கூட்டணி .. முடிவைத் தெரிவிக்குமா த.மா.கா ?
சென்னை:
சென்னையில் திங்கள்கிழமை நடக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து த.மா.கா. கட்சியும், காங்கிரஸ்கட்சியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
த.மா.கா. தலைவர் மூப்பனார் அவசரமாக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை காலை சென்னை சத்தியமூர்த்திபவனில் நடக்கிறது. கூட்டத்திற்கு மூப்பனார் தலைமை தாங்குகிறார்.
இந்தக் கூட்டத்தில் தேர்தலில் யாருடன் கூட்டணி ஏற்படுத்தலாம் என்பது பற்றி விவாதிக்க ப. சிதம்பரம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்திநடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட 15 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள், திங்கள்கிழமை நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, தேர்தலை எப்படி சந்திப்பது? யாருடன் கூட்டணிஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்துவார்கள். பின்னர் ஆலோசனைகள் குறித்த விவரம் மூப்பனாரிடம் வழங்கப்படும். அதைஅவர் பரிசீலித்து தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுப்பார்.












Click it and Unblock the Notifications