திமுக -அதிமுக இடைத்தேர்தலில் கூட்டணி வைக்கிறது? விஜய் அப்படி சொல்ல காரணம் என்ன? ரியல் பின்னணியே வேறு
கரூர்: முதல்வர் விஜய் கரூரில் பேசும் போது அதிமுக - திமுக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். தவெகவை வீழ்த்த இவர்கள் எல்லாம் கூட்டணி வைக்க போகிறார்கள் என்று கூறி இருந்தார். விஜய்யின் இந்த புகாருக்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது திமுக, அதிமுக மீது கடுமையாக குற்றச்சாட்டு வைத்து இருந்தார். தீயசக்தி திமுக, தீர்ந்துபோன சக்தி அதிமுக என்று குற்றச்சாட்டு வைத்தார்.
விஜய் பேச்சு
விஜய் தனது பேச்சில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு அதிக வலியை தந்தது. எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும் அந்த வலி மாறாது. வாழ்வின் மிகப்பெரிய வலி.. காவல்துறை நினைத்திருந்தால் கரூர் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.. கரூர் நெடுஞ்சாலையில் இருந்து கூட்டத்திற்கு அழைத்து வந்து காவல்துறை நாடகம் ஆடியது.

கரூர் சம்பவத்தின் மூளை யார்? கரூரில் என் அக்கா, தங்கைகளை இழந்தேன்.. குழந்தைகளை இழந்தோம்.. அந்த பழியை எங்கள் மீது தூக்கி போட்டீர்கள்.. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல.. பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம்.
ஒவ்வொரு முகமூடியாக கிழிகிறது.. திரும்பிய பக்கம் எல்லாம் கதறல்.. கதறல்.. கதறல்.. கட்சி நிதி என்றதுமே எடுத்தார்கள் பாருங்க ஓட்டம்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.. எந்தக் கட்சி என்று கூட நான் சொல்லவில்லை. எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை என்பது போல் அவர்களின் செயல்பாடு உள்ளது.
மக்களை காக்க வச்சு அரசியல் ஆதாயம் தேடுற அரசியல்வாதி நான் கிடையாது; மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்; நமக்கு இவ்வளவு வலியும் காயங்களும் கொடுத்தவங்களுக்கு, 2026-ல் நீங்க தக்க பதிலடி கொடுத்துட்டீங்க; ஆனா அது மட்டும் பத்தாது; காலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கணும்.
வரபோற இடைத்தேர்தலில் மக்களே இந்த தீயசக்தி திமுகவை நல்லா வச்சு வெளுத்து விடுங்க.. நம்பிக்கையா இருங்க.. நல்லதே நடக்கும்! என்று விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி கோபமாக பேசி உள்ளார். மேலும் இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்த அதிமுக - திமுகவினர் எல்லாம் கூட்டணி வைக்க போகிறார்கள் என்று கூறி இருந்தார். விஜய்யின் இந்த புகாருக்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் புகார் காரணம்
இருப்பினும், விஜய்யின் இந்தக் குற்றச்சாட்டுகளை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும் முற்றிலும் மறுத்துள்ளனர். இது போன்ற ஒரு கூட்டணி சாத்தியமே இல்லை என்றும், பல ஆண்டுகளாக நீடிக்கும் தங்களது கொள்கை ரீதியான அரசியல் எதிர்ப்பிற்கு மத்தியில் இப்படி ஒரு இயற்கைக்கு மாறான கூட்டணி ஒருபோதும் அமையாது என்றும் இருதரப்பு வட்டாரங்களும் விளக்கம் அளித்துள்ளன.
இந்த நிலையில், விஜய் இந்த அதிரடி குற்றச்சாட்டை சும்மா வீசிவிடவில்லை என்றும், இதற்குப் பின்னணியில் ஒரு வலுவான அரசியல் நகர்வு இருக்கிறது என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முக்கிய மூத்த தலைவர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகே விஜய் இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூரைச் சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்கள் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த மூத்த தலைவர்கள் தவெகவில் இணைந்த பிறகு, விஜய்யுடன் நடத்திய விரிவான மற்றும் ரகசிய ஆலோசனைகளின் போதே இந்த கூட்டணி குறித்த தகவல்கள் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களின் செயல்பாடுகளை மிக நெருக்கமாகக் கவனித்து வந்த இந்த முன்னாள் அமைச்சர்கள், இடைத்தேர்தலில் தவெகவின் வாக்கு வங்கியைப் உடைப்பதாகக் உள்ளூர் அளவில் இரு கட்சிகளும் ஒருவரையொருவர் அணுசரித்துப் போகத் திட்டமிட்டுள்ளதை விஜய்யிடம் விவரித்ததாகத் தெரிகிறது.
இந்தத் தகவல்களை முழுமையாகக் கேட்டு, அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே, விஜய் கரூர் மேடையில் திமுக மற்றும் அதிமுக மீது இந்த கடுமையான கூட்டணி குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்தார் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications