"எங்களை நடுத் தெருவில் தவிக்க விடுவதா?": அரசு ஊழியர்கள் குமுறல்
சென்னன:
உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற போர்வையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனம் கடுமையானகண்டம் தெரிவித்தது.
இந்த அரசு ஊழியர் சம்மேளனத்தின் 11வது தேசிய மாநாடு இன்று சென்னையில் தொடங்கியது. சம்மேளனத்தின்தலைவர் கார்னிக் பேசுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியது.
ஆனால் என்ன நடக்கிறது? ஆட்குறைப்பு நடவடிக்கைகள்தான் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன.
இது போதாதென்று வி.ஆர்.எஸ். திட்டத்தின் மூலமாகவும் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.
அரசு நிறுவனங்களின் அடிப்படை வசதிகளைச் சரியாகச் செய்து கொடுக்காமல், அவற்றைத் தனியார்களிடம்ஒப்படைப்பதையே குறிக்கோளாக மத்திய அரசு கொண்டிருக்கிறது என்றார் கார்னிக்.
சர்வதேச வணிக சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் மஹேந்திரா பேசுகையில்,
வளர்ந்து வரும் நாடுகளில் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் அரசு ஊழியர்களுக்குத்தான்வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன.
மத்திய, மாநில அரசுகளின் புதிய திட்டங்களினால் அரசு ஊழியர்கள் நடுத் தெருவுக்குத்தான் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஒரு பாதுகாப்பின்மையை அரசு ஊழியர்கள் எப்போதுமே சந்தித்ததில்லை.
அறிவியல், தொழில்நுட்பத் துறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் "கடத்திக்" கொண்டு போய் விட்டனஎன்று பேசினார் மஹேந்திரா.
நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தொடக்கவுரையில் பேசிய அனைவருமே மத்திய, மாநிலஅரசுகளின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்துப் பேசினர்.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்று கூறிக் கொண்டு லட்சக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டுத்துரத்துவதைத்தான் மத்திய, மாநில அரசுகள் லட்சியமாகக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஒன்று கூடிப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள்பேசினர்.
குஜராத்தில் நடைபெற்ற மத வன்முறைகள் குறித்தும், காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவது குறித்தும் அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து சுமார் 2,000 பேர் கலந்து கொள்கின்றனர். இலங்கை,நேபாளம், பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று தொடக்கவுரை ஆற்றினர்.
-->


