Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனிதர்கள்- அப்துல்கலாம்

Subscribe to Oneindia Tamil

(சில வாரங்களுக்கு முன் நமது அலைகள் இதழில் வெளியியான கட்டுரை)

- மா. கார்த்திகேயன்

""கனவு காணுங்கள். எதையுமே சின்னதாக நினைத்துப் பார்க்காதீர்கள். உங்கள் இலக்கை எப்போதும் மிகப்பிரமாண்டமானதாகவே வைத்திருங்கள். அப்போதுதான் அதை அடைய வேண்டும் என்ற வெறி உங்களை வாட்டிஎடுக்கும். அது தான் வெற்றிக்கு வழி.

தனது விங்க்ஸ் ஆப் பயர் (தமிழில் அக்கினிச் சிறகுகள்) புத்தகத்தில் அப்துல் கலாம் மீண்டும் மீண்டும்சொல்லியிருக்கும் வாசகம் இது தான்.

இந்தியாவின் மிசைல் மேன் என்று வர்ணிக்கப்படும் இந்த மனிதர் இன்சாட் செயற்கோள்கள் வடிவமைப்பில்இருந்து போக்ரான் அணு குண்டு சோதனை வரை அனைத்திலும் நாட்டுக்கு உதவியிருக்கிறார்.

அக்னி, பிருத்வி, ஆகாஷ், நாக், திரிசூல், பிரம்மோஸ், சூர்யா (தயாரிப்பில் உள்ளது) என ஏவுகணைகளைஅடுத்தடுத்து வடிவமைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தவர்.

விமானியில்லாமல் இயங்கும் நிஷாந்த் விமானம் தயாரிக்கப்பட்டது இவரது மேற்பார்வையில் தான். அவாக்ஸ் ரகரேடார் விமான சோதனை நடந்தது இவரது தலைமையில் தான். இந்தியா முதன்முதலில் வடிவமைத்த அர்ஜூன்டாங்கிகளை வடிவமைத்தது இவர் தான்.

இந்தியா வடிவமைத்து சோதனையிட்டு வரும் போர் விமானமான எல்.சி.ஏ. தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்கலாம்.

இந்தியா ஏவிய முதல் ராக்கெட்டான எஸ்.எல்.வி. தயாரிப்பிலும் இவருக்கு பங்குண்டு.

அமெரிக்காவின் செயற்கைக் கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அணு குண்டு சோதனையைை இவர்தலைமை தாங்கி நடத்திக் காட்டியபோது உலகம் இவரை ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் பார்த்தது. அமெரிக்கசெயற்கைக் கோள்களின் தடம், அவற்றின் படமெடுக்கும் திறன், அவை இந்தியா மீது பறக்கும் நிமிடங்கள் எனஅனைத்துத் தகவல்களையும் கைவசம் வைத்திருந்த அப்துல் கலாம் மிகுந்த மதி நுட்பத்துடன் செயற்கைக்கோள்களை தோற்கடித்தார்.

தினமும் செயற்கைக் கோள்கள் திசை மாறும் சில மணி நேரங்களில் மட்டுமே போக்ரான் அணு ஆயுத சோதனைத்தளத்தில் ராணுவத்தினர் உதவியுடன் குண்டுகளை பூமிக்கடியில் புதைத்தார். அந்த சில மணி நேரங்களில் மட்டுமே,பெரும்பாலும் இரவுகளில், ராணுவ லாரிகள் அணு ஆயுதங்களையும் விஞ்ஞானிகயுைம் போக்ரானுக்குக் கொண்டுவந்தன.

அமெரிக்க செயற்கைக் கோள்கள் போக்ரான் மீது பறக்கும்போது அங்கே ஈ, காக்கா இருக்காது. லாரிகள் முதல்ஸ்பானர் வரை எல்லாவற்றையும் அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தச் செய்தார் கலாம். இதன் மூலம் சி.ஐ.ஏவின்மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக இருந்தார் கலாம்.

நாசாவில் பயிற்சி எடுத்துக் கொண்டு வெறியுடன் இந்தியா திரும்பிய இவர் நடத்திக் காட்டிய வெற்றிகள், தொடர்கதைகள்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் டி.ஆர்.டி.ஓ. என்ற அமைப்பின் கீழ் இந்தியாவின் மிகச் சிறந்த மூளைகளைஒருங்கிணைத்த பெருமை இவரையே சேரும்.

பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்ற உயர் பதவிகளில் இருந்த அபதுல்கலாம் சமீபத்தில் தானே விரும்ப ஓய்வு பெற்றார். இவருடன் இருந்து அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாகநடத்திக் காட்டிய இன்னொரு தமிழரான ஆர். சிதம்பரத்திடம் அந்தப் பொறுப்புக்களைக் கொடுத்துவிட்டுவெளிறிேனார்.

இதன் பின்னர் அரசின் ஓய்வூதியத்தை வாங்கிக் கொண்டு ஈசி சேரில் படுத்திருக்கவில்லை. ஒரு லட்சம் பள்ளிக்குழந்தைகளை நேரில் சந்திக்கப் போகிறேன். அவர்களைக் கொண்டு இந்த தேசத்தின் தலையெழுத்தை மாற்றுவேன்என்று கூறிக் கொண்டு தனது இந்தப் பயணத்தை தான் பிறந்த தமிழக மண்ணில் இருந்தே ஆரம்பித்தார் கலாம்.இன்று வரை பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு மாணவி இவரிடம், ""நம் நாட்டில்தான் ஊழல் தலை விரித்தாடுகிறதே. நம் இந்தியாவை எப்படிஉலகிலேயே முதல் நாடாக மாற்றப் போகிறீர்கள்"" என்று கேட்டு மிரள வைத்தாள். கேள்வி கேளுங்கள். அது தான்மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பதிலளித்தார் அப்துல் கலாம்.

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஒரு ஏழை மீனவரின் மகனாக அக்டோபர் 15, 1931ல் பிறந்த இவரதுமுழுப் பெயர் அவுல் பக்கிர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம். அவரது தந்தை ஜெய்னுல் அப்தீன் சாதாரண படகோட்டி.அவரிடம் செல்வமும் இல்லை, படிப்பும் இல்லை. இதனால் அப்துல் கலாம் தனது படிப்புக்காக தானே பணம் தேடிக் கொள்ளவேண்டி இருந்தது.

இதனால் காலையில் பேப்பர் போடும் வேலையில் ஈடுபட்டார் கலாம். ராமநாதபுரத்தில் இருந்த கிறிஸ்தவப் பள்ளியானஸ்வார்ட்ஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார் கலாம். பள்ளிப் படிப்பை ராமநாதபுரத்தில் முடித்த கலாம், ஸ்காலர்ஷிப்பில் கல்லூரிப்படிப்புக்காக திருச்சி போனார். அங்குள்ள பிரபல செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்தார்.

மேல் படிப்புக்காக சென்னை செல்ல வேண்டியதிருந்தது. ஆனால், வீட்டில் வசதியில்லாததால் படிப்பு தடைபடும் நிலை.ஆனாலும் கலாமின் படிப்பார்வத்தைப் பார்த்த அவரது சகோதரி, தனது நகைகளை விற்று பணமாக்கி கலாமின் கையில் கொடுத்துசென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அதைக் கொண்டு புகழ்பெற்ற "மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி"யில் (எம்.ஐ.டி.) சேர்ந்து"ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங்" படித்து, ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் கலாம்.

படிப்பை முடித்த கலாம் இந்தியப் பாதுகாப்பு ஆய்வுத்துறையில் (டி.ஆர்.டி.ஓ.) 1958ல் காலடி எடுத்து வைத்தகலாம், பின்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான "இஸ்ரோ"வில் சேர்ந்து எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம்ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியபோது, இந்திய செயற்கைக் கோள் வரலாற்றில் பெரும்திருப்பு முனை ஏற்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் டி.ஆர்.டி.ஓவுக்கு அவர் திரும்பிய பிறகுதான், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல புதியஅதிநவீன ஏவுகணைகள், பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்தன.

அக்னி, நாக், பிருத்வி, ஆகாஷ், திரிசூல் என்று கலாம் ஏவுகணைகளைத் தயாரித்துக் குவிக்க, ஏவுகணைத்தயாரிப்பில் வல்லமை மிக்க அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் கூட அதிர்ந்தன.

இந்த ஏவுகணைகளைத் தொடர்ந்து, அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த அக்னி-2 ஏவுகணையைக்வெளிக் கொண்டு வந்ததுதான் கலாமின் "லேட்டஸ்ட் கைவண்ணம்".

"வளரும் நாடுகள்" என்ற பட்டியலிலிருந்து இந்தியாவைக் கடாசி விட்டு, அதை "வளர்ந்த நாடுகள்" பட்டியலில்சேர்ப்பதே தன்னுடைய முக்கியக் குறிக்கோள் என்று கூறும் கலாம், இது நமது இளைஞர் பட்டாளத்தால் தான்சாத்தியம். இதற்காகத் தான் பள்ளிகளிலேயே போய் மாணவ-மாணவிகளை சந்தித்து வருகிறேன் என்திறார்.

இதுவரை 30,000 பேரைச் சந்தித்துள்ள கலாம் இந்தியாவின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி. மாணவர்களின்மன நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்கிறார்.

தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு மொழி ஒரு தடையாகவே அம்மாணவர்களிடம் இல்லை என்கிறார்கலாம். மிகவும் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை அம்மாணவர்கள் வெளியிடுவதைக் கண்டு மிகவும் மகிழ்ந்துபோயுள்ளார்.

குரான், பகவத் கீதை இரண்டையும் சமமமாய் பாவித்துப் படிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வீணை வாசிப்பதில்மிகுந்த இன்ட்ரஸ்ட் உள்ளவர். நேரம் கிடைத்தால் வீணையை எடுத்து வைத்துக் கொண்டு தியாகராஜர்கீர்த்தனைகளை வாசிக்க ஆரம்பித்துவிடுவார்.

தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார். திருக்குறள் தான் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் நூல் என்கிறார்.

நாட்டுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இந்த மனிதர் இன்றும் பிரம்மச்சாரி தான். இசட் பிரிவுபாதுகாப்புடன் ஒரு ரூம் வீட்டில் வசித்து வரும் எளிமைவாதி.

சைவ உணவை மட்டுமே உண்பவர். நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பட்டம் பெற்றவர்.

ஆனால், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் மிகத் தீவிரமானவர். இவரது தம்பிமகனுக்கு வேலைக்கு சிபாரிசு செய்யச் சொன்னபோது அவனை ஒழுங்கா படிக்கச் சொல் என்று கூறிவிட்டுப்போய்விட்டாராம்.

விமானியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த கலாம் இந்திய விமானப் படையில் இன்டர்வியூவில் தோற்றவர்.இதனால் மனம் வருந்திய கலாம் ரிஷிகேஷ் சென்று கங்கையில் குளித்துவிட்டு சுவாமி சிவானந்தா என்பவரைச்சந்தித்து தனது தோல்வியைக் கூறி மனம் கலங்கியிருக்கிறார்.

நீ விமானியாக வேண்டும் என்று உனது விதியில் இல்லை, ஆனால், உன் விதி உன்னை வேறொரு உயரத்துக்குக்கொண்டு செல்லும். தோல்வியை மறந்து விதி சொல்லும் பாதையில் செல். பிறவிக்கான உண்மையானகாரணத்தைத் தேடு. இறைவனிடம் சரணடை என்று உபதேசித்தாராம்.

அவர் சொன்னதைச் செய்தார் கலாம். இன்று விமானங்கள் எட்ட முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

ஏவுகணைகளுக்காக இவர் தலைமையிலான நிபுணர்கள் Re-inforced carbon material கொண்ட ஒரு பொருளைத்தயாரித்திருந்த நேரம் அது. அப்போது ஊனமுற்ற குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்குச் செல்கிறார் கலாம்.அங்கு ஒரு சிறுமி வைத்து நடக்கும் இரும்பு ஊன்று கோலை தூக்கிப் பார்க்கிறார். 3 கிலோ எடை. அதை தூக்கமுடியாமல் அந்த சிறுமி சிரமப்பட்டு நடக்கிறாள்.

இதையடுத்து மருத்துவமனையின் தலைமை டாக்டரிடம் தான் தயாரித்துள்ள கார்பன் பொருள் குறித்து கூறுகிறார்.அதைக் கொண்டு ஊன்றுகோல் செய்தால் 500 கிராம தான் இருக்கும். அதே நேரத்தில் இரும்பை விடவலிமையானது என்கிறார். தயவுசெய்து அந்த உதவியை செய்யுங்கள் என்று டாக்டர் கூற குழந்தைகளின்ஊன்றுகோல்களுக்கான அளவுகள் எடுத்துக் கொண்டு தனது டி.ஆர்.டி.ஓ. லேபுக்குத் திரும்புகிறார்.ஊன்றுகோல்கள் செய்ய ஆணையிடுகிறார்.

அந்த வெயிட்லெஸ் ஊன்றுகோல்களுடன் மருத்துவமனைக்குச் சென்று ஊனமுற்ற குழந்தைகளுக்குப்பொறுத்துகிறார். அக் குழந்தைகளுக்கு கால் முளைத்துவிட்ட மாதிரி மகிழ்ச்சி. சுமையே இல்லாத ஊன்றுகோலைவைத்து நடந்து மகிழ்ச்சியில் அந்தக் குழந்தைகள் கண்கள் கலங்குகின்றன.

கலாமுடன் சேர்ந்து டாக்டர்களும் கண் கலங்குகின்றனர்.

உங்களுடைய வாழ்வின் மிகப் பெரிய சாதனை எது? ஏவுகணைகளா? ராக்கெட்டா? செயற்கைக் கோள்களா?டாங்கிகளா? விமானமா? என்று கேட்ட த வீக் இதழின் நிருபரிடம் அப்துல் கலாம் கூறிய பதில்,

வெயிட்லெஸ் ஊன்றுகோல்கள்

ஜனாதிபதியாகிறார் கலாம்: அலைகள் முன்பே சொன்னது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+