தமிழகத்தில் அனைத்து லாட்டரிகளையும் விற்கத் தடை: உடனடி அமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அரசு நடத்தும் லாட்டரி உள்பட அனைத்து வகையான லாட்டரிச் சீட்டுகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இந்தத் தடைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சில லாட்டரி ஏஜென்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை இன்று தொடர்ந்தனர். ஆனால் மக்களின் நன்மைக்காகத்தான் லாட்டரிச் சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது.

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிக் கொண்டு லாட்டரிச் சீட்டுக்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் மக்கள் எவ்வளவோ பேர் இன்னும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

இந்த முறை எப்படியும் பரிசு விழுந்து விடும் என்ற நம்பிக்கையில் (?) தினமும் லாட்டரிச் சீட்டுக்களை வாங்கிக் கொண்டிருப்பவர்களும் உள்ளனர்.

இன்னும் சிலர் தாங்கள் வாங்கும் சம்பளத்தின் பெரும்பாலான பணத்தை லாட்டரிச் சீட்டுக்கள் வாங்குவதற்கே செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்த கதைகளும் உண்டு.

இப்படி ஏமாந்து கொண்டிருப்பவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டே பணம் குவித்த லாட்டரிக் கடைக்காரர்களும் நம் தமிழகத்தில் உண்டு.

சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பல மாநில லாட்டரிச் சீட்டுக்களும் தமிழகத்தில் தினசரிப் புழக்கத்தில் உள்ளன.

பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பெரும்பாலான இடங்களிலும் கூட லாட்டரிச் சீட்டுக்களை கூவிக் கூவி விற்பதும் தமிழகத்தில் அன்றாட காட்சிகளில் ஒன்று.

சிறுவர்கள், சிறுமிகள், வயோதிகர்கள் மட்டுமில்லாமல் கண்களை இழந்தவர்கள் கூட லாட்டரி விற்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

இதுபோன்ற லாட்டரிகளைத் தவிர கடந்த சில ஆண்டுகளாக உடனடி லாட்டரிகளும், ஒரு நம்பர் லாட்டரிகளும் கூட விற்பனையில் தூள் கிளப்பிக் கொண்டிருந்தன.

சமீபத்தில் ஆன்லைன் லாட்டரிகளும் கூட வந்து இன்டர்நெட் மூலமாகச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தனிக் கதை.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் அனைத்து வகையான லாட்டரிச் சீட்டுகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இதற்கான திடீர் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள விசேஷ "கெசட்" அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

லாட்டரிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1998ன் (மத்திய சட்டம் 1998ன் 17வது பிரிவு) 5வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, தமிழகத்தில் தமிழக அரசே நடத்தும் லாட்டரிகள் உள்பட அனைத்து வகையான லாட்டரிச் சீட்டுக்களின் விற்பனைக்கும் தடை விதித்து மாநில ஆளுநர் ராமமோகன் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆன்லைன் லாட்டரிகளுக்கும் தமிழகத்தில் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தடையால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.22 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்படும் என்றாலும் கூட லட்சக்கணக்கான ஏழை மக்கள் லாட்டரிச் சீட்டுக்களால் படும் அவதியைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், லாட்டரி விற்பனையாளர்கள் போலி லாட்டரிச் சீட்டுக்களை விற்று ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டி வருவதால், அவர்களை அதிலிருந்து மீட்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தடையால் தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் பல லாட்டரிக் கடை அதிபர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மைதான்.

ஆனாலும் லாட்டரிச் சீட்டையே நம்பி அதற்காகப் பணத்தைக் கொட்டி வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு இந்தத் தடை ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியே.

இடைக்கால தடை விதிக்க கோர்ட் மறுப்பு:

இதற்கிடையே லாட்டரி விற்பனையைத் தடை செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள திடீர் உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த லாட்டரிச் சீட்டு ஏஜென்டுகள் அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தத் தடையை எதிர்த்து ஐந்து லாட்டரி ஏஜென்டுகள் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான முதல் பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ஏஜென்டுகள் சார்பாக வழக்கறிஞர்களான நளினி சிதம்பரமும், ஆர். காந்தியும் வாதாடினர்.

பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏராளமான லாட்டரி டிக்கெட்டுகளை ஏஜென்டுகள் வாங்கியுள்ளனர். இவ்வாறு திடீரென்று லாட்டரி விற்பனைக்குத் தடை விதித்தால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று இரு வழக்கறிஞர்களும் வாதாடினர்.

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர், முழுக்க முழுக்க பொதுமக்களின் நன்மை கருதியே இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று வாதாடினார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியம் ஆகியோர் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தனர். நீதிபதிகள் மேலும் கூறுகையில்,

விற்கப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களுக்கான குலுக்கல்களை நடத்தக் கூடாது.

மேலும் இன்னும் முடிவுகள் தெரியாமல் நேற்று வரை விற்பனை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

மறு உத்தரவு வரும் வரை எந்த விதமான லாட்டரிச் சீட்டுக்களும் விற்பனை செய்யப்படக் கூடாது. இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 14ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் கூறினர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+