மீண்டும் ஒரு கார்கில் போரை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி
டெல்லி:
மீண்டும் ஒரு கார்கில் போருக்குப் பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆயுதங்களைக் கொடுத்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஊடுருவவிட்ட தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
இத் தகவலை இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் விஜய் ஓபராய் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவவிட்டு மீண்டும் ஒரு கார்கில் போரை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பூன்ச் மற்றும் ராஜோரி மாவட்டங்களில் முக்கிய இடங்களை ஆக்கிரமிப்பதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான ஆயுத உதவி உள்பட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் செய்து வருகிறது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையில் அத்தகைய பாகிஸ்தான் ஆதரவு ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 82 எம்.எம். ரக ராக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயுதங்களைப் பரிசோதித்தும், கைதானவர்களிடம் விசாரணை நடத்தியும் பார்த்ததில் மீண்டும் ஒரு கார்கில் போருக்குப் பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
தற்போது பூன்ச் மற்றும் ராஜோரி மாவட்டங்களில் எல்லைப் பகுதியில் இந்திய துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஓபராய்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications