டும்தான் முடிவு எடுப்பார். அதற்கு ராமதாஸ் துணை நிற்பார்" என உறுதியாக சொல்கின்றனர் தைலாபுரம் விசுவாசிகள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+