கண்ணப்பனுக்கு வாஜ்பாய் அவசர அழைப்பு
சென்னை:
விடுதலைப்புலிகளை ஆதரித்து தொடர்ந்து பேசி வந்ததாகச் சர்ச்சையில் சிக்கியுள்ள மதிமுக அமைச்சர் கண்ணப்பனுக்கு பிரதமர் வாஜ்பாய் அவசர அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவர் டெல்லி விரைந்துள்ளார்.
தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாகக் கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருவதால் அவரை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக கண்ணப்பனிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து துணைப் பிரதமர் அத்வானியும் மற்றொரு மதிமுக அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரனிடம் தொலைபேசி மூலம் பேசி விளக்கம் கேட்டார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கண்ணப்பன், புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று கூறினார்.
இந்தத் தகவலை தமிழக உளவுத்துறையினர் கண்காணித்து ஜெயலலிதாவிடம் அறிவிக்கவே அது உடனடியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டு வாஜ்பாயின் நேரடி கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து கண்ணப்பனை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட வாஜ்பாய் இது தொடர்பாக விளக்கம் தரும்படி கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து வாஜ்பாயை நேரில் சந்தித்து விளக்கம் தருவதற்காக கண்ணப்பன் நேற்றே டெல்லிக்கு விரைந்தார்.












Click it and Unblock the Notifications