சைதையில் ஜீப்பில் உட்கார்ந்து ஜெ. பிரச்சாரம்: நடந்து போய் ஓட்டுக் கேட்கும் "தோழர்கள்"
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள சைதாப்பேட்டைதொகுதியில் முதல்வர் ஜெயலலிதா தனது தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 தொகுதிகளிலும் சைதாப்பேட்டை தொகுதிதான் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.திமுகவின் கோட்டையாக வர்ணிக்கப்படும் இங்கு திமுகவின் தீவிர தொண்டனாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் சேர்ந்தராதாரவி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் மா.சுப்ரமணியன், மதிமுக சார்பில் பா.சுப்ரமணியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நந்தகோபால் ஆகியோர்வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடியில் 3 நாள், அச்சிரபாக்கத்தில் 4 நாள் சூறாவளி பிரசாரப் பயணத்திற்குப் பிறகு சென்னை வந்து சேர்ந்து முதல்வர்ஜெயலலிதா, சைதாப்பேட்டையில் தனது பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை துவக்கினார்.
போக் ரோடு குடிசைப் பகுதியிலிருந்து தனது பிரசாரத்தைத் துவக்கிய ஜெயலலிதா அப்துல் ரசாக் தியேட்டர் சந்திப்பில் தனது முதல் நாள்பிரசாரத்தை முடித்தார்.
ஜெயலலிதா சென்ற இடமெல்லாம் கூட்டம் அலை மோதியது. தனியாக ஒரு ஜீப்பில் கூடவே வேட்பாளர் ராதாரவியும் கும்பிட்டவாறே கூடவந்தார். ஜெயலலிதா சில இடங்களில் பேசினார். அவரது பேச்சின் சில துளிகள்:
- சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் புதிதாக வாங்கப்படவுள்ள 3000 பேருந்துகளில் சில மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படும்.
- அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு பஸ்களில் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது (மக்கள் அப்படி சொல்லலையே..!!!). ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் கஷ்டத்துடன் தான் பயணம் செய்தார்கள்.
- சைதாப்பேட்டையில் பல சாலைகள் பெயர்ந்தும், மோசமான நிலையிலும் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் முந்தைய திமுக ஆட்சிதான். அவர்கள் போட்ட சாலைகள்தான் இவை.
- சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினைக்கும் அதிமுக அரசுதான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ரயில் மூலம், மேட்டூரிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வந்து சென்னை நகரில் வினியோகம் செய்தோம்.
மொத்தம் 3 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் ஜெயலலிதாதொடர்ந்து சைதாப்பேட்டையில் பிரசாரம் செய்கிறார்.
ஜீப்பில் அமர்ந்தவாறே ஒருபுறம் ஜெயலலிதா ஓட்டுக் கேட்டு வருகிறார்.
கம்யூனிஸ்ட் பிரச்சாரம்:
மறுபுறம், சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் நந்தகோபாலுக்காக அக் கட்சியினர் தெருத் தெருவாகநடந்து போய் ஓட்டுக் கேட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தெருவிலும் அவர்கள் சென்று ஓட்டுக் கேட்டபு வருகின்றனர். வேட்பாளர் நந்தகோபாலும் வீடு வீடாக நடந்து சென்று ஓட்டுக்கேட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications