காவிரி வழக்கில் கர்நாடகம், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்ட கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகம் அவமதித்தது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இந்த நோட்டீசை நீதிமன்றம் இன்று அனுப்பியது.

காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தினமும் 1.25 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி கூடிய காவிரி நதி நீர் ஆணையம், தமிழகத்திற்கு தினமும் 0.8 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் இந்த இரண்டு உத்தரவுகளையுமே செயல்படுத்த கர்நாடக அரசு தவறி விட்டது. விவசாயியின் சாவைக் காரணம் காட்டியும் அணைகளில் நீர் இல்லை என்று கூறியும் இந்த உத்தரவுகளை கர்நாடகம் மதிக்கத் தவறியது.

இதையடுத்து கர்நாடக அரசு மீது கடந்த 20ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு.

இரண்டு உத்தரவுகளையும் செயல்படுத்தியிருந்தால் தமிழகத்திற்கு இதுவரை குறைந்தது 10 டி.எம்.சி. நீராவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் நான்கு டி.எம்.சி. நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இம்மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். கிர்பால், நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி ஹரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

தமிழக அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தன் வாதத்தில்,

அரசியல் ஆதாயங்களுக்காகவே கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் காவிரியில் நீர் திறந்து விடுவதை நிறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் 1.25 டி.எம்.சி. வீதம் 6.25 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 2.3 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 8ம் தேதி காவிரி நதி நீர் ஆணையம் அளித்த உத்தரவின் படி தினமும் 0.8 டி.எம்.சி. வீதம் அடுத்த ஒரு வார காலத்திற்குள் 5.6 டி.எம்.சி. நீர் மேட்டூருக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் திறந்து விட்டதோ 1.925 டி.எம்.சி. நீர் மட்டும் தான்.

இந்தக் காலத்தில் வந்து சேர வேண்டிய நீரில் இன்னும் 7.5 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு இதுவரை திறந்து விடவில்லை.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவையும் அவமதித்து விட்டது உறுதியாகிவிட்டது.

இந்திய ஜனநாயகத்தின் வேரையே பிடுங்கிப் போட்டது போல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு அவமதித்துள்ளது மிகவும் அபாயகரமானது.

ஏற்கனவே குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள தமிழக காவிரி டெல்டா விவசாயிகள், கர்நாடக அரசின் இந்த மெத்தனமான போக்கினால் சம்பா சாகுபடியும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று வாதாடினார் வேணுகோபால்.

வேணுகோபாலை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் அனில் திவான் வாதாடுகையில்,

தமிழக விவசாயிகளின் நிலையையோ கர்நாடக விவசாயிகளின் நிலையையோ தனித் தனியாகப் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளின் நிலை என்ன என்பதைப் பற்றித் தான் உச்ச நீதிமன்றம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

விரைவில் தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்திற்கு மட்டும் தான் அதன் முழுப் பலன் கிடைக்குமே ஒழிய கர்நாடகத்திற்கு அதனால் துளிக் கூட லாபமில்லை.

வடகிழக்குப் பருவமழையை வைத்துக் கொண்டு தமிழக விவசாயிகள் வரும் நவம்பர் மாதம் வரை கூட சம்பா சாகுபடியை நடத்தலாம்.

கர்நாடக அணைகளிலிருந்து இன்னும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால், அம்மாநிலத்தில் உள்ள 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீர் கிடைக்காமல் அழிந்து நாசமாக வாய்ப்புள்ளது என்று வாதாடினார் அனில் திவான்.

இரு தரப்பு விவாதங்களையும் தொடர்ந்து, தமிழகத்தின் வழக்கு தொடர்பாக 30ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில் உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

மேலும் கடந்த 4ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட்டுள்ள, திறக்கப் போகும் நீரின் அளவு குறித்து 27ம் தேதிக்குள் முழு விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இவ்வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் கிருஷ்ணா தவிர இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல், தலைமைச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர், தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே தினமும் 0.8 டி.எம்.சி. நீரைத் திறந்து விட்டால் கர்நாடக அணைகளில் உள்ள நீர் அனைத்தும் 45 நாட்களுக்குள் காலியாகிவிடும் என்று கர்நாடக அரசு தனியாக ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டவுடன் வினாடிக்கு 10,000 கன அடிவீதம் வந்து கொண்டிருந்த நீரின் அளவு தற்போது வினாடிக்கு 3,820 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின்நீர் மட்டம் தற்போது 50.06 அடியாக உள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+