முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜோதிபாசு
கேள்வி - பதில்
கே: நடிகர் ராஜ்குமார் திடீரென சென்னை வந்து, முதல்வர் கருணாநிதியை சந்தித்து விட்டுப் போய் விட்டது பற்றி தங்கள் கருத்து என்ன?
ப: எப்படியோ, எழுபத்திரெண்டு நாட்கள் கெஞ்சி கூத்தாடி அழைத்து வந்தால் - மூட்டு வலி சிகிச்சைக்காக வந்தேன் - அப்படியே முதல்வரையும்பார்த்தேன் என்கிற வகையில் நடந்து கொண்டு விட்டாரே! முதல்வருக்கு திருப்தி இருக்காது.
கே: தமிழக அரசின் சமத்துவபுரம் மற்றும் நமக்கு நாமே போன்ற திட்டங்கள் குறித்த குறைபாடுகள், துக்ளக் பத்திரிக்கையிலே கூட வந்துள்ளதே -என்று த.மா.கா. தரப்பில் சட்டசபையில் கேட்கப்பட்டதற்கு, அது ஜெயலலிதா பத்திரிக்கை அதில் அப்படித்தான் எழுதுவார்கள் என்று அமைச்சர்ஆற்காடு வீராசாமி பதில் கூறியுள்ளாராமே? இது பற்றி ...?
ப: துக்ளக்கை, ஜெயலலிதா பத்திரிக்கை என்று சொல்லி விட்டாரே! நல்ல உயர்ந்த விஷயம் எதுவாக இருந்தாலும், அது ஜெயலலிதாவுக்கேபோகட்டும் என்று தி.மு.க. நினைக்க ஆரம்பித்து விட்டதா? இதுவல்லவோ பெருந்தன்மை!
கே: விடுதலைப் புலிகளிக்குப் பண உதவி அளிப்பது யார் - என்று விசாரிக்கும்படி 17 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது பற்றி ...?
ப: என்ன சட்டம் - அல்லது என்ன சர்வதேச உடன்படிக்கை - அல்லது என்ன மரபின் கீழ், இந்த நடவடிக்கையை சி.பி.ஐ. எடுத்திருக்கிறது என்பதுஎனக்கு தெரியவில்லை.
கே: பைத்தியக்காரத் தனத்திற்கும், முட்டாள் தனத்திற்கும், என்ன வேறுபாடு ... ?
ப: நாற்பது வயதில் நமது நிலைக்கும், இருபது வயதில் நமது நிலைக்கும், உள்ள வேறுபாடுதான். முட்டாள்தனம் - ஆரம்பம்: பைத்தியக்காரத்தனம்- அனுபவம்.
கே: சட்டத்தை ஜனநாயகம் ஏமாற்றுகிறதா? ஜனநாயகத்தை சட்டம் ஏமாற்றுகிறதா?
ப: சே! பாவம்! அவை இரண்டும் அப்பாவிகள். ஆனால் அரசியல்வாதிகளிடமும் , அரசியல் கட்சிகளிடமும் வேலை செய்வதால் - சில சமயங்களில் இவைஇரண்டுக்குமிடையே போட்டி, பொறாமை வந்து விடுகிறது: இவற்றின் முதலாளிகளான அரசியல்வாதிகளுக்கும், இவைகளிடையே சந்தேகங்களைவிதைக்கிறார்கள்: அப்போது ஒன்றை ஒன்று ஏமாற்ற முனைகின்றன. அவ்வளவுதான்.
கே: கிறிஸ்துவரான சோனியா, ஹிந்துக்களின் புனிதமான கும்பமேளா விழாவில் கலந்து கொள்வது சரியா ...?
ப: எந்த சாத்திரமோ, மரபோ, மற்ற மதத்தினர், கும்பமேளாவில் கலந்து கொள்வதைத் தடுப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது ஒருபுறம்இருக்கட்டும் - புனிதமான கும்பமேளா என்று சொல்கிறீர்களே - அது புனிதத் தன்மையுடனா நடந்தது?
கே: ஜெயலலிதா - வீரமணி நட்பில் விரிசலுக்குக் காரணம்த தாங்கள்தான் என்று சொல்லப்படுவது பற்றி ...?
ப: முதலில் விரிசல் இருக்கிறதா என்று பாருங்கள். யார் காரணம் என்று அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். விரிசலே இல்லாதபோது, காரணம் யார்என்று தேடி அலைவது வீண் வேலை அல்லவா?
கே: பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம், காங்கிரஸ் காலத்தில்தான் ஆரம்பமானது என்று சிலர் கூறுவது பற்றி ...?
ப: உண்மைதான், இன்று நடக்கிற கூத்துக்களில் பலவற்றை, அன்று சிறிய அளவில் ஆரம்பித்து வைத்தது காங்கிரஸ் கட்சிதான். அதில் ஓட்டுக்குப் பணம்என்பதும் ஒன்று.
கே: மகனைப் பெற்றுத் தராததால் மனைவியைக் கொன்றான் கணவன் - என்ற செய்தி பற்றி ...?
ப: இப்படிப்பட்ட ஆசாமிக்கு ஒரு மகன் பிறந்திருந்தால் அவன் எப்படி இருந்திருப்பானோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்! அப்படி ஒரு மகனைபெற்றெடுக்காத அந்தப் பெண்மணி, புண்ணியவதி.
கே: வீரப்பன் விவகாரமும், சிமெண்ட் விலை பிரச்னையில் உள்ள விஷயமும் மர்மமாகவே உள்ளதே?
ப: தெளிவான சந்தேகத்திற்கு இடமளிக்கிற, வெளிப்படையான மர்மங்கள் இவை.












Click it and Unblock the Notifications