வீரப்பனைப் பிடிக்க தீவிர நடவடிக்கை: ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் காவிரி நீர் பிரச்சினைகளுக்கு மத்திய, கர்நாடக அரசுகளின் ஒத்துழைப்புடன்தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டசபையில் ஆளுநர் பாத்திமா பீவி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
காலை 9.50 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தார். அவருக்குப் பிறகு வந்த ஆளுநர் பாத்திமா பீவி,தன்னுடைய உரையுடன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆளுநரின் ஆங்கில உரையைத் தமிழில்மொழிபெயர்த்து வாசித்தார் சபாநாயகர் டாக்டர் கா.காளிமுத்து.
ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்கள்:
- காவிரி நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண கர்நாடக மற்றும் மத்திய அரசுகளுடன் இணைந்து முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
- சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கர்நாடக மற்றும் மத்திய அரசுகளின் ஒத்துழைப்பு கோரப்படும். தீவிரவாதத்தை எந்த நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது. சமூக விரோதிகளும் தீவிரவாதிகளும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவர்.
- கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குமாறு ஆந்திர மாநில அரசைத் தமிழக அரசு வற்புறுத்தும்.
- ரேஷன் பொருட்கள் விலை உயர்வை அதிகரிக்கும் முன் அதுகுறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடப்படும்.
- தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே எதிர்காலத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதை எதிர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தைகளை மூடிவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புதிய வீராணம் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
- தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களும் கலைக்கப்பட்டு விட்டன. அவற்றில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விரைவில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
- சென்னை அருகே திருமுல்லைவாயிலில் சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
- தமிழகத்தின் ஒரு பகுதியில் பெண்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
- ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட, சீர்மரபுப் பிரிவைச் சேர்ந்த மாணவியருக்கு உயர் கல்வி வரை இலவசக் கல்வி அளிக்கப்படும்.
- இதே பிரிவைச் சேர்ந்த மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும்.
- பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 5 லட்சம் பெண்களுக்கு தொழில் முனைவோர் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
- பெண்கள் நலனை மேம்படுத்த மகளிர் மேம்பாட்டு மன்றங்கள் ஊரகப் பகுதிகளில் அமைக்கப்படும்.
- கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் விரிவுபடுத்தப்படும். தமிழகம் முழுவதிலும் தற்போதுள்ள மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
- பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுக்கும்.
- கச்சத்தீவை மீட்டு மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.












Click it and Unblock the Notifications