காளிமுத்து மனைவிக்கு அரசு நிலம்: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் "தள்ளு முள்ளு"
மதுரை:
சபாநாயகர் காளிமுத்துவின் மனைவி மனோகரிக்கு அரசு நிலத்தை மாற்றித் தரும் தீர்மானத்தை மேயர் செ.ராமச்சந்திரன் ஒத்திவைத்ததைத் தொடர்ந்து மதுரை மாநராட்சிக் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
மதுரை பைபாஸ் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆறு சென்ட் நிலத்தை மனோகரி அனுபவித்துவருகிறார்.
இந்த நிலத்தை மனோகரியின் பெயருக்கே மாற்றித் தர தடையில்லா சான்றிதழ் அளிக்கக் கோரி மாநகராட்சியில்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் திமுக, காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.அதிமுக கவுன்சிலர்களோ இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து இரு தரப்பினரும் சத்தம் போட்டு மாறி மாறிப் பேசிக் கொண்டதால் கடும் அமளி ஏற்பட்டது. பெரும்கூச்சல், குழப்பம் நிலவியதால் அந்தத் தீர்மானத்தை மேயர் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
மாநகராட்சிக் கூட்டம் முடிந்த பின்னர் மேயர் வெளியே வந்து தன் காரில் ஏறியபோது, அவரை அதிமுகஉறுப்பினர்கள் சூழ்ந்து நின்று கொண்டு கோஷம் போட்டனர்.
காரைப் புறப்படவிடாமலும் தடுத்து காருக்கு முன்பாகப் படுத்துக் கொண்டும், உருண்டு கொண்டும் அதிமுகவினர்போராட்டம் நடத்தினர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார், அதிமுக உறுப்பினர்களைத் தடுக்கவோஅப்புறப்படுத்தவோ முயற்சிக்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் மேயர் ராமச்சந்திரனே காரை விட்டு இறங்கி வந்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டார். திமுக, அதிமுக உறுப்பினர்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதால் அங்கு பெரும் "தள்ளுமுள்ளு"ஏற்பட்டது.
பின்னர் திமுகவினரே ஒரு வழியாக அதிமுக கவுன்சிலர்களை அப்புறப்படுத்தி, மேயரின் கார் செல்வதற்கு வழிஅமைத்துக் கொடுத்தனர்.
-->


