கரூரில் 25000 கோடி கோயில் நிலம் பத்திரப்பதிவு விவகாரம்.. நாளையே விசாரணை.. ஐகோர்ட் அதிரடி
மதுரை: கரூர் மாவட்டத்தில் சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு அண்மையில் நீக்கியது. ரயத்துவாரி நிலங்களையும் கோயில் நிலம் என்று தவறுதலாக தடை விதிக்கப்பட்டிருந்தது என்று 10 ஆயிரம் மக்கள் போராடி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு அண்மையில் நீக்கியது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள், முறையாக வழக்கு தாக்கல் செய்தால் உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்கள். இந்த சூழலில் இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை டாக்டர்.டி.ஜி.வினய் ஐஏஎஸ், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஜூலை 9ம் தேதி எழுதியள்ள கடிதத்தில் திருக்கோயில் பெயரில் உள்ள நிலங்களின் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டது .தவறுதலாக தனி நபர்கள் பெயரில் உள்ள நிலங்களும் தடை செய்யப்பட்டது . அவ்வாறு தவறுதலாகத் தடை செய்யப்பட்ட தனிநபர்களின் நிலங்களை தடை நீக்கம் செய்ய கரூர் கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கோயில் நிலங்களின் விவரங்கள் பின்வருமாறு:

கரூர் மாவட்டம் புகழிமலையில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 3 கிராமங்களில் நிலங்கள் உள்ளன. இதில் 214 ஏக்கர் நிலங்கள் தடை நீக்கப்படுகிறது. இதில் பட்டதாரர்களின் எண்ணிக்கை 719 ஆகும். அதேபோல் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 4 கிராமங்களில் நிலங்கள் உள்ளன. இதில் 204 ஏக்கர் நிலங்கள் தடை நீக்கப்படுகிறது.இதில் பட்டதாரர்களின் எண்ணிக்கை 637 ஆகும். இதேபோல் குப்புச்சிபாளையம் அருள்மிகு ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 1 ஒரு கிராமத்தில் உள்ள நிலங்களில், 132 ஏக்கர் நிலங்கள் தடை நீக்கப்பட்டுள்ளது.
இதில் பட்டதாரர்களின் எண்ணிக்கை 334 ஆகும். அடுத்ததாக வெஞ்சமாங்கூடலூரில் உள்ள அருள்மிகு விக்ருதீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் உள்ளது. இதில் 2533 ஏக்கர் நிலங்களின் மீது உள்ள தடை நீக்கப்படுகிறது. இதில் பட்டதாரர்களின் எண்ணிக்கை 1700 ஆகும். ஒட்டுமொத்தமாக 3,085 ஏக்கர் நிலங்கள் தவறுதலாக கோயில் நிலமாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றின் மீதான தடை நீக்கப்படுகிறது. இதன் மூலம் 3300 பட்டாதாரர்கள் பயன்பெறுவார்கள்" இவ்வாறு இந்து அறநிலையத்துறையின் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
தமிழகஅரசின் இந்த முடிவுக்கு இந்து ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து சமய ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோயில்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு பெரும் துரோகம் இது. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 கோயில்களுக்குச் சொந்தமான, 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள், இந்து சமய அறநிலையத்துறையால் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன; இது இந்து கோயில்களுக்கு தவெக அரசு இழைக்கும் வெட்கக்கேடான துரோகச் செயல்" இவ்வாறு டி.ஆர்.ரமேஷ் கூறியிருந்தார்.
இதேபோல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், "தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலயச் சொத்துகளைச் சூறையாடத் தொடங்கி தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கியத் திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக, ஜூலை 9ஆம் தேதியன்று காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரைக் கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரைக் குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசுத் துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? திருக்கோவில் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நலப் பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்தத் தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்? ஆக, திருக்கோவில்களின் சொத்துகளைக் காப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகிறார் அமைச்சர் ரமேஷ்.
முந்தைய திமுக ஆட்சியில்கூட அரங்கேறாத இந்த இமாலயத் துரோகத்தை, ஆன்மீகப் போர்வையில் வந்துள்ள திரு. ஜோசப் விஜய் அரசு மிகத் துணிச்சலாகச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் விஜய் அவர்கள் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், 1963-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறு இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி, பல தலைமுறைகளாக விவசாயம் செய்யும் பொதுமக்களுக்கு நில உரிமை உறுதி செய்யப்பட்டு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டது. எனவே இனாம் நிலங்கள் அனைத்தும் கோயில்களுக்குச் சொந்தமானவை அல்ல. பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட ரயத்துவாரி பட்டாக்கள் முறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதில் எவ்வித கோயில் நிலங்களும் யாருக்கும் தாரைவார்க்கப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தினார். ஆனால் இந்த விவாகரம் நீதிமன்றத்திற்கு இப்போதுபோயிருக்கிறது.
சேலம் திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சார்பில், கரூரில் 25000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. அப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், முறையாக வழக்கு தாக்கல் செய்தால் உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்கள். இதையடுத்து மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.














Click it and Unblock the Notifications