கருணாநிதியை சந்தித்தார் வாஜ்பாயின் தூதர்: திமுக- பா.ஜ.க.பனிமூட்டம் விலகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பா.ஜ.க.- தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கருணாநிதியுடன் பிரதமர் வாஜ்பாயின் தூதர் விஜய்கோயல்நேரில் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து பா.ஜ.கவால் அவமதிக்கப்பட்டு வரும் திமுக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. மதிமுக, பா.ம.க. சகிதமாக மத்திய அரசுக்கூட்டணியில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளது.

இதுவரை கருணாநிதியை தொடர்ந்து புறக்கணித்து வந்த பா.ஜ.க. இப்போது இறங்கி வந்துள்ளது. திமுக, மதிமுக, பா.ம.கவுக்குகூட்டாக 20 எம்.பிக்கள் உள்ளனர். அதிமுகவிடம் இத்தனை எம்.பிக்கள் இல்லை.

இதுவரை திமுக மட்டும் தான் வெளியேறும் அதை அதிமுகவை வைத்து சரி செய்துவிடலாம் என்று பா.ஜ.க. கணக்குப்போட்டிருந்தது. ஆனால், சமீபகாலமாக வைகோவுடன் நெருக்கமாகிவிட்ட கருணாநிதி கூடவே மதிமுகவையும் பா.ம.கவையும்இழுத்துக் கொண்டு போய்விட்டால் சிக்கலாகிவிடும் என்பதை பா.ஜ.க. உணர ஆரம்பித்துள்ளது.

திருநாவுக்கரசருடன் வந்தார்:

இதையடுத்து கருணாநிதியை சமாதானப்படுத்த பிரதமர் அலுவலக சிறப்பு அமைச்சரான விஜய்கோயலை வாஜ்பாய் நேற்றுஅனுப்பி வைத்தார். அவரும் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்துப்பேசினர்.

அதிமுகவுக்கு நெருக்கமாக உள்ள பா.ஜ.கவின் மாநிலத் தலைவர்கள் யாரும் உடன் வரவில்லை. அவர்களை ஒதுக்கிவிட்டேவிஜய்கோயலை வாஜ்பாய் நேரடியாக கருணாநிதியிடம் அனுப்பியதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் கருணாநிதிக்கு எப்போதும்நெருக்கமான திருநாவுக்கரசரை மட்டும் கோயல் உடன் அழைத்துச் சென்றார்.

சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது மாநில பா.ஜ.க. தலைவர்களும் மத்திய பா.ஜ.கவும்திமுகவைத் திட்டமிட்டு அவமதிப்பு வருவதை கருணாநிதி நேரடியாகவே சுட்டிக் காட்டியதாகத் தெரிகிறது.

வேண்டாம் என்று நினைத்தால் திமுகவை பா.ஜ.க. வெட்டிவிடலாம் என்றும் இதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைஎன்றும் நேரடியாகவே கருணாநிதி கூற அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என விஜய்கோயல் விளக்கம் தந்தார்.

காரசாரமான இச் சந்திப்புக்குப் பின்னும் கருணாநிதி முழு அளவில் திருப்தி அடையவில்லை என்பதை அவரது பேட்டியே சுட்டிக்காட்டியது.

அதிமுகவுடன் நெருங்க மாட்டோம்:

சந்திப்புக்குப் பின் விஜய்கோயல் நிருபர்களிடம் பேசுகையில்,

கருணாநிதியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். மாறனின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்து வருமாறு பிரதமர்வாஜ்பாய் உத்தரவிட்டார். அதற்காகவே வந்தேன். மாறனை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அமைச்சராக்குவது என்ற பேச்சுக்கேஇடமில்லை. அவர் மீண்டும் பதவியேற்கும் வரை அந்தப் பதவியில் யாரையும் நியமிக்க மாட்டோம்.

திமுகவுக்கும் எங்களுக்கும் இடையே உறவு நன்றாகவே உள்ளது. திமுக மீது நாங்கள் நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.எங்கள் கூட்டணியிலேயே அதிக நம்பிக்கைக்கு உரிய கட்சியாகத் தான் திமுகவை நினைக்கிறோம்.

மாநில அளவில் சிறு சிறு பிரச்சனைகள் உள்ளன. அவை இனியும் பெரிதாகாமல் சரி செய்யப்படும்.

மத்திய அரசின் தனியார்மயமாக்கலை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதத்தில் பார்க்கின்றன. திமுக வேறு மாதிரி பார்க்கிறது.ஆனால், இதனால் கூட்டணியை விட்டு திமுக வெளியேறாது. அவர்களது கருத்தைத் தெரிவித்தார்கள். அவ்வளவு தான்.

சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து நான் கருணாநிதியிடம் ஏதும் பேசவில்லை. தமிழகத்தில் திமுகவைத் தவிர வேறு எந்தக்கட்சியிடமும் நாங்கள் நெருங்க மாட்டோம் என்றார் விஜய்கோயல்.

கருணாநிதி தொடர்ந்து பிடிவாதம்:

பின்னர் நிருபர்களைச் சந்தித்த கருணாநிதி கூறுகையில்,

என்னைச் சந்தித்த மத்திய அமைச்சர் கோயலிடம் பா.ஜ.க. குறித்து புகார் ஏதும் கூறவில்லை.

அதே நேரத்தில் தனியார்மயமாக்கல் குறித்து நான் சொன்ன கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்பதைத்தெளிவாக்கிவிட்டோம். மாறனும் தனியார்மயமாக்கலை எப்போது ஆதரித்தார், எப்போது எதிர்த்தார் என்று விளக்கிவிட்டேன்.லாபத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. அதில் எனக்கும் மாறனுக்கும்உடன்பாடு இல்லை.

சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து நானும் அவரிடம் பேசவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை. என்ன செய்யவேண்டும் என்று அவரும் கேட்கவில்லை. என்ன செய்யப் போகிறோம் என்பதை நாங்களும் சொல்லவில்லை.

அதே போல மாறனின் இலாகா குறித்தோ, பதவியை வேறு யாருக்கும் தருவது குறித்தோ நான் பேசவில்லை. பேசவும் மாட்டேன்.இலாகா குறித்து எப்போதும் பேசுவதும் இல்லை. பேசப் போவதும் இல்லை என்றார் கருணாநிதி.

பனிமூட்டம்:

முன்னதாக விஜய்கோயல் வந்த விமானம் பனிமூட்டம் காரணமாக 4 மணி நேரம் தாமதமாகவே சென்னை வந்தது.கருணாநிதியை இவர் சந்தித்தால் திமுக- பா.ஜ.க. இடையே உள்ள பனிமூட்டம் விலகிவிடுமா என்பது சந்தேகம் தான்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+