மதுரை கொட்டாம்பட்டி ஆம்னி பஸ் விபத்தில் 6 பேர் பலியான சம்பவம்.. தலைவர்கள் இரங்கல்!
மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில், கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் பகுதியில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர் திசையில் திரும்பி, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

கொட்டாம்பட்டி அருகே கோர விபத்து
மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் மீண்டும் இடதுபுறம் திரும்பி, வஞ்சிநகரம் கிராம பயணிகள் நிழற்குடையின் மீதும் மோதியது. நிழற்குடை முழுவதும் சேதமானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன்புறம் சிதைந்த நிலையில், அரசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் முதலில் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் விஸ்வநாதன் இரங்கல்
இந்த விபத்து தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் மேலூர் தொகுதி எம்.எல்.ஏவுமான விஸ்வநாதன் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை இறைவன் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் விரைந்து பூரண குணமடைந்து நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சிறப்பான முறையில் வழங்க தமிழக அரசின் மருத்துவத்துறையை கேட்டு கொண்டுள்ளேன்.
விபத்து குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு, காயமடைந்த அனைவருக்கும் உரிய மருத்துவ உதவிகள், அவசர நிவாரணங்கள் மற்றும் தேவையான அனைத்து அரசின் உதவிகளும் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரில் நானும் பங்குகொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன்
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் மேலூர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், 5 பேர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் மற்றும் மதுரை தெற்கு, வடக்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர்களுக்கு அனைத்துவிதமான உயர்தர சிகிச்சைகளும் கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உயரிய சிகிச்சைகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
